சத்தியமூர்த்தி பவன் யாருக்கு?
சத்தியமூர்த்தி பவன் யாருக்கு?
தமிழகத்தில காங்கிரஸ் தலைமை பொறுப்புக்கு இப்பவே நான்கு முனை போட்டி போய்கிட்டு இருக்கு, ரேஸில் யார் முந்தப் போறாங்கனு தெரியலனு பீடாவை மெல்லுகிறார்கள் சத்யமூர்த்திபவன் வாசிகள். ஆளும் ’பவர்புல்’ அமைச்சரால் ஓரங்கப்பட்ட மகளிர் குலமும், மேலிடத்து விவகாரங்களை கையா ண்ட வளமான நபரும், ஆட்டுக்குட்டி மாதிரி அதிகாரியா இருந்து கட்சிக்கு வந்த காந்தமானவரும் களத்தில் இருக்காங்களாம். இவங்க மூனு பேரையும் ஓவர்டேக் செய்துவிட்டு, எப்படியாவது தன்னோட வாரிசுக்கு கிரீடத்தை சூட்டிடனும்னு வேட்டிய மடிச்சிகிட்டு நிக்கிறாராம் அப்பாவான அந்த அரசியல்வாதி.
மேலிடத்து விவகாரங் களை கையாளும் வள மான நபர்தான் தனக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார். கொஞ்சம் பொறுங்கள் அவரை ஓரங்கட்டிவிட்டு வெற்றி செய்தியோடு வருகிறேன் என ஆதரவாளர்களுக்கு ஆறுதல் வார்த்தை கொடுத்து வருகிறாராம் மகளிர் குலம். வானில் பறந்தபடியே, மேலிடத் திலேயே வட்டமிட்டு வருகிறதாம் வளமான தரப்பு. ஆட்டுக்குட்டி மாதிரி நானும் சிறப்பான நிர்வாகத்தை தாரேன்னு, அதிகார தாழ்வாரத்துல தவழுதாம் காந்த தரப்பு.
மாவட்டத்துக்கு ஒரு காரு. மாசா மாசம் கட்சிக்கு பெட்ரோல். துவண்டு கெடக்குற கட்சியை தூக்கி நிறுத்துறது எங்கப் பொறுப்புனு, பழக்க தோசத்துல பெட்டிய தூக்கி காட்டுதாம் அப்பா , புள்ள தரப்பு. தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் ராகுல் இதுக்கு ஒத்துக்கவே மாட்டாரு. ஆல்ரெடி தல செம காண்டுல இருக்குனு, ஆறுதலோடு இருக்காம் மத்த மூனு தரப்பும்.
இந்த நாலு தரப்புக்கும் அப்பால தனியா டிராக் ஓட்டி பார்த்துருக்காரு, சிறுத்தை கட்சியில சிலகாலம் இருந்துட்டு வந்த துட்டு தரப்பு. காங்கிரசு தலைவர் மல்லிகார்ஜூனே கார்கேகிட்டயே போயிட்டு, ஒரு வகையில நானும் உங்க ஆளுதான்னு பேசியிருக்காரு. ஜாதிய வச்சி பேசின மருவாத கெட்ரும் போயி கட்சி கட்ற சோலிய பாருயானு திட்டாத குறையா தொரத்தியடிச்சிருக்காராம்.
கோஷ்டிகளும்… குழாயடிச்சண்டையும்… சட்டை கிழியலும் … இல்லாத கதர்சட்டை கட்சியா?