கூலி தொழிலாளி மரணம் ! புதைத்த உடலை தோண்டி எடுத்த காவல்துறை!
சேலம் மாவட்டம், அம்மாப்பேட்டை, கார்பெட் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி தங்கராஜ். இவர் கடந்த 11 ஆம் தேதி உயிரிழந்தார். அவரின் உடலை குடும்பத்தினர் முறையான சடங்கு சம்பிரதாயங்கள் செய்து அருகில் உள்ள மயானத்தில் புதைத்தனர்.
இந்நிலையில், உயிரிழந்த தங்கராஜின் மனைவி உமா ஒரு பரபரப்பு வாக்குமூலத்தை அளித்திருக்கிறார். மது போதையில் இருந்த தனது கணவரை அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தாக்கியதால் உயிரிழந்ததாக அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில், கொலை வழக்காக பதிவு செய்த போலீஸார், வட்டாட்சியர் பார்த்தசாரதி முன்னிலையில் தங்கராஜின் சடலத்தை தோண்டி எடுத்து, தடயவியல் நிபுணர்கள் மற்றும் அரசு மருத்துவக் குழுவினரைக் கொண்டு உடற்கூராய்வு செய்தனர். மேலும் இந்த ஆய்வின் அறிக்கை கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
— மு. குபேரன்