பர்னிச்சர் கம்பெனி சார்பில் தீபாவளி ஆஃபர் தருவதாகக்கூறி பலே மோசடி ! மக்களே உஷார் !
தீபாவளி பண்டிகைக்கான நாள் நெருங்கி வரும் நிலையில், கடன்பட்டாவது பிள்ளைகளுக்கு புது துணிமணிகள் வாங்கிவிட வேண்டும்; பட்டாசு, பலகார செலவுகளுக்கும் காசு தேர்த்தியாக வேண்டுமென்ற முனைப்பில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் பொதுஜனங்கள்.
தீபாவளி பரபரப்பை பயன்படுத்தி, சாவகாசமாக வீடு தேடி வந்து கதையளந்துவிட்டு பெரும் வசூல்வேட்டையே நடத்திவிட்டு தலைமறைவாகியிருக்கிறது, மோசடி கும்பல் ஒன்று.
திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், புள்ளம்பாடி ஒன்றியத்தை சேர்ந்த கிராமங்களுள் ஒன்று அழுந்தலைப்பூர். 25 – 30 வயதையுடைய இளைஞர்கள் இருவர் இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த கிராமத்திற்கு வந்திருக்கிறார்கள். திருச்சி நெ.1 டோல்கேட்டில் செயல்பட்டுவரும், “வளர்பிறை ஹோம் அப்ளையன்ஸ்” நிறுவனத்திலிருந்து வந்திருப்பதாக அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தீபாவளி பண்டிகை காலத்தையொட்டி, சிறப்பு சலுகை திட்டம் ஒன்றை தமது நிறுவனம் அறிவித்திருப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.
அதன்படி, ”ரூ.500/- கட்டி சீட்டு குரூப்பில் சேர வேண்டும். 40 பேர் கொண்ட குழுவாக பிரித்து, ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனியே குலுக்கல் நடத்தப்படும். அந்த 40 பேரில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலி தள்ளுபடி விலையில் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

குலுக்கலில் வெற்றி பெறாதவர்கள், அவர்கள் கட்டிய தொகைக்கு ஈடாக ஏதேனும் பொருட்கள் எடுத்துக் கொள்ளலாம். பொருள் வேண்டாம் என்றாலும், பணமாக திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.” என்பதாக நீண்ட விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.
வீடு வீடாக சென்றும், நூறுநாள் வேலைத்திட்டத்தில் கும்பலாக அமர்ந்திருந்த பெண்களிடமும் நைச்சியமாக பேசி பணத்தை வசூல் செய்திருக்கிறார்கள் அந்த டிப்டாப் ஆசாமிகள் இருவரும். ”உங்கள் ஊரிலேயே, இத்தனை பேர் எங்கள் திட்டத்தில் சேர்ந்திருக்கிறார்கள். குலுக்கலில் பரிசு விழாமல் போனாலும், கட்டிய தொகைக்கு பொருள் வாங்கிக்கொள்ளலாம். உங்களுக்கு நட்டம் ஏதுமில்லை.” என்பதாகவும் பேசியிருக்கிறார்கள்.
அவர்களும் சரி நம்ம ஊரிலும் இத்தனை பேர் சேர்ந்திருக்கிறார்களே என்று, அதே ஊரில் மட்டும் நாற்பது – ஐம்பதுக்கும் குறையாமல் பலரும் ஆளுக்கு ஒரு ஐநூறு கட்டியிருக்கின்றனர். இந்த வசூல் வேட்டை மறுநாளும் தொடர்ந்திருக்கிறது.
அவர்கள் சொன்னதுபோலவே, மூன்றாம் நாள் பணம் கட்டிய சிலருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு குலுக்கலில் உங்கள் பெயர் விழுந்திருக்கிறது என்றிருக்கிறார்கள். அவர்களது வாட்சப்பில் சில படங்களை அனுப்பி வைத்து, இதிலிருந்து உங்களுக்குத் தேவையான பொருட்களை தேர்வு செய்து அனுப்பி வையுங்கள் என்றிருக்கிறார்கள்.
அதன்படி, அதே கிராமத்தைச் சேர்ந்த சாந்தாவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அவரது விருப்பத்தேர்வை அனுப்பி வைத்திருக்கிறார். மீண்டும் அவரை தொடர்பு கொண்ட மேற்படி நிறுவனத்தார்கள், “நீங்கள் அனுப்பியிருக்கும் பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.18,000/- வருகிறது. நீங்கள் குலுக்கலில் வெற்றி பெற்றிருப்பதால், பத்தாயிரம் ரூபாய் தள்ளுபடி. மீதம், ரூ.8,000/- மட்டும் கட்டினால் போதும். பணத்தை தயார் செய்து வைத்திருங்கள். நாளையே, பொருளை அனுப்பி வைக்கிறோம். பொருளை பெற்றுக் கொண்டதும் பணத்தை செலுத்துங்கள் போதுமானது.” என்று நம்பிக்கையாக பேசியிருக்கிறார்கள்.
