“சாம்சங்” 2500 வருடங்களுக்கு முன்பே சங்கம் வைத்து வழிகாட்டியவர் மகான் புத்தர் !
செந்தமிழா ! என்னுடைச் சோதரா !
இப்பொழுதே நீ யவர்பக்கம் என் றியம்பிடு வாயே ?
“ஏ, செந்தமிழா! என்னுடைச் சோதரா!
இப்பொழுதே நீ
யவர்பக்கம் என் றியம்பிடு வாயே!”
“தொழிலா ளர்களின் துயர வாழ்க்கையை
நீக்கிடப் பெரிய நீண்ட போராட்டம்
தொடங்கிடச் சங்கம் துணிந்திடும் போதில்
ஏ, செந்தமிழா! என்னுடைச் சோதரா!
கொள்ளை யடித்திடும் கொடியவர் பக்கமா?
துன்ப முற்றிடும் தொழிலாளர் பக்கமா?
உன்னுடையக் கடமையை உதறித் தள்ள
எண்ணிட வேண்டாம்! இப்பொழுதே, நீ
யவர்பக்கம் என் றியம்பிடு வாயே!”
1948ல் கவிஞர் தமிழ்ஒளி அவர்கள் எழுதிய கவிதை வரிகள் சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் அமைந்துள்ள சாம்சங் நிறுவனத்தில் பணிப்புரியும் தொழிலாளர்களின் சங்கம் கோரும் உரிமைக்கான போராட்டத்திற்கு மிகவும் பொருத்தமான வரிகளாக அமைந்துள்ளது.
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் ஒரு நிறுவனத்தின் சிக்கலோ, ஒரு தொழிற் சங்கத்தின் சிக்கலோ அல்ல. இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான போராட்டமே.
ஒரு நூற்றாண்டிற்கு மேல் போராடி, பல்வேறு தியாகங்கள் செய்து தொழிலாளர்கள் பெற்ற சங்கம் அமைக்கும் உரிமையை காத்திட நடக்கும் போராட்டம்.
திரு. வி. க. என்று அன்புடன் அழைக்கப்படும் திரு. வி. கல்யாணசுந்தரனார், சர்க்கரைச் செட்டியார், ‘சிந்தனைச் சிற்பி’ ம. சிங்காரவேலர் உள்ளிட்ட நம் முன்னோர்கள் போராடி பெற்ற உரிமையை காத்திடும் போராட்டம்.
தொழிற்சங்கத்தைப் பார்த்து நிறுவனம் அஞ்சுகிறது என்றால் நிறுவனம் ஏதோ தவறு செய்கிறது என்றே பொருள்.
தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தீர்க்க மனமில்லாமல் ஒரு தொழிற்சாலை மூடப்படுகிறது என்றால் அது அந்த தொழில் நிறுவனத்தின் நிர்வாகத் திறமையின்மையின் வெளிப்பாடு.
18ம் நூற்றாண்டு தொடங்கி ஆப்பிரிக்க கண்டத்தில் மக்களை வேட்டையாடி அடிமைகளாக்கி, அடிமைகளை வைத்து தொழில் நடத்தி இலாபம் ஈட்டிய கொடிய முதலாளித்துவம், ‘ஜனநாயகத்தின் யுகம்’ என்று சொல்லப்படும் 20ம் நூற்றாண்டிலும் தன் நாட்டு மக்களையும் ஈவு இரக்கம் இல்லாமல் மனிதாபிமானமற்ற முறையில் நடத்திய போது இங்கிலாந்து உள்ளிட்ட எல்லா நாடுகளிலும் அரசு முதலாளிகள் பக்கமே நின்றது.
இவற்றை எதிர்த்து போராடிய மக்களின் குருதியில் நனைந்து எழுந்ததே செங்கொடி. செங்கொடியின் வலிமையை உணர்ந்து தொழிலாளர் கோரிக்கையை நிறைவேற்றியது தொழில் நிறுவனங்கள்.
