பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பேராசிரியர்களை காப்பாற்றுவதா ?
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தலைவர் க.இப்ராகிம் மற்றும் மாநிலச் செயலாளர் பா.தினேஷ் ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.
அந்த அறிக்கையில், “திருச்சியில் இயங்கி வரும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையின் முன்னாள் தலைவர் எஸ். கணேசன் மற்றும் தொலை உணர்வுத் துறையின் இணைப் பேராசிரியர் டி.ரமேஷ் ஆகிய பேராசிரியர்கள் அவர்களிடம் பயின்ற மாணவிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக இரு மாணவிகள் தனித் தனியே புகார் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து, பல்கலைக் கழகத்தின் உள்ளக புகார்க் குழு விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில் இந்த இரு பேராசிரியர்களும் மாணவிகளைப் பாலியல் ரீதியாகத் துன்பறுத்தியது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இவ்விரு பேராசிரியர்களையும் கட்டாய ஓய்வில் அனுப்ப கடந்த செப்டம்பர் 22 அன்று நடைபெற்ற பல்கலைக் கழக சிண்டிகேட் கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது. இப் பரிந்துரையின் அடிப்படையில், இவ்விரு பேராசிரியர்களையும் கட்டாய ஓய்வில் அனுப்ப பல்கலைக் கழக நிர்வாகம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர் எஸ்.கணேசன், மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் முறையீடு செய்தார்.
நீதிமன்றம், இது குறித்து, பல்கலைக் கழகத்தின் உள்ளக புகார்க் குழு மறுவிசாரணை நடத்தி முடிவெடுக்க உத்தரவிட்டுள்ளது.
ஆனால், இந்த உத்தரவைப் பயன்படுத்தி, பேராசிரியர் எஸ்.கணேசன் மீண்டும் பல்கலைகழகத்திற்கு வருவதும், மாணவர்கள் மத்தியில் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடப்பதுமான செயல்களில் ஈடுபடுவதாக மாணவர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
எனவே பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மேலும் விசாரணையை முறையாக நடத்துவதை உறுதி செய்யவும், குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர் எஸ்.கணேசன் பல்கலைக்கழகத்திற்கு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது, காலம் தாழ்த்தாமல், உரிய விசாரணை நடத்தி, குற்றச்செயல் உறுதி செய்யப்படும் நிலையில், கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதோடு, சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநிலக் குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.” என்பதாக கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
– அங்குசம் செய்திப்பிரிவு








Comments are closed, but trackbacks and pingbacks are open.