அங்குசம் பார்வையில் ‘சக்தித் திருமகன்’
தயாரிப்பு : விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன். டைரக்ஷன் : அருண் பிரபு, ஆர்டிஸ்ட் : விஜய் ஆண்டனி,த்ருப்தி ரவீந்திரா, வாகை சந்திரசேகர், சுனில் கிருபாளினி, செல் முருகன், கிரண்குமார், ஷோபா விஸ்வநாத், ரினி, ரியா ஜித்து, மாஸ்டர் கேசவ், ஒளிப்பதிவு : ஷெல்லி ஆர்.காலிஸ்ட், இசை : விஜய் ஆண்டனி, எடிட்டிங் : ரேய்மாண்ட் டெரிக் & தின்சா, ஸ்டண்ட் : ராஜசேகர், ஆர்ட் டைரக்டர் : ஸ்ரீராமன், பி.ஆர்.ஓ. : ரேகா.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமலேயே மக்களை வதைத்து ஆட்சி அதிகாரத்தின் தலைமைப் பதவியைக் கைப்பற்றும் ஒன்றிய அரசியல் மாமாக்களை [ இந்த வார்த்தையை நாம் பயன்படுத்தவில்லை. படத்தில் விஜய் ஆண்டனி பேசும் டயலாக் தான் இது ] துவைத்துத் தொங்கப்போடுகிறான் இந்த ‘சக்தித் திருமகன்’.
பழங்குடியினப் பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிவிட்டு, போலீஸ் மற்றும் நீதிபதியின் உதவியுடன் தப்பிவிடுகிறான் தொழிலதிபர் ஒருவன். பிரசவத்தின் போது அந்தப் பெண்ணும் இறந்துவிட, அனாதையாகிவிட்ட அந்தக் குழந்தையை குப்பை மேட்டில் போட்டுவிடுகிறான் அயோக்கிய இன்ஸ்பெக்டர். 1989-ல் மயிலாடுதுறையில் இந்தக் கொடும் சம்பவம் நடக்கிறது. அந்தக் குழந்தை வளர்ந்து இப்போது 2025-ல் தலைமைச் செயலகத்தில் மீடியேட்டராக மாறி கோடிகளில் புரளுகிறது. கிட்டுவாக ‘சக்தித் திருமகன்’ அவதாரம் எடுத்து, அரசியல் மாமாக்களை அலறவிடும் விஜய் ஆண்டனி போலீசில் சிக்கினாரா? தப்பினாரா? இதான் கதை.
படம் ஆரம்பித்து பத்து நிமிடங்கள் டீசர் மாதிரியும் அதன் பின் இடைவேளை வரை டிரெய்லர் மாதிரியும் 1 மணி நேரம் 17 கடந்து முடிகிறது. அதுவரை கதைக்குள் செல்லாததால், ஏற்கனவே பார்த்த பல அரசியல் திருவிளையாடல் படங்களைப் பார்த்தது போல ஃபீலிங் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. இது தான் படத்தின் பலவீனம்.
ஆனால் இடைவேளைக்குப் பிறகு ஃப்ளாஷ்பேக்கில் ’சுவரெழுத்து சுப்பையா’ வாகை சந்திரசேகர் வந்த பிறகு தான் படம் சூடுபிடிக்கிறது. திராவிட இயக்கத்தின் தீரர், அய்யா பெரியாரின் பெருந்தொண்டர் காரைக்குடி இராம.சுப்பையாவை மனதில் வைத்து வாகை சந்திரசேகர் கேரக்டருக்கு அந்தப் பெயரைச் சூட்டியதுடன், பெரியார் பேசுவது போலவே கருப்புச் சட்டையுடன் ‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’ என பெரியார் பொன்மொழியை சந்திரசேகரை சுவற்றில் எழுத வைத்து, நம்மை சிலிர்க்க வைத்துவிட்டார் டைரக்டர் அருண் பிரபு. “அவனுங்க…இவனுங்க..” என பெரியார் ஏகவசனத்தில் சில வகுப்பினரை பேசுவது போலவே வாகை சந்திரசேகரை பேச வைத்து ‘தில்’ காட்டிவிட்டார் அருண் பிரபு.
அதிலும் குப்பையிலிருந்து எடுத்து வந்த குழந்தைக்கு கிட்டு என பெயர் வைத்தததிலும் “இங்கே காட்டை அழிக்கணும்னா சிங்கத்தை வேட்டையாடுறதவிட, நரிகளை வேட்டையாடுறது முக்கியம். நாம எப்படி பொறந்தோம்கிறதவிட எதுக்காக பொறந்தோம்கிறது தான் முக்கியம்” என சந்திரசேகர் பேசும் வசனம் தான் இந்த ‘சக்தித் திருமகனின் ‘ சக்திவாய்ந்த ஆயுதம்.
கிட்டுவாக விஜய் ஆண்டனியின் பெர்ஃபாமென்ஸ் டாப் ரகம்னே சொல்லலாம். சின்ன வயதில் எம்.எல்.ஏ.விடுதியில் கக்கூசை சுத்தம் செய்வதில் ஆரம்பித்து, செகரட்ரியேட் மீடியேட்டராக வளர்ந்து, க்ளைமாக்ஸில் நாட்டையே சுத்தம் செய்யும் க்ளீனராக பளிச்சிடுகிறார் விஜய் ஆண்டனி. மீடியேட்டரே 6 ஆயிரம் கோடியை கொள்ளையடிக்க முடியும்னா…? என்ற கேள்வியைக் கரெக்டாக கேட்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. ஹீரோயின் த்ருப்தி ரவீந்திராவுக்கு விஜய் ஆண்டனியை கல்யாணம் பண்ணுவது, அவருடன் சில நாட்கள் பயணிப்பது, தாய்மை அடைவது, பின் தலைமறைவாவது என ஏழெட்டு சீன்கள் தான். பார்ப்பதற்கு ஆள் கொஞ்சம் ஒடிசலாக இருப்பதால், டல்லாக தெரிகிறார்.
விஜய் ஆண்டனியின் ஆலோசகராக மாறன் கேரக்டரில் செல்முருகன், செம ஜோர்.
ஒன்றியத்தின் நிர்மலா மாமியை அப்படியே அச்சு அசலாகக் காட்டி அதிர வைக்கிறார் அருண் பிரபு. கார்ப்பரேட்டுகள் என்ற போர்வையில் அரசியல் மாமாக்கள் ஜனாதிபதி பதவிக்கே குறி வைக்கும் பேரபாயத்தையும் சொல்லி எச்சரிக்கை சங்கு ஊதியிருக்கிறார் டைரக்டர் அருண் பிரபு. நம்ம ஜீ… இருக்கும் போதே… அதானி என்ற காவாலிப்பயலுக்கு இது நடந்தாலும் நடக்கும் பேராபத்தும் இருக்கு.
“நாங்க மட்டும் தாண்டா கொள்ளையயடிக்க லைசென்ஸ் வாங்கியிருக்கோம். அடுத்தவன் அஞ்சு பைசா அடிச்சாலும் அடிச்சுத் துவைச்சுருவோம். குடும்பத்தையே குளோஸ் பண்ணிருவோம்” என்ற கொள்ளை வெறியுடன் அதிகாரவர்க்கமும் ஆளும் வர்க்கமும் போடும் ஆட்டத்தை “தில்…தில்….தில்….லுடன் சொல்லியுள்ளான் இந்த ‘சக்தித் திருமகன்’.
— ஜெடிஆர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.