சங்கம் உருவாக்கும் உரிமை, சங்கத்திற்கு உறுப்பினர் சந்தா வசூலிக்கும் உரிமை, வசூலித்த சந்தாத் தொகையை தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக செலவு செய்யும் உரிமை என ஒவ்வொரு உரிமையையும் பெறுவதற்கு தொழிலாளர் செய்திட்ட தியாகங்கள் எண்ணிலடங்காது.
21ம் நூற்றாண்டிலும் கண்ணியமிக்க வாழ்க்கைக்கான உத்தரவாதம் தொழிலாளருக்கு கிடையாது.
“தொழிலாளர்களுக்கு என்ன வேண்டும் என்று தொழிலாளர்கள் கேட்கக் கூடாது, தொழிலாளர்களுக்கு என்ன தர முடியும் என்பதை தொழிற் நிறுவனத்தின் நிர்வாகம் தீர்மானிக்கும்.
நிர்வாகம் தீர்மானித்ததை, சம்மந்தப்பட்ட நாடுகளில் உள்ள அரசை ஏற்கச் செய்து தொழிலாளர்களுக்கு நிர்வாகம் வழங்கும். கிடைத்ததை மகிழ்ச்சியுடன் தொழிலாளர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். உரிமை பேசினால், அரசின் காவல் துறை தொழிலாளர் கழுத்தை நெரிக்கும்” என்று கொக்கரிக்கும் பன்னாட்டு தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்களின் சங்கம் அமைக்கும் அடிப்படை உரிமையை மட்டும் மறுக்கவில்லை, அரசின் இறையாண்மைக்கே சவால் விடுகின்றனர் என்பதை அரசும் மக்களும் உணர வேண்டும்.
எம் மண்ணில் வந்து எம் மக்களை அடிமைகளாக வைத்திருக்க அனுமதிக்க இயலாது. சர்வவல்லமைப் படைத்த பன்னாட்டு நிறுவனங்களில் உதிரிகளாக தொழிலாளர் நின்றால் அவர்கள் அவமானப்படுவது மட்டுமே மிஞ்சும். சங்கம் மட்டுமே தொழிலாளர்களை வலிமையானவர்களாக வைத்திருக்க உதவும்.
ஒன்றுபட்டு ஒரு தலைமையின் கீழ் தொழிலாளர் நின்றால் மட்டுமே பேரம் பேசும் வலிமையை பெறுவர். இல்லை என்றால் ஒவ்வொருவராக தொழிலாளர்கள் பழிவாங்கப் படுவார்கள். (Trade Union provides Bargaining power to the Workers. To deny such bargaining power is inhuman and anti democratic).
தொழிலாளர்கள் சங்கம் அமைத்து தொழிற்சாலை நிர்வாகத்துடன் சமமாக அமர்ந்து வாதிடும் உரிமையை மறுப்பது மனிதப் பண்புகளுக்கும் ஜனநாயக நடைமுறைக்கும் எதிரானது.
2500 வருடங்களுக்கு முன்பாகவே சங்கம் வைத்து வழிகாட்டியவர் மகான் புத்தர். புத்தர் தொடங்கி பல்வேறு காலகட்டங்களில் உருவான தொழிலாளர் வர்க்கத் தத்துவங்களுக்கு அறிவியல் பூர்வமான அணுகுமுறையை உருவாக்கித் தந்த மார்க்ஸியத்தின் அடிப்படையில் தொழிற்சங்க ஜனநாயக நடைமுறையை உயர்த்தி பிடிக்கும் இந்திய தொழிற்சங்கங்களின் மையம் – சிஐடியு (Centre for Indian Trade Unions – CITU) சாம்சங் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டக் களத்தில் நிற்கிறது.
வ. உ. சி. முதல் பகத் சிங் வரை நம் முன்னோர்கள் செய்த அளப்பரிய தியாகத்தின் உச்சமாக நடந்ததே 1946 தல்வார் கப்பல் மாலுமிகளின் போராட்டம். தொழிலாளர் வர்க்கமென கப்பல் படை வீரர்கள் அணிதிரண்டதின் விளைவே இந்திய விடுதலை.
