அமைச்சர்களின் பெயரில் வசூல் வேட்டை ஆதாரத்துடன் சிக்கிய மோசடி மன்னன்… விரைவில் கைது?

0

அமைச்சர்களின் பெயரில் வசூல் வேட்டை ஆதாரத்துடன் சிக்கிய மோசடி மன்னன்… விரைவில் கைது?

“எனக்கு அமைச்சர்களை தெரியும்… ஸ்லம் க்ளியரன்ஸ் போர்டு டிபார்ட்மெண்டில் உயரதிகாரியா இருக்கேன்… எல்லாருக்கும் ட்ரான்ஸ்ஃபர் போஸ்டிங் போடுறதே நான் தான்…ஸ்லம் க்ளியரன்ஸ் போர்டுல வீடு வேணுமா 2 லட்ச ரூபாய் கொடுங்க, முடிச்சு கொடுக்கிறேன்” என கெத்தாக வலம் வரும் பாபு என்கிற ராஜேந்திரன் ராமுவைத்தான் கொத்தாக தூக்க இருக்கிறது குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை.

ஸ்ரீ சத்யா புரோமோட்டர்ஸ்

சென்னை புதுவண்ணாரப் பேட்டையை சேர்ந்தவர் ரஞ்சிதன். இவரிடம் “ஸ்லம் க்ளியரன்ஸ் போர்டுல வீடு வாங்கி தரணுமா? எனக்கு தெரிஞ்ச உயரதிகாரி இருக்காரு” எனக் கூறி சினிமா ஸ்டண்ட் கலைஞர் மனோ என்பவர் மூலம் அறிமுகம் ஆனவர் தான் பாபு என்கிற ராஜேந்திரன் ராமு. 2 வருடங்களுக்கு முன்பு ரஞ்சிதனிடம் 15,000 ரூபாய் முன் பணத்தை, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வைத்து வாங்கிய ராஜேந்திரன் ராமு, தன் பெயர் பாபு என்றும் தான் ஸ்லம் போர்டில் உயரதிகாரியாக இருப்பதாகவும் கெத்தாக அறிமுகப்படுத்திகொண்டுள்ளார். ஆனால், சில நாட்கள் கழித்து இன்னும் 1 லட்ச ரூபாய் தரவேண்டும் என ரஞ்சிதனிடம் கேட்டுள்ளார்.

ஆனால், ரஞ்சிதன் விசாரித்த போது தான் பாபு என்கிற ராஜேந்திரன் ராமு பலரிடமும் 1 லட்ச ரூபாய், 2 லட்ச ரூபாய் என பணம் வாங்கிக்கொண்டு ஸ்லம் க்ளியரன்ஸ் போர்டில் வீடு வாங்கித் தராமல் ஏமாற்றிவருவது தெரியவந்து அதிர்ச்சி ஆகியிருக்கிறார். இதனால், “வீடெல்லாம் வேண்டாம், நான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்தால் போதும்” கேட்டுள்ளார் ரஞ்சிதன். ஆனால், ‘எதுவா இருந்தாலும் மனோவிடம் பேசுங்க… அவர் மூலமாத்தானே பணம் கொடுத்தீங்க’ என்று சொல்லி தொடர்ந்து டிமிக்கி கொடுத்துக்கொண்டே இருந்துள்ளார் ராஜேந்திரன் ராமு.

- Advertisement -

இதேபோல், சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த சிலரிடமும் வீடு வாங்கி தருவதாக லட்சக் கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வருவதும் தெரியவந்தது. ஏமாற்றப்பட்டவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டால் “சொந்த ஊர் தேவக்கோட்டை, ஹார்ட் ஆபரேஷன் செய்துட்டு ரெஸ்ட்டுல இருக்கேன். சென்னைக்கு வந்ததும் திருப்பி கொடுத்துடுறேன்” என்று சொல்லி சொல்லியே, பணம் கொடுத்தவர்களுக்கு ஹார்ட் பீட்டை எகிறவைத்து மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறார் ராஜேந்திரன் ராமு. அதையும் மீறி கேட்டால், “எனக்கு அமைச்சரை தெரியும்.

