ஆன்லைன் மோசடி : ” மோடி ஸ்காலர்ஷிப் “ கிராமப்புற மாணவர்களுக்கு குறி !
கல்வி உதவித்தொகை வழங்குகிறோம் என்ற பெயரில் ஆன்லைன் வழியே அரங்கேற்றப்படும் மோசடி கிராமப்புற பெற்றோர்களை பீதியில் உறைய வைத்திருக்கிறது. திருச்சி – தஞ்சை மாவட்டத்தின் எல்லையோரம் அமைந்திருக்கும் அந்த கிராமத்தில் வசிக்கும் வசந்தாவுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அழைப்பு ஒன்று வந்துள்ளது.
பதினோராம் வகுப்பு பயிலும் அவரது மகனின் பெயர், படிப்பு, பள்ளி உள்ளிட்டு அனைத்து தகவல்களையும் சொல்லி, “உங்கள் மகனுக்கு மோடி ஸ்கீம்ல ஸ்காலர்ஷிப் அலாட் ஆகியிருக்கு. உங்க பேங்க் அக்கவுண்ட்ல மினிமம் 5,000 இருப்பது போல வைத்துக் கொள்ளுங்கள்” என்று மட்டும் கூறியிருக்கிறார்கள். “மகனின் அனைத்து தகவல்களையும் சரியாக சொல்கிறார்கள். பணம் அனுப்பி வையுங்கள் என்றெல்லாம் கேட்கவும் இல்லை. அக்கவுண்ட்லதானே பணம் இருக்கனும்னு சொல்றாங்க. அதிகாரிகளாகத்தான் இருப்பார்கள்.” எனக் கருதி அவர்கள் சொன்னதுபோலவே, அக்கவுண்டில் 5,000 ரூபாயை இருப்பு வைத்திருக்கிறார், வசந்தா.
சிறிது நேரத்தில் வந்த மற்றொரு அழைப்பில், “நாடு முழுவதுக்குமான ஸ்கீம் இது. ஒரு நாளைக்கு 2000 பேருக்குத்தான் பணம் ஏறும். ஸ்கீம் சீக்கிரம் முடிஞ்சிரும். நாங்க சொல்ற மாதிரி செய்யுங்கள்.” என்று சில வழிமுறைகளை சொல்லியிருக்கிறார்கள்.
வசந்தாவும் அதை நம்பி, அவர்கள் சொன்னதுபோலவே செய்தும் இருக்கிறார். அதாவது வழக்கமாக, நம்மிடம்தான் ஓ.டி.பி. உள்ளிட்ட பாஸ்வேர்டுகளை கேட்பார்கள். இவர்களோ, வித்தியாசமாக, ”நாங்கள் ஒரு எண் சொல்கிறோம். அதனை பதிவிடுங்கள்.” என்றிருக்கிறார்கள்.
மக்களே உஷார்! கல்வி உதவித்தொகை போன் கால்! வெட்டிப் பேச்சு!!
அவர்கள் சொன்னபடி, அந்த எண்ணை பதிவிட்டதுதான். அவர்கள் ஓ.டி.பி.போல சொன்னது 6406. அதே சமயம் வசந்தாவின் அக்கவுண்ட்டிலிருந்து ரூபாய் 6406.00 அபேஸ் ஆகியிருந்தது. அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்திருக்கிறார், வசந்தா. தஞ்சை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துவிட்டு, போலீசின் நடவடிக்கைக்காக காத்திருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசாரிடம் பேசினோம். “நாங்களும் எவ்வளவுமுறை சொன்னாலும் மக்களுக்கு புரிவதில்லை. ஏதோ ஒன்றை சலுகையாகவோ, இலவசமாகவோ கொடுக்கிறேன் என்றாலே முதலில் சந்தேகிக்க வேண்டும். ஏதோ கிடைக்கிறதே என்ற ஆசையில் அவர்கள் சொல்வதைப் போல செய்து பணத்தை இழந்துவிட்டு எங்களிடம் வந்து நிற்கிறார்கள். குறைந்தபட்சம் பள்ளிக்கூடத்தில்கூட பெற்றோர்கள் விசாரிப்பதில்லை.
ஆன்லைனில், இலவச லேப்டாப் சலுகைக்கு விண்ணப்பிக்க என்று சொல்லி மோசடியான இணைப்பை உலவ விட்டிருக்கிறார்கள். அதை நம்பி பலரும் தங்களது ஆதார் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பதிவு செய்துவிடுகிறார்கள். அந்த தகவல்களை கொண்டே, அடுத்த மோசடியில் ஈடுபடுகிறார்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஒருவேளை பணத்தை இழந்துவிட்டாலும், நாடு முழுவதுக்குமான புகார் எண் 1930 ஐ அழைத்துவிட வேண்டும். அவர்கள் கேட்கும் விவரங்களை தெரிவித்தால், ஏமாற்றுக் கும்பலின் அக்கவுண்டை முடக்கிவிடுவார்கள். இதுபோன்ற மோசடியில் ஈடுபடுவர்கள் பெரும்பாலும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் எங்களுக்கும் பெரும் சவாலாகவே இருக்கிறது.” என்கிறார்கள்.
— ஆதிரன்.