நியோமேக்ஸ் – மோசடியாக பிக்செட் டெபாசிட்டாக வசூல் செய்த பணம் எங்கே ?
நியோமேக்ஸ் : மோசடியாக பிக்செட் டெபாசிட்டாக வசூல் செய்த பணம் எங்கே ? பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களைக் காட்டி வசூல் செய்த நியோமேக்ஸ் நிறுவனம், அரசுத்துறை வங்கிகளைப் போல பிக்சட் டெபாசிட் திட்டங்களையும் கைவசம் வைத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நிரந்தர வைப்பு நிதிகளுக்கும்கூட, பல்வேறு கவர்ச்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தியதுதான் இதில் வேடிக்கையான விசயம்.
பிக்சட் டெபாசிட் திட்ட மோசடி குறித்து விரிவாகவே பேசுகிறார், பொறியாளர் சிவகாசி ராமமூர்த்தி. “2019 ஆம் ஆண்டிற்கு பிறகு வசூல் செய்யும் டெபாசிட் தொகைகளுக்கு உண்டான முதிர்வுத் தொகையை திரும்ப கொடுக்கக் கூடாது என்று நன்கு திட்டமிட்டு அதற்கேற்றார் போல் பிக்செட் டெபாசிட் திட்டங்களை வடிவமைத்து தீவிரமாக செயல்படுத்தினார்கள். மோசடி நிறுவனத்தின் மோசடி மன்னர்கள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக செயல்பட்ட நிர்வாகிகள்.
டெபாசிட்தாரர்களை நம்பவைத்து ஆசை வார்த்தைகளாலும் கவர்ச்சிகரமான பல திட்டங்களாலும் பல ஆயிரம் கோடிகளை குறுகிய காலத்திற்குள் வசூல் செய்தனர். மூன்று வருடத்தில் முதிர்வுத்தொகை இரட்டிப்பு என்று இருந்ததை; அது முடிவடையும் பொழுது அதை திரும்பக் கொடுக்காமல் இருப்பதற்கு, மாற்றுத் திட்டமாக இனிமேல் இரண்டரை வருடத்தில் இரட்டிப்பு எனக் கூறி முதிர்வுத் தொகையை திரும்ப கொடுக்காமல் இரண்டரை வருட பிக்செட் டெபாசிட் திட்டத்திற்கு மாற்றிவிட்டனர்.
டெபாசிட் தாரர்களுக்கு டெபாசிட் செய்த தொகைக்கு ஏற்ப கமிசன் தொகை 7 லிருந்து 10 சதவீதம் கொடுப்பதாகக் கூறி அதை பணமாக கொடுக்காமல் அந்த தொகையை குறிப்பிட்டு, அதற்கான பாண்டுகளை (ரசீதுகளை) அந்தந்த ஏஜெண்டுகள் பெயரில் கொடுத்து விட்டார்கள். அந்த ரசீதுகள் டெபாசிட் தாரர்களிடம் இருக்கிறது. ஆனால், அதை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள இயலாத நிலையை வேண்டும் என்றே திட்டமிட்டு செய்து விட்டார்கள்.
நிறுவனம் கொடுத்த ரசீது யார் பெயரில் உள்ளதோ? அவர்கள் அல்லது, அவர்களின் குடும்ப அட்டையில் உள்ளவர்கள் கொடுக்கும் புகாரை மட்டுமே காவல் துறை ஏற்றுக் கொள்வதால், கமிசன் தொகைக்கு ஆசைப்பட்டு போட்ட டெபாசிட் தொகையையும் அதற்குரிய கமிசன் தொகையையும் திரும்பப் பெற இயலாமல் கமிசனுக்காக பெற்ற ரசீதுகளை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய இயலாமல் ஏமாற்றப்பட்டு விட்டதை அறிந்து பாதிக்கப்பட்ட டெபாசிட்தாரர்கள் மிகுந்த மன வேதனையில் உள்ளனர்.
கமிசனுக்காக கொடுத்த ரசீதுகளை வைத்திருக்கும் புகார் கொடுக்காதவர்களுக்கு, செட்டில்மென்ட்டை நிலமாக கொடுக்கும் பொழுது சேர்ந்து கணக்கிடப்படும் என்று ஆசை வார்த்தைகள் கூறி பெரும்பாலோரை புகார் கொடுக்க விடாமல் செய்து விட்டனர். ( நிலத்தின் விலையை இரண்டு மடங்காக நிர்ணயம் செய்து செட்டில்மென்ட்டை செல்வாக்குள்ள சிலருக்கு மட்டுமே செய்து முடிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்பது பலருக்கு தெரிந்த விசயம்).
