புதிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு “செங்கோல்” ! அதிர்ச்சியூட்டும் பின்னணி தகவல்கள்

0

புதிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு “செங்கோல்” நிறுவப்படுகின்றது ! அதிர்ச்சியூட்டும் பின்னணி தகவல்கள்

28.05.2023ஆம் நாள் தலைநகர் தில்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைத் தலைமை அமைச்சர் மோடி திறந்து வைக்கவுள்ளார். இதற்குப் பெரும்பான்மையான எதிர்க்கட்சிகள், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைக் குடியரசுத் தலைவர் முர்மு திறந்து வைக்கவேண்டும் என்றும் அந்தத் திறப்பு விழா எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் நாள் வைத்துக்கொள்ளலாம் என்று ஆலோசனைகளை வழங்கியுள்ளன. காரணம் இந்தியத் தேசத்தின் தந்தை என்று வருணிக்கப்படுகின்ற மகாத்மா காந்தி அவர்கள் நாத்தூராம் கேட்சே என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

2 dhanalakshmi joseph
காந்தி - கோட்சே
காந்தி – கோட்சே

 

காந்தி போன்றவர்கள் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என்ற இந்துத்துவத் தத்துவத்தை உருவாக்கிய கோல்வார்க்கர் பிறந்தநாள் மே 28. அந்த நாளில் புதிய நாடாளுமன்றம் திறக்கப்படுவது மக்களாட்சிக்குப் பெருமை தராது என்றும் எதிர்க்கட்சிகள் ஆளும்கட்சிக்குக் கோரிக்கை வைத்துள்ளன. மேலும் மே 28ஆம் நாள் நடைபெறும் நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அதிமுக, பாமக, தெலுங்கு தேசம், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் நாடாளுமன்றத் திறப்பு விழாவில் கலந்துகொள்கின்றன.

- Advertisement -

- Advertisement -

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைக் குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்கவேண்டும் என்று வாதம் சமூக ஊடகங்களில் முதன்மைப்படுத்தப்பட்ட நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அந்தச் சந்திப்பில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி, புதுச்சேரி மற்றும் தெலுங்கனா மாநில ஆளுநர் தமிழிசை, ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் இச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

 

குடியரசு தலைவர்
குடியரசு தலைவர்

சந்திப்பில் பேசிய நிதி அமைச்சர், “புதிய நாடாளுமன்றத்தில் சோழர் காலத்துச் செங்கோல் மக்களவை தலைவர் இருக்கைக்குப் பக்கத்தில் தலைமை அமைச்சர் மோடியால் நிறுவப்பட உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 ஆதீனங்கள் 28ஆம் ஊர்வலமாகச் சென்று இச் செங்கோலைத் தலைமை அமைச்சரிடம் வழங்குவார்கள். அந்தச் செங்கோல் பூசை செய்யப்பட்டு, புனித நீர் தெளிக்கப்பட்டு, மக்களவையில் மோடியால் நிறுவப்படும்” என்று தெரிவித்தார்.

இதையடுத்து, குடியரசுத் தலைவர்தான் நாடாளுமன்றத்தைத் திறக்கவேண்டும் என்ற செய்தி பின்னுக்குத் தள்ளப்பட்டு, சோழர் காலத்தில் ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக வழங்கப்பட்ட செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்படுவது குறித்துச் செய்தி ஊடகங்களில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன.

“நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு செங்கோல் நிறுவப்படுவது தமிழர்களுக்குப் பெருமை” என்று அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். திடீரென முளைத்த செங்கோலுக்கு ஒரு புதிய வரலாறு என்று கட்டுரை ஒன்றைத் துக்ளக் இதழ் வெளியிட்டது.

4 bismi svs

அக் கட்டுரையில், “இந்தியா விடுதலை பெற்றபோது அப்போதைய வைஸ்ராயாக இருந்த மவுண்ட்பேட்டன் நேருவிடம், இந்தியாவில் ஆட்சி மாற்றத்திற்காக அடையாளமாக ஏதாவது ஒரு முன்மாதிரி உள்ளதா? என்று கேட்டதாகவும், அதற்கு நேரு பதில் சொல்லமுடியாமல் விழித்தாகவும், பின்னர் நேரு ஆட்சி மாற்றத்திற்காக முன்மாதிரி அடையாளம் குறித்து அப்போதைய இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டிருந்த இராஜாஜியிடம் ஆலோசனை செய்தார் என்றும், அதனைத் தொடர்ந்து, இராஜாஜி அப்போதைய தஞ்சை மாவட்டத்தில் இருந்த திருவாடுதுறை ஆதீனத்தைத் தொடர்பு கொண்டு ஆட்சி மாற்றத்திற்காக முன்மாதிரிகள் குறித்துப் பேசினார் என்றும், திருவாடுதுறை ஆதீனம், சோழர் காலத்தில் ஆட்சிக் காலத்தில் செங்கோல் வழங்கப்படும் முறை இருந்தது என்றும் அதன் அடிப்படையில் சென்னையில் தங்கச் செங்கோல் தயாரிக்கப்பட்டு, அந்தச் செங்கோல் 1947 ஆகஸ்ட் 14ஆம் நாள் மாலை திருவாடுதுறை ஆதீனத்தின் இளைய தம்பிரான் மவுண்ட்பேட்டனிடம் வழங்க, அந்தச் செங்கோலை மவுண்ட்பேட்டன் பொறுப்பேற்க இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பு ஏற்க இருக்கும் நேருவிடம் வழங்கினார்.

