அந்தமானில் தமிழ் ஹைக்கூ இரண்டாவது உலக மாநாடு !
அந்தமானில் தமிழ் ஹைக்கூ இரண்டாவது உலக மாநாடு
தூண்டில் ஹைக்கூ கவிதை இதழ், அந்தமான் தமிழர் சங்கம், இனிய நந்தவனம் இலக்கிய மாத இதழ் மற்றும் தமிழ் ஹைக்கூ கவிதையாளர்கள் இயக்கம் இணைந்து நடத்தும் தமிழ் ஹைக்கூ இரண்டாவது உலக மாநாடு அந்தமான் தமிழர் சங்கத்தில் நடைபெற்றது. திருவள்ளுவர் மற்றும் தமிழ்த்தாய் சிலைகளுக்கு மாலை அணிவித்து மாநாடு தொடங்கியது. தூண்டில் ஹைக்கூ கவிதை இதழ் மற்றும் இனிய நந்தவனம் இதழ் ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் வரவேற்புரையாற்றினார்.
பாலசாகித்திய அகாதெமி விருதாளர் மு.முருகேஷ் மாநாட்டு பங்கேற்பாளர்களை அறிமுகப்படுத்தி மாநாட்டு நோக்கவுரையாற்றினார்.அந்தமான் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் திரு.கணேசன் தொடக்க உரையாற்றி தமிழ் ஹைக்கூ மாநாட்டு மலரை வெளியிட்டார்.
இதழின் முதல் பிரதியை கல்வியாளர் எமர்சனும், இரண்டாம் பிரதியை கவிஞர் திருவள்ளுவரும் பெற்றுக் கொண்டார். திசை எட்டும் இதழின் ஆசிரியர் மூத்த மொழிபெயர்ப்பாளர் குறிஞ்சிவேலன் வாழ்த்துரையாற்றினார். நமது வாழ்க்கையில் திசைஎட்டும் ஹைக்கூ சிறப்பு இதழின் நேர்காணல், கட்டுரைகள் குறித்த மேற்கோளுடன் உரையாற்றினார். மாநாட்டு சிறப்பு அழைப்பாளர் கல்வியாளர் தங்கம் மூர்த்தி சிறப்புரையாற்றினார்.
அவர் தம் சிறப்புரையில், இன்றைய எதார்த்தங்களையும், சமூக அக்கறையையும், இயற்கைப் புரிதல்களையும் தேவையான செய்திகளை, தேவையான உணர்வுகளை வழங்கிவிடும் வடிவம். சின்ன விளக்கு பெரிய வெளிச்சம் ஹௌக்கூ. நல்ல சொற்களால் சூழ்ந்த சிக்கனமான ஜப்பானிய புறக்கட்டமைப்பைக் கடந்த தமிழ் ஹைக்கூக்களை தொடர்ந்து எழுதி ஹைக்கூ காலம் வசந்தமாகட்டும் என்பதைப் பதிவு செய்து எண்ணற்ற ஹைக்கூ கவிதைகளை எடுத்துக்கூறி உரையை நிறைவு செய்தார். தொடக்க விழா நிகழ்ச்சிகளை கவிஞர் பா.தென்றல் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.
– ஆதன்