விஜய் கட்சி இளைஞர் அணி செயலாளர் உள்ளிட்ட 4 பேர் வெவ்வேறு சம்பவங்களில் பலி !
தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு சென்ற 4 பேர் வெவ்வேறு சம்பவங்களில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை பகுதியில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்துள்ளனர்.
இன்று மாலை 4 மணியளவில் மாநாடு தொடங்கவுள்ள நிலையில், அதிகாலை முதலே தொண்டர்கள் விக்கிரவாண்டி சாலை பகுதியில் குவிந்து வருகின்றனர். இதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வாகனங்கள் மூலம் தொண்டர்கள், ரசிகர்கள் வி. சாலை பகுதிக்கு புறப்பட்ட வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில்,தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து இரு சக்கர வாகனத்தில் புறப்பட்ட இளைஞர் சாலை விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சென்ட்ரல் மூர் மார்க்கெட் பகுதியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் இளைஞர்கள் இருவர் மாநாட்டிற்குப் புறப்பட்டுள்ளனர். தேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியுள்ளது.
இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான காவல் துறை விசாரணையில், விபத்தில் சிக்கிய இரண்டு இளைஞர்களும், தவெக மாநாட்டில் பங்கேற்க சென்றதாகவும், இருவருமே தலைக்கவசம் அணியாமல் பயணம் செய்ததே விபதுக்கு காரணம் என்கின்றனர்.
ரயில் விபத்தில் பலி
சென்னையில் இருந்து ரயில் மூலம் விக்கிரவாண்டிக்கு ஏராளமானவர்கள் செல்கின்றனர். இதில், நண்பர்களுடன் சென்ற நிதிஷ்குமார், மாநாட்டு திடலை பார்த்த உற்சாகத்தில் நண்பர்களுடன் சேர்ந்து கீழே குதித்துள்ளார். இதில், கீழே விழுந்து படுகாயமடைந்த நிதிஷ் குமார் இறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கார் விபத்தில் 2 பேர் பலி
திருச்சியிலிருந்து மாநாட்டுக்குச் சென்ற கார் ஒன்று உளுந்தூர்பேட்டை அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே தவெக நிர்வாகிகள் தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சீனிவாசன், கலை என்ற இருவர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநாட்டிற்கு பாதுகாப்பாகவும் கட்டுக்கோப்புடனும் வரவேண்டும் என விஜய் கூறியிருந்த நிலையில், தற்போது 4 பேர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தடுத்த விபத்து சம்பவம் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.