மோசடி கதைகள் ! பாகம் – 01
ஒரு காலத்தில் நடுத்தர மக்களின் சேமிப்பு பழக்கம் என்றாலே அஞ்சலகமும் எல்.ஐ.சி.யும் என்பதாகத்தான் இருந்தது. சாமான்ய மக்களின் சேமிப்பு சமையலறையின் அஞ்சறை பெட்டிகளும், கை தவறினால் சிதறிப்போகும் மண்ணாலான உண்டியல்களுமாக இருந்தது. அன்றாடத் தேவைக்கு அதிகமான பணமிருந்தாலும், அதை ஏதேனும் ஒரு அரசுடமையாக்கப்பட்ட வங்கியிலோ அல்லது நிலத்தில் போடுவது என்பதுதான் அதிகபட்ச ‘முதலீடு’ என்பதாக இருக்கும்.
இன்றைய கேஜட் உலகத்தில், விரல் நுனியில் ஆன்லைன் டிரேடிங் சர்வசாதாரணமாக விளையாடுகிறது. பங்குச்சந்தைகளில் முதலீடு, தங்கப் பத்திரங்களில் முதலீடு, பிட்காயின் என முதலீட்டின் எல்லை விரிவடைந்திருக்கிறது. செலவை சிக்கனமாக்கி எதிர்காலத் தேவைக்காக சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் மாறி, இன்று ஒரே நொடியில் கோடீஸ்வரனாகிவிட மாட்டோமா என்ற பேராசை பிடித்தாட்டுகிறது. இந்த பேராசைக்கு பாமரன் படிப்பறிவு பெற்றவன் என்ற பாகுபாடு கிடையாது.
‘ஆசையைத் தூண்டும் வாய்வீச்சு’ ஒன்றையே முதலீடாக்கி கல்லா கட்டிவரும் கம்பெனிகள் கொழிக்கும் காலமாக மாறியிருக்கிறது. ஊருக்கு ஊர் கம்பெனிகளின் பெயர்கள் மாறுபடுகிறது. நபர்கள் வேறுபடுகிறார்கள். பணம் கட்டி ஏமாந்த மக்கள் வீதிக்கு வருவது மட்டும் மாறாமல் தொடர்கிறது. அதிகவட்டிக்கு ஆசைப்பட்டதுதான் இந்த ‘ஏமாந்த கதைகளின்’ அடிநாதமாகவும் இருக்கிறது.
தீபாவளி சீட்டு, பண்டிகைக்கால சீட்டு, நகைச்சீட்டு, மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி ஏமாற்றி விட்டார்கள் என்பதில் தொடங்கி, வாயில் நுழையாத பெயர்களை கொண்ட ஏகப்பட்டு நிறுவனங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. ”நீ அவல் கொண்டு வா, நான் உமி கொண்டு வருகிறேன்” என்ற கதையாக, பங்குச்சந்தையில் முதலீடு செய்து பணத்தை இரட்டிப்பாக்கித் தருகிறேன் பேர்வழி என்ற பெயரில் பெருங்கும்பலே இயங்கி வருகிறது.
முன்பின் தெரியாத நபர்களை நம்பி நாம் ஏலச்சீட்டு கட்டிவிடுவதில்லை. நேரடி பரிச்சயம் இல்லாவிட்டாலும்கூட, ஏதோ ஒருவகையில் உறவினராகவோ, நண்பர்களாகவோ, அல்லது நமது நம்பிக்கைக்குரியவர்கள் பரிந்துரைக்கும் நபர்களாகவோத்தான் இருப்பார்கள். ஆனால், மற்ற நிதி நிறுவனங்களைப் பொறுத்தவரையில் இதுபோன்ற நேரடி அறிமுகம் அவசியமில்லாத ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அந்நிறுவனத்தின் முகவர்கள்தான் நம்மோடு நேரடி தொடர்பில் இருக்கிறார்கள். முகவர்களாக இருக்கும் அந்த ‘நம்பிக்கைக்குரியவர்களை’ நம்பித்தான் முதலீடும் செய்கிறோம்.
ஒருவேளை அந்நிறுவனம் ஏமாற்று நிறுவனமாக அமைந்துவிட்டால், நம்மால் அதிகபட்சம் ”கட்டிய பணத்தை திருப்பிக்கொடு” என்று முகவர்களின் சட்டைக் காலரைத்தான் பிடிக்க முடியும். ”நானே அந்நிறுவனத்தை நம்பி இவ்வளவு முதலீடு போட்டிருக்கிறேன். என்னையும் சேர்த்துதான் ஏமாற்றியிருக்கிறது. நான் என்ன செய்ய?” என அந்த முகவரும் கையை விரித்துவிடுவார். பிறகு, அந்த ஏமாற்றுக் கம்பெனிக்கு எதிராக போலீசில் புகார் கொடுத்து, நீதிமன்றத்தை நாடி போட்ட பணத்தை திரும்பப் பெறுவதற்குள் நாயலைச்சல், பேயலைச்சல் பட வேண்டியதாகிவிடுகிறது.
கண்ணுக்கு முன்னே நிற்கும் முகவரை மட்டும் நம்பி, அவர்கள் அளந்துவிடும் கதைகளை நம்பி, கண்ணை மூடிக்கொண்டு முதலீடு செய்துதான் பிரச்சினையில் சிக்கிவிட்டார்கள் என்று சொல்வது பாமரத்தனமானது. மேஜிக் காட்டும் சாகசக்காரனை போல, நீங்கள் முதலீடு செய்யும் பணம் எப்படியெல்லாம் பல மடங்காகும் என்று கற்பணைக்கெட்டாத கதைகளை அள்ளிவிட்டபோதும், கனவுலகைவிட்டு அகலாமல் வாயைப்பிழந்து நின்ற தருணம் முதல் சறுக்கல். தொடக்கம் அவன் என்றாலும், முடிவாக உங்களை இயக்கியது ”பேராசை”தான் என்பதை மறுக்க முடியுமா?
வாழ்வியல் நெறி குறித்தும் வாழ்வியல் அறம் குறித்தும் வள்ளுவன் அன்றே பல குறள்களை படைத்திருக்கிறான். அதையெல்லாம் படித்து புரிந்துகொள்ள நமக்கு ஏது நேரம்?
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல். (குறள் – 363)
”தீமை விளைவிக்கும் ஆசைகளை வேண்டாம் என்று புறக்கணிப்பதைப் போன்ற செல்வம் இங்கு எதுவுமில்லை; வேறு எங்கும்கூட அத்தகைய ஒப்பற்ற செல்வம் இல்லையென்றே கூறலாம்.
(குறள் விளக்கம் – கலைஞர் மு.கருணாநிதி)
”பேராசை” என்ற சொல்லை காட்டிலும், ”தீமை விளைவிக்கும் ஆசைகள்” என்ற சொல்லாடல் இங்கே எவ்வளவு அர்த்தம் பொதிந்ததாக இருக்கிறது.
(தொடர்ந்து பேசுவோம்)
— வே.தினகரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.