போலீஸில் புகார் கொடுத்தாலும் என்னை ஒன்றும் செய்யமுடியாது” என்று திமிறாக பேசி மிரட்டியிருக்கிறார். இந்த நிலையில்தான்,பணம் வாங்கி ஏமாற்றியதற்கான ஆடியோ ஆதாரங்களுடன் வசமாக சிக்கியிருக்கிறார் ராஜேந்திரன் ராமு. அந்த ஆடியோவில் ஸ்லம் க்ளியரன்ஸ் போர்டில் வீடு வாங்கி தருவதாகக்கூறி பணம் வாங்கிக்கொண்டு வீடு வாங்கி தராமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றிக்கொண்டிருக்கும் ராஜேந்திரன் ராமுவின் ஒப்புதல் வாக்குமூலம் இருப்பதை உறுதிசெய்யமுடிந்தது.

யார் இந்த ராஜேந்திரன் ராமு?

பாபு என்கிற ராஜேந்திரன்
பாபு என்கிற ராஜேந்திரன்

விசாரிக்க ஆரம்பித்த போது தான் அவர் குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவர ஆரம்பித்தன. அதாவது, சதுரங்க வேட்டை மோசடி மன்னன் போல… பணம் வாங்குகிறவர்களிடம் பாபு, ராஜு என பல்வேறு பெயர்களை சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டு ஏமாற்றும் இவரது உண்மையான பெயர் ராஜேந்திரன் ராமு. அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், பெரிய கருப்பன் பெயர்களை பயன்படுத்தி வசூல் வேட்டை நடத்துவதுதான் இந்த ராஜேந்திரன் ராமுவின் முழுநேர பணி. அந்த பணத்தை வைத்து வட்டிக்கு விட்டு சம்பாதிப்பதோடு, சென்னை எம்.ஜி.ஆர் கன்னிகாபுரத்தில் புதிய வீட்டையே கட்டிவிட்டார்.

4 bismi svs

தேவக்கோட்டையில் இருப்பதாக பொய் சொல்லிக்கொள்ளும் ராஜேதிரன் ராமு, சென்னை கே.கே. நகர் அருகிலுள்ள எம்.ஜி.ஆர் நகரில்தான் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 50/81 விஜயராகவபுரம் 4 வது தெருவிலுள்ள இவரது வீட்டை வாடகைக்கு விட்டிருப்பதோடு, பொதுமக்களிடம் ஏமாற்றிய பணத்தில் சிவன் பார்க் அருகிலுள்ள அருகிலுள்ள கன்னிகாபுரத்தில் புது வீடு கட்டி குடியேறியிருப்பதும் தெரியவந்தது.

மேலும் இவர் குறித்து ஸ்லம் க்ளியரன்ஸ் போர்டு எனப்படும் தமிழ்நாடு நகர் புற மேம்பாட்டு வாரிய ( Tamil Nadu Urban Habitat Development Board) அலுவலகத்தில் விசாரித்தபோது இப்படிப்பட்ட நபர் இங்கு பணிபுரியவில்லை என்றவர்கள், “குடிசை மாற்று வாரியம்தான் தற்போது தமிழ்நாடு நகர் புற மேம்பாட்டு வாரியம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக, ஸ்லம் க்ளியரன்ஸ் போர்டில் வீடு விண்ணப்பிப்பவர்கள் ஆண்டுக்கு 3 லட்ச ரூபாய் குறைவாக வருமானம் இருப்பதை உறுதி சான்று அளிக்கவேண்டும்.

