மணல் குவாரி கொள்ளை! அங்குசத்திற்கு வந்த டைாி!
விருதுநகர் கிராவல் மணல் கொள்ளை !அங்குசத்திற்கு வந்த டைரி !
”அரசுக்கு செலுத்தியதோ வெறும் 60 ரூபாய்! வாரி சுருட்டியதோ பல கோடி! தாசில்தார் உட்பட 7 பேர் சஸ்பெண்ட்! கலெக்டர் அதிரடி உத்தரவு!” என்ற தலைப்பில், கடந்த பிப்-16-28 அங்குசம் இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
கனிம வளக்கொள்ளையை தடுக்க தவறிய குற்றச்சாட்டின் கீழ், சாத்தூர் வட்டாட்சியர் ராமநாதன், மண்டல துணை வட்டாட்சியர் நவநீதன், வருவாய் ஆய்வாளர் தனலெட்சும், கிராமநிர்வாக அலுவலர் அஜிதா, கிராம உதவியாளர் குருசாமி மற்றும் நீர்வளத்துறை உதவிப் பொறியாளர், உதவி வேளாண் அலுவலர் ஆகிய 7 பேரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்த நிலையில், மாவட்ட ஆட்சியரை கண்டித்து வருவாய்த்துறையினர் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் அழுத்தம் காரணமாகவே, இந்த தவறு நிகழ்ந்ததாகவும்; மாவட்ட ஆட்சியர் இதனையெல்லாம் திசை திருப்பிவிட்டு, தங்களை பழிவாங்கும் நோக்கில் நடவடிக்கை எடுத்துவிட்டதாக குற்றஞ்சாட்டினர்.
இந்த விவகாரம் குறித்து, அங்குசம் சார்பில் மாவட்ட ஆட்சியர் வி.ப.ஜெயசீலனை தொடர்பு கொண்ட போது, “வி.ஏ.ஓ.வு மூன்று முறை தாசில்தார் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார். நானே, முதல்முறை புகார் வந்தபோதே விசாரிக்க சொன்னேன் . விவசாயப் பயன்பாட்டுக்குத்தான் மண் அள்ளுகிறார்கள் என்றார். இரண்டாவது முறையாகவும் அதே புகார் என் கவனத்திற்கு வந்ததையடுத்தே, கோட்டாட்சியரை அனுப்பி விசாரிக்க சொன்னேன். அப்போதுதான், இந்த விவகாரமே எங்களுக்குத் தெரியவந்தது. இந்த விவகாரத்தில் தாசில்தார் உள்நோக்கத்துடன்தான் செயல்பட்டிருக்கிறார். ஆதாரங்களின் அடிப்படையில்தான், நடவடிக்கை எடுத்திருக்கிறோம். ” என்பதாக விளக்கம் அளித்திருக்கிறார்.
ஆட்சியா் ஜெயசீலன்
இதனை தொடர்ந்து, இ-குமரலிங்கபுரத்தை தொடர்ந்து, முள்ளிச்சேவல் என்ற கிராமத்திலும் சட்டவிரோதமாக கிராவல் மண் வெட்டியெடுக்கப்பட்டிருக்கும் விவகாரம் வெளிவந்திருக்கிறது. மேலும், தோணுகால் என்ற கிராமத்தில், “ஒருகோடி ரூபாய் செலவு செய்து இந்த குவாரிக்கு அனுமதி வாங்கியிருக்கிறேன். கொஞ்சம் ஒத்துழைப்பு தாருங்கள்.” என்பதாக, கிராம மக்களிடம் அந்த குவாரியின் உரிமையாளர் பேசுவதாக கானொளி காட்சி ஒன்றும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதிலிருந்து, மாவட்டத்தில் வண்டல் மண் அள்ளுவதற்கு தகுதியான இடங்களாக கண்டறியப்பட்ட 283 இடங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்தால் இன்னும் பல உண்மைகளை கண்டறியமுடியும் என்பதாக தெரிவிக்கிறார்கள்.

இது ஒரு புறமிருக்க, மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் குவாரி அதிபர்கள் உள்ளிட்டு பலரிடமிருந்து இலஞ்சப் பணத்தை வாங்கித் தர மறுத்ததற்காக, தனது ஆவின் பாலகத்தையை அப்புறப்படுத்த முயல்வதாக வச்சக்காரப்பட்டி போலீசுக்கு எதிராக எஸ்.பி.யிடம் புகார் அளித்திருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்தப் பின்னணியில்தான், சம்பந்தபட்ட குவாரியிலிருந்து கைப்பற்றப்பட்ட டைரியின் சில பக்கங்களை வெளியாகி உச்சபட்ச அதிர்ச்சியை கூட்டியிருக்கிறது. அந்த டைரியின் பக்கங்கள் அங்குசம் இதழுக்கு பிரத்யேகமாக கிடைத்திருக்கின்றன.

நமக்கு கிடைத்த அந்த டைரியின் பக்கங்களில், “மகேஷ் சார் 50,000; மைன்ஸ் – 50,000; தங்கமணி, ஆசை – 50,000; ஓ.வி.ரெட்டி 20,000; தாசில்தார் ஆபீஸ் – 23,000; எஸ்.பி. மூர்த்தி – 5000; காசிராஜன் எஸ்.ஐ.-3000…” என்பதாக, அன்றாட வரவு – செலவுகளை குறிப்பிடும் அந்த டைரியில் இலஞ்சம் கொடுத்த விவகாரம் பதிவாகியிருக்கிறது. அதுவும் குறிப்பிட்ட நாள் இடைவெளியில், மீண்டும் மீண்டும் கொடுக்கப்பட்டதாகவும் அதில் பதிவாகியிருக்கிறது.
வருவாய்த்துறை, கனிமவளத்துறை அதிகாரிகள், போலீசாரின் ஒத்துழைப்போடுதான் அவர்களுக்குத் தெரிந்தேதான் இந்த கனிம வளக்கொள்ளை நடைபெற்றிருக்கிறது என்பது இதன்வழியே அம்பலமாகியிருக்கிறது.
— அங்குசம் புலனாய்வுக்குழு.