ஆய்வாளர் திரு. ஆ.ரா.வேங்கடாசலபதி அவர்களுக்கு “சாகித்ய அகாடமி” விருது
சாகித்திய அகாதமி விருது, சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும். இந்த சிறந்த “சாகித்ய அகாடமி” விருது ஆய்வாளர் திரு. ஆ.ரா.வேங்கடாசலபதி அவர்களுக்கு இந்த முறை வழங்கப்பட்டிருக்கிறது. விருதுகள், குறிப்பாக நோபல், புக்கர் போன்ற விருதுகள் எழுத்துக்காக மட்டும், அதாவது ஒரு குறிப்பிட்ட நூலுக்காக மட்டும் வழங்கப்படுவதில்லை என்று சொல்வார்கள்.
மாறாக மொழி சார்ந்த இலக்கிய செயல்பாடுகளை கவனத்தில் கொண்டு அத்தகைய கவனத்தைக் கோரும் நூல்களுக்கு விருதுகள் வழங்கப்படுவதாக நம்பப்படுகிறது.
அகாடமி எப்படி என்று தெரியவில்லை, மிக முக்கியமான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டிருக்கிறார், வருங்கால சந்ததிக்கான 10 குறிப்பிடத்தக்க ஆய்வு நூல்களை வடிவமைத்திருக்கிறார்.
“காலச்சுவடு” இவரோடு இணைந்து பணியாற்றி இருக்கிறது என்று நினைக்கிறேன். செம்மொழிப்பதிப்பாக இவர் தொகுத்திருக்கும் புதுமைப்பித்தன் கதைகளின் நூலை மட்டுமே வாசித்திருக்கிறேன். பேப்லோ நெரூடாவின் கவிதைகளை தமிழுக்கு மொழி மாற்றி இருக்கிறார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பெரிய அளவில் தமிழ் சமூக ஊடகங்களில் வெளிச்சம் பெறாதவர், இந்த விருதின் மூலம் பரந்த அளவில் இளம் வாசகர்களிடம் சென்றடைவார் என்று நினைக்கிறேன்.
“பிரபல முகங்கள்” அல்லது புனைவுலக மேதைகள் யாருக்கும் இம்முறை விருது இல்லை என்பதால் இணையத்தில், சமூக ஊடகங்களில் தமிழ் கூறும் நல்லுலகு பெரிய அளவில் பரபரப்புகள் இன்றி அமைதியாக இளையராஜாவிடமே இருக்கிறது.
வாழ்த்துகள் ஐயா, உங்கள் மொழிப் பணிகள் சிறக்கட்டும்.
— அறிவழகன், கைவல்யம்.