சின்னம் இருந்தால் மட்டும் ஜெயிக்க முடியாது; எங்கள் சின்னம்மா இருந்தால் தான் ஜெயிக்க முடியும் !
சின்னம் இருந்தால் மட்டும் ஜெயிக்க முடியாது; எங்கள் சின்னம்மா இருந்தால்தான் ஜெயிக்க முடியும் ! அஇஅதிமுக கழகத்தின்பொதுச்செயலாளர் நான்தான் என்று சசிகலா தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் தீவிர அரசியல் பயணம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ள நிலையில், அதிமுகவின் உட்கட்சி பிரச்சினை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
முதன்முதலாக தென்காசி மாவட்டத்தில் தனது பிரச்சார பயணத்தை தொடங்கினாலும் தொடங்கினார்.
அதிமுகவின் தொண்டர்கள் தற்போது சசிகலா பக்கம் மெல்ல சாயத் தொடங்கி விட்டனர். அதிமுகவின் முன்னாள் நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் என பலரும் சசிகலா பக்கம் சாயத் தொடங்கிவிட்டார்கள், என்கிறார்கள்.
இதனால், உச்சகட்ட உஷ்ணத்துக்கு ஆளாகிப்போன எடப்பாடி தரப்பு, உடனடியாக எம்.எல்.ஏ. உதயகுமார், மதுரை அதிமுக எம்எல்ஏ. ராஜன் செல்லப்பா ஆகியோரை அழைத்து சசிகலாவை எதிர்த்து பேட்டி கொடுக்க உத்தரவிட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி மதுரை வார்டு செயலாளர் உள்பட பலர் சசிகலா ஆதரவாக பேசத் தொடங்கி விட்டதால், எடப்பாடி பழனிச்சாமி தூக்கத்தை தொலைத்து வருகிறாராம்.

இதை அனைத்தையும் கண்காணித்து வரும் மத்திய பாஜக, தன் பங்குக்கு தேர்தல் ஆணையத்திடம் இரட்டை இலையை முடக்க வழியுறுத்தி வருவதாக தகவல். அதுமட்டுமின்றி அதிமுக உள்கட்சி வழக்குகளில் தேர்தல் ஆணையம் பதில் சொல்ல நீதிமன்றமும் உத்தரவிட்டால், இரட்டை இலை முடக்க வாய்ப்பு உள்ளது என்று அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
இதனால், நொந்து போன எடப்பாடி தேர்தல் ஆலோசனை கூட்டத்தை ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடத்த திட்டமிட்டிருக்கிறாராம். இதில், தேனி, தென்காசி, ஆரணி உள்ளிட்ட 15 தொகுதி நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி 2ஆம் கட்டமாக சந்திப்பார் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் முடிவுகள் குறித்து, தொகுதி வாரியாக கழக நிர்வாகிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டங்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெறும் என்பதாக அறிவித்திருந்தார்கள். இதன்படி, முதற்கட்டமாக 2024 ஜுலை10 முதல் 19 வரை நடந்து முடிந்துள்ளன.

இரண்டாம் கட்டமாக 2024 ஜூலை 24 முதல் ஆக 5 வரை, ஏனைய நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான கழக நிர்வாகிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டங்கள் கீழ்க்கண்ட கால அட்டவணைப்படி நடைபெறும் என்பதாக தற்போது அறிவித்திருக்கிறார்கள்.
இதன்படி, ஜூலை 24 ஆம் தேதி தேனி – ஆரணி; ஜூலை 25 ஆம் தேதி தென்காசி –ஈரோடு; ஜூலை 26 ஆம் தேதி திருப்பூர் – கடலூர்; ஜூலை 29 ஆம் தேதி திண்டுக்கல் – திருவள்ளூர்; ஜூலை 30 ஆம் தேதி தூத்துக்குடி – நாமக்கல்; ஜூலை 31 ஆம் தேதி கள்ளக்குறிச்சி – சேலம்; ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வடசென்னை- மத்திய சென்னை – தென் சென்னை; ஆகஸ்ட் 5 ஆம்தேதி புதுச்சேரி – கரூர் ஆகிய தொகுதிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
நாடாளுமன்றத் தொகுதி வாரியாக நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டங்களில், சம்பந்தப்பட்ட நாடாளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கழக வேட்பாளர், கழக செய்தித் தொடர்பாளர்கள், மாவட்டக் கழக முன்னாள் செயலாளர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், கழக சார்பு அமைப்புகளின் மாநில துணை நிர்வாகிகள் மற்றும் சார்பு அமைப்புகளின் மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சிக் கழகச் செயலாளர்கள், பகுதிக் கழகச் செயலாளர்கள், கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர்கள், நகர மன்றத் தலைவர், பேரூராட்சி மன்றத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள் உட்பட மேற்கண்ட நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று எடப்பாடி உத்தரவிட்டுள்ளராம்.
ஆக மொத்தத்தில், ரொட்டித் துண்டை பங்கிட்டுக் கொடுக்கும் குரங்கு கதையாக அதிமுக கதி ஆக போகிறது என்பது மட்டும் உண்மை என்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.
சசிகலாவின் பயணம் குறித்து, மதுரை முன்னாள் மாவட்ட இலக்கிய அணி செயலாளரும் சசிகலாவின் கணவர் ம.நடராஜனுக்கு உதவியாளராக இருந்தவரும்; தற்போது சசிகலா அணியின் மதுரை மண்டலப் பொருப்பாளராக இருப்பவருமான மதுரை சுரேஷ் அவர்களிடம் மதுரை விமான நிலையத்தில் சந்தித்து வி.கே.சசிகலாவின் அரசியல் பயணம் குறித்து கேட்டதற்கு,
“எங்கள் சின்னம்மா அரசியல் பயணம் மேற்கொள்வதற்குக் காரணமே எடப்பாடி பழனிச்சாமி தான். நடந்த பத்து தேர்தலிலும் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தலைமை தோற்றுப்போனது. அதனால், தொண்டர்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமி மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

இவரின் தலைமையில், அதிமுக இயங்கினால் வரும் உள்ளாட்சித் தேர்தலில் அஇஅதிமுக படுதோல்வி அடையும். அதுமட்டுமின்றி 2026 இல் அதிமுக நான்காவது இடத்திற்கு வந்து விடும். இதனால், தொண்டர்கள் அனைவரும் எங்கள் கழக பொதுச்செயலாளர் புரட்சி தாய் சின்னம்மா அவர்களின் தலைமையில் செயல்பட தயாராகி விட்டார்கள்.
அதனால்தான் சின்னம்மா அனைவரும் ஒன்றிணைந்து அஇஅதிமுக 2026 இல் ஆட்சி அமைக்க முடியும் என்று கூறுகிறார். அஇஅதிமுகவில் சின்னம் இருந்தால் மட்டும் ஜெயிக்க முடியாது; எங்கள் சின்னம்மா இருந்தால்தான் ஜெயிக்க முடியும்” என்று கூறினார்.
ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.