இதுவரையில், சாந்தாவுக்கு எந்த சந்தேகமும் வரவில்லை. பொருளை வாங்கிக் கொண்டுதானே, பணத்தைக் கட்டப்போகிறோம் என்பதாகக் கருதியிருக்கிறார். அவர்கள் வருவதாக சொன்ன மறுநாளில், நூறுநாள் வேலைக்கு கிளம்பிவிடுகிறார் சாந்தா. பக்கத்து வீட்டில் கடன் வாங்கியிருந்த ரூ.8000/-த்தை வீட்டில் வைத்துவிட்டு, பணம் வைத்த இடத்தை தனது மகனிடமும் காட்டி ”பத்திரமாக பார்த்துக்கொள். பொருள் ஏற்றி கொண்டு வந்தால் கூப்பிடு வருகிறேன்.” என்று சொல்லிவிட்டு வேலைக்கு கிளம்பியிருக்கிறார், சாந்தா.
சற்று நேரத்தில், அதே கம்பெனி ஆட்கள் இருவர் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். ஆறாம் வகுப்பு பயிலும் அவரது மகனிடம், பணத்தைக் கேட்டிருக்கிறார்கள். அவர் அவரது அம்மாவின் கைப்பேசிக்கு தொடர்புகொள்கிறார். இணைப்பு பிசியாக இருக்கிறது. “உங்க அம்மாகிட்ட பேசிட்டோம். அவங்க கிட்ட எங்க மேனேஜர்தான் பேசிகிட்டிருக்கிறார். நீ பணத்தை கொடு தம்பி. வண்டி பின்னாடி வந்துகிட்டு இருக்கிறது.” என்பதாக பேச, அந்த சிறுவனும் பணத்தை எடுத்துக் கொடுத்திருக்கிறான்.
பிறகு, சாந்தா வீட்டிற்கு வந்து, மேற்படி நிறுவனத்தாரிடமும், ”பொருள் இன்னும் வரவில்லை. அதற்குள் பணத்தை வாங்கிவிட்டு போய்விட்டீர்களே?’’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு, “ஒவ்வொரு ஊரிலும் குலுக்கலில் வெற்றி பெற்றவர்களுக்கான பொருளை டெலிவரி செய்து கொண்டு வருகிறார்கள். இப்போது, வண்டி நெய்குளம் கிராமத்திற்கு வந்துவிட்டது. இன்னும் அரை மணி நேரத்திற்குள் வந்து சேர்ந்துவிடும். பயப்படாதீர்கள்.” என்று ஆறுதல் சொல்லியிருக்கிறார்கள்.
சாந்தாவும் அவர்களின் பதிலில் சமாதானம் அடைந்து, அவர்கள் சொன்னபடியே அரை மணி நேரம் கழித்து தொடர்பு கொண்டிருக்கிறார். தொடர்புகொண்ட எண் சுவிட்ச் ஆஃப். சரியென்று, இடைப்பட்ட இரண்டு நாளில் அவர்கள் தொடர்புகொண்ட மூன்று எண்களிலுமே, (7448336021 – 9531420291 – 7845592761) தொடர்பு கொண்டிருக்கிறார். தொடர்ந்தாற்போல மூன்று எண்களுமே சுவிட்ச் ஆஃப். அவர்களின் பேச்சை நம்பி மோசம் போனோமென்று அப்போதுதான் சாந்தாவுக்கே உறைத்திருக்கிறது.
காணக்கிளியநல்லூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைந்து சென்று புகார் அளிக்க சென்றிருக்கிறார். வழக்கம்போல, ”போலீசும் இந்த காலத்திலும் இப்படியா?” என்று புத்திமதி சொல்லி, ஊரில் வந்து விசாரிக்கிறோம் என்பதாக சொல்லியனுப்பியிருக்கிறார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக, காணக்கிளியநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமியிடம் பேசினோம். “முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் வந்தால் அவர்களைப் பற்றி போதுமான அளவுக்கு தெரிந்து கொண்டு பின்னர் பணத்தை முதலீடு செய்யுங்கள் என்று தொடர்ந்து எச்சரித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.. அதிலும் குறிப்பாக, ”சலுகை, தள்ளுபடி, ஆஃபர்” என்று சொன்னாலே, அதில் ஏதோ ஆபத்து இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டுமென்பதையும் பாடமாக படித்துக் கொண்டிருக்கிறோம். ஆனாலும், மக்கள் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த புகாரை உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்.’’ என்றார்.
இதுபோல, எத்தனை ஊரில் ஏமாற்றியிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. குடும்பத்தோடு தீபாவளி பண்டிகை கொண்டாட வேண்டிய நேரத்தில், ”ஆஃபருக்கு” ஆசைபட்டு கடன் வாங்கி கட்டிய பணத்தை இழந்துவிட்டு போலீஸ்டேஷனுக்கு புகாரும் கையுமாக அலைந்து கொண்டிருக்கிறார் பாதிக்கப்பட்ட சாந்தா, இதுபோன்ற மோசடி நபர்களிடமிருந்து பொதுமக்கள்தான் விழிப்புணர்வோடு இருந்தாக வேண்டும் என்பதையே, இந்த மோசடி சம்பவம் உணர்த்தியிருக்கிறது.
– ஆதிரன்.