எல்.ஐ.சி. மாதிரி வக்ஃபு சொத்தையும் விற்கத்தான் இந்த முயற்சி – முகம்மது ஷெரீஃப் !
எல்.ஐ.சி. மாதிரி எங்க சொத்தையும் விற்கத்தான்…வக்ஃபு திருத்த சட்ட மசோதா! | முகம்மது ஷெரீஃப்
” எல்.ஐ.சி. மாதிரி எங்க சொத்தையும் விற்கத்தான்…வக்ஃபு திருத்த சட்ட மசோதா”வை கொண்டு வந்திருக்கிறார்கள் என்கிறார், மனிதநேய ஜனநாயகக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் முகம்மது ஷெரீஃப். இந்த விவகாரம் தொடர்பாக, அங்குசத்துடன் உரையாடியபோது, ”வக்ஃபு என்றால் அர்ப்பணிப்பு. முகாலய பேரரசுகள் ஆட்சி செய்த காலத்தில் இருந்தே இந்த வக்ஃபு நிலங்கள் இருந்திருக்கின்றன. காலம் காலமாக இருந்து வந்திருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருக்கிறது. இவையெல்லாம் இறைவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டவை. சுருக்கமாக சொல்வதென்றால், இசுலாம் தோற்றம் பெற்ற காலத்திலிருந்தே இருந்து வருகிறது.” என்கிறார்.
மேலும், “1954 இல் இந்திய வக்ஃபு சட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கு முன்னர் 1970 இல் வக்ஃபு சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு, 1984 இல் தனது பரிந்துரைகளை சமர்ப்பித்திருந்தது. தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தை பொறுத்தவரையில் முறையான நிர்வாக அமைப்பில் இயங்கிவருகிறது. இராமநாதபுரம் எம்.எல்.ஏ., நவாஸ்கனி தலைவராக செயல்பட்டு வருகிறார். தலைமை நிலைய செயலாளராக தாரேஷ் அஹமது ஐ.ஏ.எஸ். இருந்துவருகிறார். இதன் கீழ் 11 பேர் கண்காணிப்பாளர்களாக இருக்கிறார்கள். 12 பேர் வாரிய உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள்.

வக்ஃபு சொத்து இசுலாமியர்கள் யாரும் உரிமை கொண்டாட முடியாது. அதனை பயன்படுத்தத்தான் முடியும். காஷ்மீரிலும், மணிப்பூரிலும், குஜராத்திலும் பெண்கள் பாதிக்கப்படுவது குறித்தெல்லாம் கவலை கொள்ளாத பாஜக அரசு, வக்ஃபு விவகாரத்தில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் குறித்து பேசுவதிலும் அக்கறை கொள்வதிலும்தான் எங்களுக்கு சந்தேகம் எழுகிறது.
சில இடங்களில் நிர்வாக முறைகேடுகள் இருக்கிறது. அதனை சரிசெய்வதற்கான முயற்சியைத்தான் மேற்கொள்ள வேண்டும். அதைவிட்டு, முசுலீம்கள் அல்லாதவர்களையும் உள்ளே இணைக்கிறோம் என்பதுதான் சர்ச்சையாகிறது. இந்து அறநிலையத்துறையில் இசுலாமியர்களையும் சேர்க்க வேண்டும் என்றால் ஏற்பார்களா?
வக்ஃபு சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இருந்து இத்தகைய முயற்சிகளை மேற்கொள்வதாக சொல்கிறார்கள். ஆனால், எல்.ஐ.சி. போன்ற இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை அந்நியருக்கு தாரை வார்ப்பதில் பாஜக அரசு முன்னோடியாக இருந்திருக்கிறது. அதுபோலவே, வக்ஃபு விவகாரத்திலும் நடைபெற்றுவிடக்கூடாது என்பதற்காகத்தான் எதிர்க்கிறோம்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மற்றவர்கள் குறைசொல்லும் வகையில், தமிழகத்தில் வக்ஃபு நிலங்களை பராமரித்து வரும் சில முத்தவலிகள் தனக்குப்பின்னால் தனது வாரிசுகள் என்று அதை தனிப்பட்ட முறையில் அனுபவித்து வரும் நிகழ்வுகள்தான் அவப்பெயரை உருவாக்கியிருக்கிறது. இதனை பகிரங்கமாகவே, கண்டிக்கிறேன். இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை அப்படியே அப்புறப்படுத்த வேண்டும். சரியான நபர்களை அந்த இடத்தில் நியமிக்க வேண்டும்.
இன்று வரையில் வக்ஃபு செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். சமீபத்தில்கூட திருச்சியில் ஒரு வக்ஃபு நடைபெற்றது. வக்ஃபு இறைவனுக்கு அர்ப்பணிக்கும் சொத்து. இசுலாமியர்களை பொருத்தவரையில், வக்ஃபு சொத்துக்களை காப்பாற்ற அனைவரும் முயற்சிக்க வேண்டும். மற்றவர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியை கையில் எடுக்கும் வகையில், முறைகேடான நபர்களை ஆதரிக்க கூடாது. ” என்பதாக குறிப்பிடுகிறார்.
— வே.தினகரன்.