பெண் போலீசாருக்கே பாலியல் தொல்லை
சேலம் லைன்மேடு பகுதியில் போலீசாருக்கான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. குடியிருப்பில் உள்ள வீடுகளில் மாநகர காவல் துறையில் பணியாற்றும் போலீசார்,ஆயுதப்படையில் பணியாற்றும் போலீசார் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். குடியிருப்பில் வசித்து வரும் பெண் போலீசார் சிலர், டிஜிபி அலுவலகத்திற்கு புகார் மனு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த புகாரில், தாங்கள் வசிக்கும் குடியிருப்பில் எதிர் வீட்டில் வசிக்கும் ஆயுதப்படை போலீஸ்காரர் ஒருவர், தனது காவல்துறை நண்பர்களுடன் சேர்ந்து குடியிருப்பில், மது அருந்துவதும், அரைகுறை ஆடைகளுடன் வலம் வருவதும், நள்ளிரவு நேரங்களில் எங்கள் வீட்டின் கதவை தட்டுவதும், ஆபாச வார்த்தைகளால் பேசுவதும், பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதுமாக உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. புகாரின் மீது விசாரணை நடத்த டிஜிபி அலுவலகத்தில் இருந்து சேலம் மாநகர போலீசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணை நடத்த துணை கமிஷனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.