மதுரை உயர் நீதிமன்றத்தின் பின்னால் உள்ள நிலம் வாங்குவதற்கு பணமாக குறைந்தது 25 இலட்சம் பிக்செட் டெபாசிட் செய்பவர்களுக்கு இரண்டு வருடத்தில் இரட்டிப்பாக கொடுக்கப்படும் என ஆசை காட்டி பல நூறு கோடிகள் வசூல் செய்தார்கள். அதற்கான முதிர்வுத் தொகையை கொடுக்காமல், அதை பல்வேறு மாற்றுத் திட்டங்களில் டெபாசிட் செய்ய வைத்து மோசடி செய்து விட்டார்கள்.
ஏஜெண்டுகளுக்கு சேர வேண்டிய கமிசன்கள் ஏஜெண்டுகளுக்கு கொடுத்து விட்டார்கள். அதுவும் அதிக காலளவு (3 வருடம் & 6 வருடம்) உடைய டெபாசிட் திட்டங்களுக்கு அதிக கமிசன், தங்க நாணயம், தங்க செயின், நல்ல பரிசுப் பொருட்களை கொடுத்தும் ஏஜெண்டுகளின் குடும்ப சுற்றுலாவிற்கான செலவுகளை மோசடி நிறுவனம் ஏற்றுக் கொண்டது.
நிறைய கூட்டங்களை கூட்டியது; விருந்து வைத்தது; பலரை சுவாரசியமாக பேச வைத்து ஆசை வார்த்தைகளால் டெபாசிட் தாரர்களை கவர்ந்தது. இது போன்று பல வகைகளில் மோசடி செய்ய வேண்டும் என்ற உள் நோக்கத்துடன் செயல்பட்டு பல ஆயிரம் கோடி பணத்தை வசூல் செய்து விட்டார்கள். அவற்றில் பெரும்பாலானவற்றை தங்கள் சுயநலத்திற்காக மறைத்து விட்டார்கள். அதை தேடும் பணியை காவல்துறை செய்யவில்லை என்ற ஆதங்கம் பாதிக்கப்பட்டவர்களிடம் இருப்பதை அறிய முடிகிறது.
மூன்று வருட கால அளவிற்கான பிக்செட் டெபாசிட் மற்றும் ஆறு வருட பிக்செட் டெபாசிட் போன்ற திட்டங்களில் டெபாசிட் செய்தவர்களிடம், ”டெபாசிட் திட்டத்தின் முதிர்விற்கான கால அளவு இன்னும் உள்ளது. அதனால் அதை இப்பொழுது நீங்கள் பெற இயலாது. அது முடிவடையும் காலம் வரை காத்திருக்க வேண்டும். புகார் கொடுக்காமல் இருந்தால், அந்தந்த டெபாசிட் திட்டத்திற்கு ஏற்ப கால அளவை கணக்கிட்டு செட்டில்மென்ட் செய்து கொடுப்போம்” எனக் கூறி பலரை புகார் கொடுக்க விடாமல் தடுத்து விட்டனர்.
முதிர்வு காலத்திற்கு பின் பணம் திரும்ப கேட்பவர்களிடம், ”உங்கள் பணம் திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டுமெனில், சிலரை முதலீடு செய்ய வைக்க வேண்டும் அந்தத் தொகையில் இருந்து உங்களுக்கு வர வேண்டிய தொகையை கொடுத்து விடுகிறோம்” என கட்டாயப்படுத்தி பலரை புதிய முதலீட்டாளர்கள் ஆக சேர்த்து பல நூறு கோடிகள் வசூல் செய்தார்கள்.
JV என்ற திட்டத்தின் படி செலுத்திய டெபாசிட் தொகைக்கு மிக அதிக விலை நிர்ணயம் செய்து, நிலங்களை பாதுகாப்பிற்காக அடமானம் போல் எழுதி வைக்கிறோம் என நம்பச் செய்து பல ஆயிரம் கோடிகள் வசூல் செய்தார்கள். அதன் அசல் பத்திரங்கள் நிறுவனத்திடம் உள்ளன.