அந்தச் செங்கோல் அலகாபாத்தில் உள்ள நேருவின் பரிசுப் பொருட்கள் கண்காட்சியில் நேரு பயன்படுத்திய வாக்கிங் ஸ்டிக் (கைத்தடி) என்று அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. பின்னர் ஆட்சி மாற்றத்திற்காகச் செங்கோல் குறித்து எந்தச் செய்தியும் எழவில்லை.

துக்ளக் இதழில் வெளிவந்த செய்தியின் அடிப்படையில் மோடி அரசு அந்தச் செங்கோலைக் கண்டுபிடித்து, நேரு ஆட்சி மாற்றத்திற்கான செங்கோலுக்கு உரிய மரியாதை தரவில்லை என்றும், அதற்கு உரிய மரியாதை தரவேண்டும் என்ற அடிப்படையில் புதிய நாடாளுமன்றத்தின் மக்களவை சபாநாயகர் இருக்கைக்கும் பக்கத்தில் நிறுவப்பட உள்ளது என்று அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு அறிஞர் பி.ஏ.கிருஷ்ணன் கருத்து தெரிவிக்கும்போது,“நாடாளுமன்றத்தில் நிறுவப்பட உள்ள செங்கோல் குறித்த செய்திகள் அத்தனையும் வரலாறு அல்ல. அப்பட்டமான கதை. செங்கோலை வழங்கப்பட்டது என்பது நேருவுக்கு வழங்கப்பட்ட ஒரு பரிசு பொருள் அவ்வளவுதான்.

இது ஆட்சி மாற்றத்திற்காக அடையாளம் என்றால் அது குறித்து இலண்டனில் உள்ள மவுண்ட்பேட்டன் நாட்குறிப்புகளில் இந்தச் செய்தி இல்லை. நேருவின் வாழ்க்கை குறிப்பில் இந்தச் செய்தி இல்லை. இராஜாஜியின் வாழ்க்கைப் பதிவில் இக் குறிப்பு இடம்பெறவில்லை. வாய்மொழி கதையை வைத்துக்கொண்டு வரலாறு என்பதை யாரும் ஏற்கமாட்டார்கள். அப்போதைய நாளிதழ்களிலும் இந்தச் செய்தி பதிவு செய்யப்படவில்லை என்பது முக்கியமான ஒன்று. ஆட்சி மாற்றம் நடந்து இந்திய ஆட்சி பொறுப்பு நேருவிடம் ஒப்படைக்கப்படவில்லை. அப்போதைய கவனர் ஜெனரலாக இருந்து இராஜாஜிடம்தான் ஒப்படைக்கப்பட்டது. அப்போது இந்தியாவுக்கு முழு நாட்டுக்கான உரிமை வழங்கப்படவில்லை. டொமைன் அந்தஸ்துதான் வழங்கப்பட்டது.

திருவாடூதுறை ஆதீனம்
திருவாடூதுறை ஆதீனம்

1950 ஜனவரி 26ஆம் நாள் இந்தியா என்ற புதிய நாடு முழுமையாக உருவாக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கான அடையாளமாக 1947 ஆகஸ்ட் 15ஆம் நாள் ஆங்கிலேயர்களின் கொடி இறக்கப்பட்டு, பிரதமர் பொறுப்பில் அமர்த்தப்பட்ட நேரு இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஏற்றினார் என்ற வரலாற்று பதிவுதான் அரசிடம் உள்ளது. மவுண்ட்பேட்டன் செங்கோல் கொடுத்தார் என்று அரசின் பதிவுகள் இல்லை. தலைமை மோடி நேருவைக் குறைசொல்லச் செங்கோலை வைத்து அரசியல் செய்கிறார் என்பதே அப்பட்டமான உண்மை” என்று கூறினார்.

இதில் தமிழர்களுக்குப் பெருமை இல்லையா என்ற கேள்விக்கு முன்னாள் ஆட்சியாளர் பாலச்சந்திரன் குறிப்பிடும்போது,“இதில் தமிழர்களுக்கு என்று என்ன தனித்த பெருமை உள்ளது. எதுவும் கிடையாது. தலைமை அமைச்சர் மோடி, திருக்குறளை உலகம் முழுவதும் பேச்சில் குறிப்பிடுகின்றார். திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிப்பாரா? அண்மையில் ஜப்பான் சென்று திரும்பிய மோடி, தில்லி விமானநிலையத்தில் பொதுமக்களிடம் பேசும்போது, ஜப்பானில் பேசும்போது இந்தியர்களின் மொழி தமிழ் என்று குறிப்பிட்டேன் என்று கூறியுள்ளார்.

செங்கோல்
செங்கோல்

அப்படிப்பட்ட இந்தியர்களின் மொழியை இந்தியாவின் ஆட்சிமொழியாக அங்கீகாரம் செய்வரா? மொழி வளர்ச்சியில் சமஸ்கிருதத்திற்கு 600 கோடி, இந்திக்கு 400 கோடி தமிழ் உட்படப் பிற இந்திய மொழிகளுக்கு 20 கோடி மட்டுமே ஒதுக்கப்படுகின்றது. சமஸ்கிருதத்திற்கு இணையாகத் தமிழுக்கு 600 கோடி ஒதுக்கி மோடி அறிவிப்பு வெளியிடுவாரா? தமிழின் வளர்ச்சிக்கு எதையும் செய்யாமல் தமிழர்களுக்கு அதில் பெருமை இதில் பெருமை என்பது மோடியின் அரசியல் இராஜதந்திரங்களில் ஒன்றுதான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய நாடாளுமன்றத்தில் செங்கோலை மோடி நிறுவுவது தமிழர்களுக்குப் பெருமை என்பதைவிடத் தன் அரசியல் சுயநலத்திற்காகப் பயன்படுத்துகிறார் என்பதே உண்மையாக இருக்கலாம்.

-ஆதவன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.