மேலும் விண்ணப்பதாரருக்கு நிலமோ, வீடோ இருக்கக்கூடாது. வாடகை வீட்டில் வசிப்பவராக இருக்கவேண்டும். ஏற்கனவே, குடிசை மாற்று வாரியத்தில் வீடு எதுவும் பெற்றிருக்கக்கூடாது. ஆதார் உள்ளிட்ட விவரங்களோடு முதலமைச்சரின் தனிப்பிரிவிலேயே (CM Cell) ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பித்த பிறகு ஒரு எண் கொடுப்படும். அந்த எண்ணை கொண்டுவந்து எண்- 5 காமராஜர் சாலை, சேப்பாக்கம் (விவேகாநந்தர் இல்லம் அருகில்) சென்னை – 600 005 முகவரியிலுள்ள தமிழ்நாடு நகர் புற மேம்பாட்டு வாரியத்திற்கு வந்து அலுவலர்களிடம் விவரங்களை கேட்டுக்கொள்ளலாம். tnuhdb.tn.gov.in என்கிற இணையதளத்திலும் முழுமையான விவரங்களை தெரிந்துகொள்ளலாம். அப்படியிருக்க, தன்னை அரசு அதிகாரி என சொல்லிக்கொண்டு ஏமாற்றும் ராஜேந்திரன் ராமு போன்றவர்களிடம் யாரும் பணம் கொடுத்து ஏமாறவேண்டாம்” என எச்சரிக்கிறார்கள்.

அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், பெரியகருப்பன் உள்ளிட்டோரின் பி.ஏ.க்களிடம் ராஜேந்திரன் ராமு குறித்து விசாரித்தபோது, அமைச்சர்களுக்கும் ராஜேந்திரன் ராமு வசூல் வேட்டை நடத்தி ஏமாற்றுவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கலாம். யாருடைய தலையீடும் இருக்காது” என்றார்கள்.

குற்றச்சாட்டுக்குள்ளான ராஜேந்திரன் ராமுவை தொடர்புகொண்டு பேசியபோது, பணம் வாங்கியதை ஒப்புக்கொண்டவர் விரைவில் திருப்பி தருவதாக கூறியதோடு அரசு அலுவலகத்துக்கு செல்லும் அதிகாரியைப்போலவே பரபரப்பாக காட்டிக்கொண்டு ஃபோனை துண்டித்தார், ஃபோன் வயர் பிய்ஞ்சு ஒரு வாரம் ஆச்சு என அறியாத ராஜேந்திரன் ராமு.

இந்தநிலையில், ராஜேந்திரன் ராமு வசிக்கும் சென்னை எம்.ஜி.ஆர் நகர் எல்லைக்குட்பட்ட கே.கே.நகர் காவல்நிலைய குற்றத் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஞானபிரகாசியிடம் நாம் பேசியபோது, “பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியவர் கே.கே. நகர் லிமிட்டில் இருந்தாலும் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் இதே பகுதியில் இருந்தால் அவர் மீது புகார்களை கொடுக்கலாம்.

ஏமாற்றப்பட்டவர்கள் எந்த ஏரியாவில் வசிக்கிறார்களோ அந்த ஏரியாவிலுள்ள காவல்நிலையத்தில் புகார் அளிக்கலாம். அதேபோல், எந்த ஏரியாவில் வைத்து அந்த நபர் பணம் வாங்கினாரோ அந்த ஏரியா லிமிட்டிலுள்ள காவல்நிலையத்திலும் புகார் அளிக்கலாம். விசாரித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் அதிரடியாக.

முதலமைச்சரின் தனிப்பிரிவு, தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி, சென்னை போலீஸ் கமிஷனர், சம்பந்தப்பட்ட காவல்நிலையங்கள் என ராஜேந்திரன் ராமுவிடம் பணம் கொடுத்து ஏமாற்றப்பட்ட பொதுமக்கள் புகார்களை கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருவதால், எந்த நேரத்திலும் மோசடி மன்னன் ராஜேந்திரன் ராமுவும் அவருக்காக பணம் வசூலித்து கொடுத்தவர்களும் கைது செய்யப்படலாம் என்கிறது ஏமாற்றப்பட்ட தரப்பு.

-வெற்றிவேந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.