தி சென்னை சில்க்ஸ் உணவு கூடத்திற்கு சீல்!
தி சென்னை சில்க்ஸ் உணவு கூடத்திற்கு சீல்!
திருச்சியில், சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்களை வழங்கி வருதாக பொதுமக்களிடம் வந்த புகாரை அடுத்து, நேற்று [18.06.2023]ந் தேதி திருச்சி மாநகரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையால் நடத்தப்பட்ட சோதனைகளில் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் 30 வருடங்களாக இயங்கிவரும் மைக்கேல்ஸ் ஐஸ்கிரீம் கடைக்கு சீல் வைக்கபட்டது. மேலும், தமிழகம் முழுவதும் ஜவுளி மற்றும் தங்க நகை தொழிலில் கோலாச்சும் தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் திருச்சி கிளையில் மூன்றாவது தளத்தில் இயங்கி வரும் உணவு தயாரிப்பு கூடத்திற்கும் சீல் வைக்கப்பட்டது.
இச்சோதனையில், இந்த இரண்டு இடங்களிலும் உணவு தயாரிக்கும் இடங்கள் மிகவும் அசுத்தமாகவும், சுகாதாரமற்ற முறையிலும் எலிகள், கரப்பான்பூச்சிகள் வந்து செல்லும் வண்ணம் இருந்ததும் கண்டறியப்பட்டு உணவு விற்பனை தற்காலிகமாக தடை செய்யப்பட்டது. தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி இல்லாமல் இருந்த உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. குறைகளை நிவர்த்தி செய்த பின்னரே உணவு விற்பனை செய்யப்பட வேண்டும் என்று உத்தரவு இடப்பட்டு சட்டபூர்வ உணவு மாதிரியும், அபராத தொகையும் விதிக்கப்பட்டது.
இதனையடுத்து, நந்திகோயில் அருகில் உள்ள பிரபல டீ கடை மற்றும் பேக்கரியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை கண்டறிந்து பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
சாலையோர உணவு கடைகள் மற்றும் சிறிய உணவங்களில் பெரும்பாலோனோர் சுகாதாரமாக இருக்காதோ உடல் நிலை பாதிப்பு வந்து விடுமோ என்ற பயத்தில் விலையை பொருட்படுத்தாமல் பெரிய கடைகளை நாடுகின்றனர். இத்தகைய பெரிய நிறுவனங்களே தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி இல்லாத உணவு பொருட்கள் விற்பது, சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பது பொதுமக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிறுவனங்கள் துவங்கும் போது தரம், சுவைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மக்கள் மனதில் இடம் பிடித்த பிறகு காற்றில் விடுவது பெரும் வேதனையை அளிக்கிறது.
பொதுமக்கள் உணவு விற்பனை செய்யும் இடங்களில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி இல்லாமல் விற்பனை செய்தாலோ, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்தாலோ 99 44 95 95 95 மற்றும் 95 85 95 95 95 எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்.