இராணுவ வீரர்கள் தங்களைத் தொழிலாளர் வர்க்கமாகக் கருதத் தொடங்கிவிட்டனர் என்பதை அறிந்த பின்னரே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இனியும் இந்தியாவை அடக்கி ஆள முடியாது என்று உணர்ந்து 1947 ஆகஸ்ட் 15 இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தது.
இந்திய விடுதலைக்கு போராடிய தொழிலாளர் வர்க்கம் கட்டி எழுப்பிய பொதுத் துறை தொழிற்சாலைகள்தான் (Public Sector Units) இந்தியாவை பொருளாதார ரீதியில் வளர்த்தெடுத்தது.
அந்த வரலாற்றின் நீட்சிதான் சிஐடியு.
இன்றும் இலாபத்தில் இயங்கும் ஐம்பதாண்டு கால வரலாறு கொண்ட இந்திய இரயில்வேத் துறையின் சென்னைப் பெரம்பூரில் உள்ள இந்தியாவின் முதல் இணைப்புப் பெட்டிச் தொழிற்சாலை (ICF) தொடங்கி, சமையலுக்கு பயன்படும் பெருங்காயம் தயாரிக்கும் எல். ஜி. கம்பெனி வரை சிஐடியு வலுவாக உள்ள நிறுவனங்கள் இலாபத்தை ஈட்டுவதுடன் தொழிலாளர் நலன் பாதுகாக்கப்பட்டு, நிர்வாகத்துடன் சுமூகமான உறவைப் பராமரித்து, ஆரோக்கியமான உற்பத்திச் சூழலை உத்தரவாதப் படுத்துகிறது சிஐடியு என்பதை உணர்ந்தே, அத்தகைய ஆரோக்கியமான உற்பத்திச் சூழலை சாம்சங் தொழிற்சாலையிலும் உருவாக்க அந்நிறுவனத்தின் தொழிலாளர்கள் சிஐடியு உடன் இணைந்து பணியாற்ற தொழிலாளர் வர்க்கமாக அணிதிரண்டுள்ளனர்.
அன்னிய நிறுவனங்கள் தனது தொழிலாளர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்று களத்தில் நிற்கிறது சிஐடியு.
இந்திய தொழிலாளர் நலனா? அன்னிய நிறுவனத்தின் நலனா? இவற்றில் எந்த நலன் இந்திய மக்களுக்கான நலன்?
யார் பக்கம் நிற்பது தேச பக்தி? இந்திய தொழிலாளர் பக்கம் நிற்பதா? அல்லது அன்னிய நிறுவனத்தின் நிர்வாகம் பக்கம் நிற்பதா?
உறுதியுடன் நமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது.
தொழிலாளர்கள் தங்களின் தொழில் சார்ந்த சங்கம் அமைக்கும் உரிமையை அடிப்படை உரிமையாக இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கி உள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டம் இந்திய மக்களுக்கு வழங்கியுள்ள உரிமையை அந்நிய நிறுவனம் தட்டிப் பறிக்க முயற்சி செய்கிறது என்றால் அது இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தல் என்று நாம் உணர வேண்டும்.
சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் இந்திய தொழிலாளர்களின் அடிப்படை உரிமையைக் காக்கின்றப் போராட்டம்.
இந்திய மக்கள் சாம்சங் தொழிலாளர்களின் பக்கம்தான் நிற்போம்!
நம் இறையாண்மையை நாம் காக்க தொழிலாளர் வர்க்கமாக ஒன்று திரள்வோம்!
என்று இந்தியர்களாகிய நாம் உறுதியேற்க வேண்டும்.
கவிஞர் தமிழ்ஒளி வரிகளில் கேட்கின்றோம்
“ஏ, செந்தமிழா! என்னுடைச் சோதரா!
இப்பொழுதே நீ
யவர்பக்கம் என் றியம்பிடு வாயே!”
தோழமையுடன்,
பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு
பொதுச் செயலாளர்,
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை.