கொடியேற்றத்துடன் தொடங்கிய சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா !
திருச்சி சமயபுரம் ஜனவரி 23 தமிழகத்தின் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் முதன்மைக் கோவிலாக பக்தர்களால் போற்றப்படுகின்ற திருச்சி மாவட்டம் சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக காலை 6 மணியளவில் உற்சவ அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்று, தொடர்ந்து, அம்மன் சர்வ அலங்காரத்தில் மர கேடயத்தில் மேளதாளங்கள் முழங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினார். பின்னர் கோவிலின் பிரதான தங்க கொடி மரத்திற்கு அபிஷேக திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.தொடர்ந்து அம்மனின் திருஉருவ படம் வரையப்பட்ட துணியாலான திருக்கொடியை , கோவிலின் பிரதானதங்கக் கொடிமரத்தில் கோவிலின் குருக்கள் காலை 7.30 மணிக்கு ஏற்றினர். அதைத்தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று கொடி மரத்திற்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவர் வி எஸ் பி இளங்கோவன் , இணை ஆணையர் சூரிய நாராயணன், அறங்காவல் உறுப்பினர்கள் சுகந்தி ராஜசேகர் , சேதுலட்சுமணன், பிச்சைமணி மற்றும் நகரச்செயலாளர் துரை. ராஜசேகர் கிராம முக்கியஸ்தர்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இன்று இரவு அம்மன் மர கேடயத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வும்,. தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகின்ற தைப்பூசத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் காலையில் பல்லக்கிலும், இரவில் பூத வாகனம், மரஅன்ன வாகனம், மர ரிஷப வாகனம், மரயானை வாகனம், வெள்ளி சேஷ வாகனம், காமதேனு வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
8 ம் நாளன்று அம்மன் வெள்ளிக் குதிரை வாகனத்தில் காட்சி தருகிறார். 9ம் நாள் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.
மேலும் 10 ம் நாளான பிப்ரவரி 1 ம் தேதி காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் தைப்பூச விழாவிற்காக அம்மன் கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயம் கண்டருளி நொச்சியம், மண்ணச்சநல்லூர் வழியாக வடக்காவேரிக்கு சென்றடைகிறார். அன்று மாலை கொள்ளிடம் வடகாவிரியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது இதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு மேல் தனது அண்ணனான ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் சீர்வரிசை பெரும் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. பின்னர் 2 ஆம் தேதி இரவு ஒரு மணி முதல் அதிகாலை 2 மணி வரை அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது.
தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார் அன்று காலை முதல் இரவு வரை அம்மன் வழிநடை உபயம் கண்டருளுகிறார். பின்னர் இரவு ஆஸ்தான மண்டபத்திற்கு சென்றடைகிறார் அங்கு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று பின்னர் கொடி மரம் முன்பு எழுந்தருளி கொடி இறக்கப்படுகிறது. தொடர்ந்து நள்ளிரவில் அம்மன் கேடயத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் குழு தலைவர் இளங்கோவன், இணை ஆணையர் சூரியநாராயணன் தலைமையில் கோயில் குருக்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.