‘சக்தித் திருமகன்’ டபுள்ஸ் ரிலீஸ்! துப்பாக்கியால் ‘மிரட்டிய’ விஜய் ஆண்டனி!
இந்த ஜூன் மாதக் கடைசியில் ரிலீசான ‘மார்கன்’ ஹிட்டானதில் வெரி ஹேப்பியான விஜய் ஆண்டனி, அதன் சக்சஸ் மீட்டில் ”அடுத்தடுத்து எனது படங்கள் ரிலீசாகும், அதில் ’சக்தித் திருமகன்’ செப்டம்பர் மாதம் ரிலீஸாகும். அதற்காக உங்களை விரைவில் சந்திக்கிறேன்” எனச் சொன்னார்.
அவர் சொன்னபடியே அவரது பிறந்த நாளானா ஜூலை.24-ஆம் தேதி தனது 25ஆவது படமான ‘சக்தித் திருமகன்’ டபுள்ஸ் ரிலீஸ் விழாவில் மீடியாக்களைச் சந்தித்தார். ’விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்’ பேனரில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி, மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில் ‘அருவி’, ‘வாழ்’ படங்களின் டைரக்டர் அருண் பிரபு டைரக்ஷனில் உருவாகி, வரும் செப்டம்பர்.05—ஆம் தேதி ரிலீசாகும் இப்படத்தின் டபுள்ஸ் ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.
பொதுவாக ஒரு படத்தின் டீசர், டிரெய்லர், சிங்கிள் ட்ராக் என நிகழ்ச்சிகள் நடக்கும். ஆனால் விஜய் ஆண்டனியோ, ‘சக்தித் திருமகன்’ படத்தின் டீசருடன் இரண்டு பாடல்களையும் ரிலீஸ் பண்ணியதால் ‘டபுள்ஸ் ரிலீஸ்’ என பேனர்களிலும் விளம்பரங்களிலும் குறிப்பிட்டிருந்தார்.
டீசரும் டபுள்ஸும் திரையிடப்பட்ட பின், மேடையேறினார் ஹீரோ விஜய் ஆண்டனி. “படக்குழுவினரையோ, சிறப்பு விருந்தினர்களையோ மேடைக்கு அழைத்து பூங்கொத்து கொடுத்து, அல்லது குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் துவங்குவார்கள். ஆனால் நான் இப்போது பத்திரிகையாளர்களிலிருந்து ஒருவரை மேடைக்கு வரவழைத்து துப்பாக்கியால் [ டம்மி தான்] சுட்டு நிகழ்ச்சியைத் தொடங்குகிறேன்” எனச் சொன்னபடி ‘தினகரன்’ நாளிதழின் சினிமா நிருபர் தேவராஜை மேடைக்கு அழைத்து, மீடியாக்களைப் பார்த்து துப்பாக்கியால் சுடச்சொல்லி நிகழ்சியைத் தொடங்கினார்.

விஜய் ஆண்டனிக்கு எப்போதும் சப்போர்ட்டாக இருக்கும் தயாரிப்பாளர் தனஞ்செயன் உட்பட படக்க்குழுவினர் அனைவருமே ஒருவர் மாற்றி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு வரவேற்குமாறு நிகழ்ச்சியைக் கலகலப்பாக்கினார் விஜய் ஆண்டனி.
‘சக்தித் திருமகனில்’ விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக திருப்தி என்ற புதுமுகம் நடிக்கிறார். இவர்களுடன் டைரக்டர் அரவிந்த ராஜ், செல்முருகன் உட்பட பலர் நடிக்கின்றனர். இசை; விஜய் ஆண்டனி, ஒளிப்பதிவு ; ஷெல்லி காலிஸ்ட், பாடல்கள் : கார்த்திக் நேத்தா, காஸ்ட்யூம் : அனுஷாமீனாட்சி. பி.ஆர்.ஓ. : ரேகா.
டபுள்ஸ் நிகழ்வில் பேசியவர்கள்…
தனஞ்செயன்,
“விஜய் ஆண்டனியின் தயாரிக்கும் படங்கள் எல்லாமே வணிக ரீதியாக வெற்றிப் படங்கள் தான். தான் தயாரிக்கும் படங்களை பிஸ்னெஸ் செய்யும் வித்தை தெரிந்தவர் விஜய் ஆண்டனி. இந்த சக்தித் திருமகனைக் கூட தியேட்டர் ரைட்சைத் தவிர, அனைத்தையும் விற்றுவிட்டார்”.

கார்த்திக் நேத்தா,
“பல ஆண்டுகளுக்கு முன்பு சூளைமேட்டில் ஸ்டுடியோ வைத்திருந்த போது விஜய் ஆண்டனி சாரைச் சந்தித்துள்ளேன். இப்பதான் அவரது படத்துக்கு பாடல்கள் எழுதியுள்ளேன்”.
ஹீரோயின் திருப்தி,
காஸ்ட்யூமர் அனுஷா மீனாட்சி, கேமராமேன் ஷெல்லி காலிஸ்ட் ஆகியோர் படத்தின் தரத்திற்காக தாராள பட்ஜெட்டை ஒதுக்கிய விஜய் ஆண்டனியைப் பற்றியும் படத்தைப் பற்றியும் பெருமையாகப் பேசினார்கள்.
டைரக்டர் அருண்பிரபு,
“இது அரசியல் படம் தான். ஆனால் மக்களுக்கான அரசியல் பேசும் படம். எனது முதல் படமான ‘அருவி’க்கு எப்படி உழைத்தோமோ, அதைவிட பலமடங்கு இப்படத்திற்கு உழைத்துள்ளோம்”.
ஹீரோ விஜய் ஆண்டனி,
“மீடியா நண்பர்களை அடிக்கடி சந்திப்பது தான் எனக்கு பூஸ்டாக இருக்கிறது. சர்வதேச அளவில் படம் எடுக்கக் கூடிய ஆற்றலும் அறிவும் அருண் பிரபுவுக்கு இருக்கிறது. இந்தப் படத்தில் நான் அரசியல் புரோக்கராக நடித்துள்ளேன். வரிசையாக நான்கு படங்களைத் தயாரித்து நடித்து வருகிறேன். இனிமேல் வெளிக்கம்பெனி படங்கள், மற்ற ஹீரோக்களின் படங்களுக்கும் இசையமைக்க முடிவு செய்துள்ளேன். எனது எல்லா முயற்சிகளுக்கும் ஆதரவாக இருக்கும் பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி”.
— மதுரை மாறன்