பாசாங்கு இல்லாத பாதுகாப்பு அரண் ! சாத்தை பாக்கியராஜ் !
மக்கள் தேசம் கட்சியின் நிறுவன தலைவர் சாத்தை பாக்கியராஜ் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமான செய்தி துயரம் அளிக்கிறது.
40 ஆண்டுகளுக்கும் மேலாக சமரசமற்ற முறையில் துணிச்சலாக சமூக பணியை மேற்கொண்டிருந்த அவரின் இறப்பு, தென்மாவட்ட பரையர் மக்களுக்கு பேரிழப்பாகும். வடக்கில் பூவை மூர்த்தியை போல தெற்கில் சாத்தை பாக்கியராஜ் பாதுகாப்பு அரணாக இருந்தார்.
1980-களில் தொடங்கி 2000ம் வரை தென் மாவட்டங்களில் தலை விரித்தாடிய சாதி கலவரங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டுக்குள் வைத்திருந்தவர்களில் ஒருவர் சாத்தை பாக்கியராஜ். அவரது பெயரே பெரும் பாதுகாப்பு அரணாக இருந்தது. அவரை சுற்றி மறை நீர் போல இருந்த வன்முறை கலந்த பிம்பம், எதிரிகளுக்கு அச்சத்தை கொடுத்தது. அவரது பெயருடன் இணைத்து பேசப்பட்ட பாம், துப்பாக்கி, சூட்கேஸ் போன்றவை பம்பாய் வரை சென்றவர்களுக்கும் பாதுகாப்பு உணர்வை தந்தது.
அன்றாடம் தன் மக்களை கொன்று குவித்து கொண்டிருக்கும்போது, ஆர்ப்பாட்டம் நடத்தி அரசுக்கு கோரிக்கை வைத்தவர் அல்ல அவர். களத்தில் இருந்து வெடித்து கிளம்பிய அதிரடியான அரசியல்வாதி.
அஹிம்சை, அரச நடவடிக்கை, சட்ட போராட்டம், ஜனநாயகம், நீதிமன்ற தண்டனை ஆகியவை தொடர்ந்து தோல்வி அடைந்து கண்டதை கண்டு மனம் கொதித்தவர். தத்துவார்த்த அரசியல் மட்டுமே தன் மக்களுக்கு உதவாது. அதையும் தாண்டிய அணுகுமுறைகள் தேவை என்பதை களத்தில் இருந்து புரிந்து கொண்டவர்.

அதனாலே சாத்தை பாக்கியராஜ் பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து, ” அடித்தால் அடி. வெட்டினால் வெட்டு இன்னும் சொல்ல போனால் கத்தியால் சண்டை போடுவதை விட்டு விடு. துப்பாக்கி, வெடிகுண்டை வைத்து சண்டை போடு. அடிபட்டு மருத்துவனையில் படுத்து கிடப்பதை விட, சிறையில் போய் படுத்து கொள்” என பாதிக்கப்பட்டவனாகவே மாறி பேசினார். தான் பேசியதை செயலிலும் காட்டினார். நூற்று கணக்கான வழக்குகளையும் சிறை தண்டனைகளையும் கண்டு, ஒருபோதும் அவர் அஞ்சியதில்லை. அதனால் மக்களுக்கு நெருக்கமானவராக மாறினார்.
ஜனநாயக ரீதியான அரசியலை முன்னெடுப்பதாக அவர் ஒருபோதும் பாசாங்கு செய்ததில்லை. அத்தகைய அரசியலை செய்பவர்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவம், தனக்கு கிடைக்கவில்லை என அவர் வருந்தவும் இல்லை. ஜனநாயக ரீதியான அரசியல் என்ற பெயரில் சமரச அரசியல் செய்பவர்களுக்கு எதிர் தரப்பின் கரிசனம் கிடைக்கும். அதன் மூலம் சாத்தியமான அங்கீகாரம், பதவி, வரலாறு போன்றவையும் வாய்க்கும். ஆனால் எதிரிகளை நிர்மூலமாக்கும் அரசியல் செய்பவர்களுக்கு மேற்சொன்ன எவையும் கிடைக்காது. ஆனால், மக்களின் மனங்களில் குலசாமி போல இருப்பார்கள். அப்படி சாத்தை பாக்கியராஜும் இருப்பார். அவர் மீது முடிவில்லாத ஒளி ஒளிரும்.
சாத்தை பாக்கியராஜ் இறுதிவரை, தன் சக்திக்குட்பட்டு மக்களுக்கு ஏதேனும் நன்மை செய்ய முயன்று கொண்டே இருந்தார். நன்மை செய்ய முடியாத போது, அம்மக்களுக்கு தீமை செய்யாமல் ஒதுங்கி இருந்தார். தன் பிழைப்புக்காக ஒருபோதும் மக்களுக்கு துரோகம் செய்யாமல் இருந்தார். இதுவே அவரிடம் இருந்து பிறர் கற்க வேண்டிய பாடமாகும்.
— இரா.வினோத், பத்திரிகையாளர்.