தேம்பி அழுத ஓபிஎஸ்-ஆறுதல் கூறிய சசிகலா!
அதிமுகவின் தற்போதைய ஒருங்கிணைப்பாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான ஓ பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை உயிரிழந்தார். மேலும் இவர் கடந்த 10 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று காலை சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய உடன் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் மனைவி இறந்து விட்டதாக தகவல் வந்தது, இதையடுத்து சட்டப்பேரவைக்கு வந்திருந்த அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தனர்.
மேலும் சட்டசபையில் இருந்த முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் துரைமுருகன், மா சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மருத்துவமனைக்கு உடனடியாக நேரில் சென்று பன்னீர்செல்வத்தை பார்த்து ஆறுதல் கூறினர். அப்போது அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி கே பழனிச்சாமியும் இருந்தார். அப்போது மு க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஓபிஎஸ்-யின் மகனான தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்-திற்கும் ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில் முதல்வர் சென்ற ஒரு சில மணி நேரங்களில் யாரும் எதிர்பாராத விதமாக அதிமுக கொடி கட்டிய வாகனத்தில் சசிகலா மருத்துவமனைக்கு வருகை தந்தார். ஓ பன்னீர் செல்வத்தின் மனைவியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு, ஓ பன்னீர்செல்வத்தின் கைகளைப் பிடித்தவாறு ஆறுதல் கூறினார். இருவரும் ஐந்து நிமிடம் பேசினர்கள். அதேநேரம் சசிகலா வருவதை அறிந்த உடன் எடப்பாடி கே பழனிசாமி அந்த இடத்தை விட்டு சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்கு வருடங்களுக்கு முன்பு ஓ பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதிக்கு சென்று தியானம் இருந்து தர்ம யுத்தம் நடத்தினார். தர்ம யுத்தம் நடத்துவதற்கு முதல் நாள் சசிகலாவை சந்தித்ததோடு சரி, பிறகு நான்கு வருடமாக சசிகலாவை ஓபிஎஸ் சந்திக்கவே இல்லை. இந்த நிலையில் ஓபிஎஸ் மனைவி மறைவிற்கு சசிகலா நேரில் வந்து ஆறுதல் கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் உற்று நோக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. அதேசமயம் இதுபோன்ற அரசியல் நாகரிகம் வரவேற்கத்தக்கது, என்றும் அரசியல் விமர்சகர்கள் தங்கள் கருத்துக்களை கூறுகின்றனர்.