பத்திரங்களில் நிறுவனத்திற்கு சாதகமாக எழுதப்பட்டுள்ளதாலும், அசல் ஆவணம் பாதிக்கப்பட்டவர்களிடம் இல்லாததாலும், ”வெறும் நகல் ஆவணங்களை மட்டுமே வைத்து ஒன்றும் செய்ய இயலாது” என பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி ”நீங்கள் புகார் கொடுக்க வேண்டாம், நாங்கள் உங்களுக்கு சில காலம் கழித்து அந்த நிலங்களை, நீங்கள் சொந்தம் கொண்டாடுவதற்கு ஏதுவாக எழுதி கொடுத்து விடுகிறோம். இல்லை, அதற்கு மாற்று நிலம் கொடுத்து செட்டில்மென்ட் செய்து கொடுக்கிறோம்” என புகார் கொடுக்க விடாமல் தடுத்துள்ளனர்.
”டெவலப்மென்ட் ஒப்பந்தம்” என்ற திட்டத்தில் பல ஆயிரம் பேரை முதலீடு செய்ய வைத்து, நூறு ரூபாய் பத்திரத்தில் பல பக்கங்களில் நிறுவனத்திற்கு சாதகமாக ஆங்கிலத்தில் எழுதி, நிர்வாக இயக்குனர் கையொப்பத்துடன் கொடுத்துள்ளனர். ஏதாவதொரு உதவாத பினாமிகள் பெயரில் உள்ள நிலத்தை மிக அதிக விலைக்கு நிர்ணயம் செய்து விடுவார்கள். அந்த நிலத்தை முதலீட்டாளர்களுக்கு கொடுக்க மாட்டார்கள். காண்பிக்கவும் மாட்டார்கள்.
ஆனால், அந்த நிலத்தை பிளாட் போட்டு விற்பதற்கு ஏதுவாக தயார் செய்து, அதற்கு அனுமதி பெற்று அதனை நிறுவனம் குறிப்பிட்ட விலைக்கு, முதலீட்டாளர்கள் விற்றுக் கொடுத்தால் நிறுவனத்திற்கு இவ்வளவு பங்கு, முதலீட்டாளர்களுக்கு இவ்வளவு பங்கு என குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த திட்டத்தின் படி பல ஆயிரம் கோடிகளை வசூல் செய்துள்ளார்கள்.
பாதிக்கப்பட்டவர்கள் டெபாசிட் என்ற பெயரில் எங்களிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் எனக் கேட்டால், ”உங்கள் முதலீட்டை டெவலப்மென்ட் திட்டத்தில் முதலீடு செய்துள்ளோம். DTCP approval வந்த உடன் நிலத்தை விற்று பணமாக கொடுத்து விடுகிறோம்” என காலம் கடத்தி மோசடி செய்து விட்டனர்.
பத்திரத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது என புரியாதவர்கள் கேட்ட பொழுது, ஏஜெண்டுகள், அதனை நிறுவனம் அவர்களின் நிர்வாக வசதிக்காக இப்படி எழுதிக் கொடுத்திருக்கிறார்கள் இது ஒரு ரசீது மட்டுமே, உங்களுக்கு இரட்டிப்பு பணம் இரண்டரை ஆண்டுகளில் கொடுத்து விடுவோம் என ஆசை வார்த்தைகளைக் கூறி அப்பாவி மக்களை நம்ப வைத்து விட்டார்கள். ஆனால், கூறியபடி ஒன்றும் கொடுக்காமல் முதலீட்டாளர்களை நிறுவனத்தார்கள் ஏமாற்றி விட்டார்கள்.
இவர்களில் பலரை புகார் கொடுக்காமல் இருந்தால் எதாவது ஒரு வகையில் உங்களுக்கு செட்டில்மென்ட் கிடைக்கும் என நம்பவைத்து பல ஆயிரம் பாதிக்கப்பட்டவர்களை புகார் கொடுக்க விடாமல் தடுத்து விட்டனர்.” என்பதாக தெரிவிக்கிறார், பொறியாளர் சிவகாசி ராமமூர்த்தி.
– அங்குசம் புலனாய்வுக்குழு.
உங்க பிளைப்புக்கு வேண்டி அடுத்தவர்களுடைய வாழ்க்கையில் விளையாடுவது சரி இல்லை.இதனால் முதலீட்டார்களை ஒரு பதட்டத்திற்கு உட்படுத்தி உங்க வியாபாரம் பெருக இது ஒரு வழி.உங்களுக்கும் நியோமேக்ஸ்க்கும் ஒரு வித்தியாசம் இல்லை.
பணத்திற்கு விபச்சாரம் செய்யும் பொறம்போக்கு பிச்சைக்கார எச்சக்கல மானங்கெட்ட விபச்சார ஊடகம் அங்குசம்
அங்குசம் சேவைகளுக்கு நல் வாழ்த்துக்கள்