தியாக வீரத்திருமகள் குயிலி
சுதந்திரத்திற்காக போரிட்ட மங்கையரில் ஒருவர் தான் குயிலி. இவர் வேலுநாச் சியார் ஆட்சி காலத்தில் வாழ்ந்தவர். பெண்கள் படைப்பிரிவான உடையாள் காளி பிரிவில் இருந்த குயிலி தன் நாட்டின் மீது பெரும் பற்றும், வேலுநாச்சியார் மீதும் பெரும் மதிப்பும் வைத்திருந்தார்.
வாரிசில்லா சொத்துக்களை தனதுடைமை யாக்கிக்கொண்டு, தங்களது எல்லையை விரிவுபடுத்தி வந்த வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து, தனது நாடான சிவகங்கையை மீட்க , வேலுநாச்சியார் 1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் திண்டுக்கல்லில் இருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டார்.
இதற்கிடையில், ஒரு நாள் விருப்பாட்சியில் தங்கியிருந்தார். அந்த சமயத்தில், அங்கு வந்த வெற்றிவேலு வாத்தியார் என்பவர் “குயிலிடம் படிக்கத் தெரியுமா” என்று கேட்டார். தெரியாது என்று குயிலி கூறவும், அவரை அழைத்து இந்த கடிதத்தை சிவகங்கையில் சேர்க்கும் படி கட்டளையிட்டார். வெற்றிவேலு வாத்தியார் மீது சந்தேகம் அடைந்து, அந்த கடிதத்தை பிரித்துப்பார்த்த குயிலி அதிர்ச்சி அடைந்தார். அக்கடிதத்தில் வேலுநாச்சியாரின் போர்த் திட்டங்களை ஆங்கிலேயருக்கு தெரியப்படுத்தி இருந்தார் வெற்றிவேலு வாத்தியார்.
இதனால் கடுங்கோபமுற்ற குயிலி, வெற்றிவேலு வாத்தியார் இருக்கும் குடிசைக்கு சென்று அவரை குத்தி கொலை செய்தாள். 1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் சென்ற படை காளையார் கோயிலை கைப்பற்றியது. பின்னர் சிவகங்கையை கைப்பற்ற மருது சகோதரர்கள் தலைமையில் படை முன்னேறி கொண்டிருந்தது.
போர்க்களத்தில் இருந்த வேலுநாச்சியாரிடம் ஒரு மூதாட்டி, “நாளை விஜயதசமி திருவிழா, அன்று சிவகங்கை ராஜராஜேஸ்வரி கோயிலில் பெண்கள் மட்டும்தான் வழிபாடு நடத்துவர். அந்த சந்தர்ப்பத்தை நீங்கள் ஏன் பயன்படுத்தக் கூடாது” என்று கேட்டார். “அற்புதமான யோசனை” நீங்கள் யார் என்று மூதாட்டியிடம்
வேலுநாச்சியார் வினவ அம்மூதாட்டியோ எதுவும் சொல்லாமல் நகரவே சின்ன மருது வாள்முனையில் அம்மூதாட்டியை தடுத்தார். அப்போது தனது மூதாட்டி வேடத்தை களைத்தாய் குயிலி. அப்போது குயிலி “தங்களின் அனுமதியின்றி ஆங்கிலேயரை வேவுபார்த்தேன் என்று சொல்லி வேலுநாச்சியாரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.
குயிலியின் யோசனைப்படி ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்குள் பெண்கள் படைப்பிரிவு வேலுநாச்சியார் தலைமையில் உள்ளே நுழைந்து உக்கிரதாக்குதலை நடத்தியது. ஆனாலும் ஆங்கிலேயரின் அதி நவீன ஆயுதங்கள் முன் வேலுநாச்சியார் படை தோல்வியின் விளிம்பில் நின்று கொண்டிருந்தது.
அரண்மனை ஆயுதக் கிடங்கில் ஆயிரக்கணக்கான துப்பாக்கிகள், வெடிமருந்துகள் குவிக்கப்பட்டிருந்து அப்போது சட்டென ஒரு உருவம் எரிநெய்யை உடலில் ஊற்றிக்கொண்டு ஆங்கிலேயரின் ஆயுத கிடங்கில் குதித்தது. அப்படியே அந்த ஆயுதக்கிடங்கு வெடித்துச் சிதற அந்த உருவமும் வெடித்து சிதறியது.
ஆங்கிலேயர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். ஆங்கிலேயரின் அதி நவீன ஆயுதங்கள் முழுதும் அழிக்கப்பட்டது. அதனால் ஆங்கிலேயர் பெரும் தோல்வியை சந்திக்க நேரிட்டது. ஆங்கிலேயரின் ஆயுதக்கிடங்கில் வெடித்துச் சிதறிய அந்த உருவம் தான் தியாக வீரத்திருமகள் குயிலி.