அரசாங்க நூலகமா? அவர் சொந்த நூலகமா? சர்ச்சையில் தலைமைச் செயலக நூலகர் !
தலைமை செயலக வளாகத்திற்குள்ளாகவே, அமைந்திருக்கிறது தலைமைச் செயலக நூலகம். தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தொடங்கி, பல்வேறு பணி நிமித்தமாக அன்றாடம் தலைமைச் செயலகத்திற்கு வந்து செல்லும் அரசு ஊழியர்கள், அனைத்துக் கட்சிகளை சார்ந்தவர்கள், மாணவர்கள் உள்ளிட்டு எவர் ஒருவரும் அங்கு சென்று நூல்களை படிக்க முடியும்.
தலைமைச் செயலகம் சென்று வரும் அனுபவத்தில், இளைப்பாறுதலுக்காக அங்கே செல்வதுண்டு. நூலகம் திறந்திருக்க வேண்டிய நேரம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையில். என் அனுபவத்தில், குறித்த நேரத்தில் நூலகம் திறப்பதில்லை. பணியாளர்கள் முன்னரே வந்துவிட்டாலும், நூலகர் வந்த பிறகுதான் நூல்களை வெளியே எடுத்து செல்ல முடியும். நூலகரோ, அவர் நினைத்த நேரத்திற்குத்தான் வருகிறார். அவர் படித்து முடித்த பிறகுதான், தினசரிகள் பார்வையாளர்களின் பக்கம் வருகிறது.

அடுத்து, நூலகர் என்பதற்கான குறைந்தபட்ச தகுதியைக்கூட அவரிடம் எதிர்பார்க்க முடியாது. நூலகத்தில் பணியில் இருக்கும்போதே, அழைப்புகள் வந்தால், அவ்வளவு சத்தமாக பேசுகிறார். பிறருக்கு அது இடையூறாக இருக்கும் என்பதை யோசிக்கவே இல்லை. பணியாளர்களை மட்டுமல்ல; பார்வையாளர்களையும் ஒருமையில்தான் பேசுகிறார். அதுவும் பணியாளர்களை அணுகும் விதம் முகம் சுளிப்பதாக இருக்கும். அரசாங்க நூலகமா? இல்லை அவர் சொந்த காசு போட்டு திறந்து வைத்திருக்கும் நூலகமா? என்ற சந்தேகம் வரும்.
தலைமைச் செயலக வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம். “இதற்கு முன்னர், சுமார் பதினைந்து பேர் வரையில் பணியாற்றி வந்த இடத்தில் தற்போது நூலகர், உதவி நூலகர், தட்டச்சு செய்பவர், பதிவறை எழுத்தர் ஆகிய நான்கு பேர் மட்டுமே பணியில் இருப்பதாக சொல்கிறார்கள். பணியாளர் பற்றாக்குறையும் மிக முக்கியமான சிக்கலாக இருக்கிறது. இதன் காரணமாகக்கூட, இருக்கிற ஆட்களை வைத்து வேலை வாங்குவதில், சில அசௌகரியங்கள் ஏற்பட்டு இருக்கலாம்” என்கிறார்கள்.

அதே வளாகத்தில் பணியாற்றும் தலைமைச் செயலக பணியாளர்கள் மத்தியில் சங்க வேறுபாடு பாராட்டுகிறார். தான் அங்கம் வகிக்கும் சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களிடம் ஒருவிதமான சலுகையும் மற்றவர்களிடத்தில் கறாரான அணுகுமுறையையும் கடைபிடிப்பதாகவும் குற்றச்சாட்டுக்களை சிலர் முன்வைக்கிறார்கள்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து, கருத்தறிய தற்போது பணியில் இருக்கும் நூலகர் கவிதாவை அணுகினோம். நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை.
குறைவான ஊதியத்தில், நேரம் காலம் பார்க்காமல் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் கிளை நூலகர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கான அங்கீகாரம் உள்ளிட்ட எந்தவிதமான அரசின் உரிமைகளும் கிடைக்கப்பெறாத சவலைப் பிள்ளைகளைப் போலவே நடத்தப்பட்டும் வருகிறார்கள். இதற்கு மத்தியில், நல்ல ஊதியத்தில் அதுவும் தலைமை செயலகத்தில் அமைந்திருக்கும் நூலகத்திலிருந்து இப்படி ஒரு குற்றச்சாட்டா? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது இந்த விவகாரம்.
— தி.அ.குகன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.