`கூமாப்பட்டி மாதிரியே இதுவும் வைரல்’ அதென்ன சேலத்தின் கொடிவேரி!
சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக மாறிவரும் சேலத்தின் கொடிவேரி என அழைக்கப்படும் மானத்தாள் ஏரி நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. குறிப்பாக வார இறுதி நாட்களில் சேலம் மாவட்டத்தை தவிர்த்து பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் வந்து அருவியில் குளித்து மகிழ்கின்றனர். இந்த ஏரியின் தனி சிறப்பே கொடிவேரியில் இருக்கும் நீண்ட நீர்வீழ்ச்சிகள் போன்று, இந்த ஏரியின் உபரி நீர் வெளியேறும் வாய்க்கால்களின் நீர் சீறிப்பாய்வதால் ஏற்படும் அருவி பார்ப்பதற்கு கொடிவேரி போன்றே இருக்கும்.
இந்த மானத்தாள் எரிக்கு சேலத்திலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாரமங்கலம் வந்தடைய வேண்டும். அங்கிருந்து நங்கவள்ளி செல்லும் வழியில் வலதுபுறமாக தொளசம்பட்டி என்ற ஊருக்கு தார் சாலை பிரிகிறது. அவ்வழியே சுமார் 10 கிலோ மீட்டர் சென்றால் மானத்தாள் என்கின்ற ஊரை அடையலாம். கார் அல்லது பைக் மூலமாக பயணித்தால் கூகுள் மேப் உதவியுடன் அவ்விடத்திற்கு செல்லலாம். ஆனால் நாம் முதலில் சென்றடைவது ஏரியின் மறுக்கரை நாம் செல்ல வேண்டிய அருவிக்கு ஏரியை சுற்றிவர வேண்டும் அல்லது அங்கிருக்கும் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு ஏரியின் குறுக்கே செல்லும் ரயில் பாதையை கடந்து சிறு தூரம் நடை பயணமாகவும் செல்லலாம். ஏரி ஒரு ஆள் மூழ்கும் அளவிற்கு ஆழமாகவே உள்ளது. ஏரியின் மேலே ஏறி குளிப்பதற்கு மட்டும் சற்று கவனம் தேவை. ஏரி நிறம்பி வழியும் நீரில் குளிக்கலாம். ஒரு சில இடங்களில் இடுப்பு அளவு நீர் உண்டு.
இந்த ஏரி முதலமைச்சரின் ஆணைக்கு இணங்கமக்கள் குளிப்பதற்காக வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றார்கள். பின் திடீரென இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் யூடுபே ஷார்ட்ஸ் மூலம் மக்கள் தேடிச் சென்று வீடியோ போடவும். இந்த ஏரி அனைவரது கவனத்தையும் பெற்று சேலத்தின் முக்கிய சுற்றுலா தளமாக மாறி வருகிறது. இதற்கெல்லாம் அந்த கூமாப்பட்டிகாரர் தான் காரணம்.
இந்த ஏரிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் குளித்துவிட்டு உடை மாற்றிக்கொள்ளலாம். ஆனால் குளியல்றை, உடைமாற்றும் அறை வசதிகள் ஏதுமில்லை. பெண்கள் வாகனத்தில் உடை மாற்றிக்கொண்டால் மட்டும் உண்டு மற்றபடி ஆண்கள் அங்கே இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டு மாற்றிக்கொள்ளலாம். உணவு வசதிகளை பொறுத்தவரை ஒரு சில கூரை கடைகளில் சாப்பாடு உண்டு, மீன் குழம்பு மற்றும் ரசம். அசைவத்தில் தோசைக்கல் மீன் மற்றும் எண்ணெயில் பொறித்த மீன் கிடைக்கும். அங்கு என்ன மீன் கிடைக்குமோ அது மட்டுமே உண்டு. மற்றபடி நொறுக்கு தீனிக்காக சிப்ஸ், சோளம், பானி பூரி, மிளகாய் பஜ்ஜி, காலிஃப்ளவர் வகையறாக்கள் உள்ளன. அப்புறம் என்ன இந்த லீவுக்கு இங்க ஒரு விசிட் போடுவோமா?
— மு. குபேரன்.