புத்தகம் தேர்வு செய்ய எளிய முறை இதுதான்…
எழுத்தாளர்களில் இரண்டு வகை …
- தான் எழுத்தாளன் என்பதை நிருபித்துக் கொள்ள புத்தகங்கள் வெளியிட்டு தனக்குத் தானே Promotion செய்து விளம்பரம் தேடிக் கொள்ள எழுதுபவர்கள். இவர்கள் அரசியல் மூலம் சுயலாபம் அடைய பிரபல்யத்துவம் பெற எந்த எல்லைக்கும் செல்பவர்கள். தன் புத்தகத்தின் மூலம் தான் பாப்புலர் அடைய தன் பதவி, பணம், அந்தஸ்து, ஜாதி, எல்லாவற்றையும் பயன்படுத்துவார்கள்.
- வாசகர்களுக்காக – அவர்கள் பத்துப் பேராவது வாசிக்க வேண்டும், அவர்கள் ஓரிருவராவது தன் எழுத்தைப் படித்துப் பயனுற வேண்டும், கூடவே அவர்கள் படித்து பத்துப் பேருக்கு சொல்லி பாராட்ட வேண்டும், விமர்சிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை மட்டுமே வைத்து எழுதுபவர்கள். இந்த வகையினரிடம் எழுத்துக்கான சன்மானம், ராயல்டி எதிர்பார்ப்பு பிழைப்புக்காக வேண்டி இருக்கும்.
ஒரு காலத்தில் இதில் இரண்டாவது கேட்டகிரியே மிகுதியாக இருந்தார்கள். பாரதி, கல்கி, புதுமைப்பித்தன், அகிலன், சு.சமுத்திரம், சாண்டில்யன், நா.பா , முல்லை தங்கராசன், வாண்டு மாமா, அழ வள்ளியப்பா முதல் தமிழ்வாணன், பி.டி.சாமி, ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், பா.ராகவன் வரை இந்த வகையறாக்கள்தான்.
இவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் எழுதிக் கொண்டே இருப்பார்கள். ஊன், உறக்கம், மூச்சு, பேச்சு, பிழைப்பு, வாழ்க்கை எல்லாமே இவர்களுக்கு இதுதான். எங்காவது பரிசு, பாராட்டு, பணமுடிப்பு என்றால் வாங்கிக் கொள்வார்கள். மகிழ்ச்சி கொள்வார்கள். இவர்களுக்கு பெரிய விருது கிடைத்துவிட்டால் இவர்கள் கொண்டாடுகிறார்களோ இல்லையோ இவர்களின் வாசகர்களே கொண்டாடி ரணகளப் படுத்தி விடுவார்கள். இவர்கள் 90 சதவீதம் இருந்த காலத்தில் வாசிப்பு செழித்தது. வாசகர்கள் பெருகினர்.
ஆனால் முதல் கேட்டகிரி இருக்கே. அதுதான் ஆபத்தானது. அதி பயங்கரமானது. இவர்கள் அரசியல்வாதிகளாக – ஏதாவது ஒரு அரசியல் கட்சி பெரும் தலைவர்களாக – குட்டித் தலைவர்களாக இருப்பர். அரசு பதவிகளில் அதிகார மிக்க நாற்காலியில் அமர்ந்து இலட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பர்.
யாரையாவது காக்கா – குருவி பிடித்து பெரிய பெரிய விருது அமைப்புகள், எழுத்தாளர் அமைப்புகள், பத்திரிகை – மீடியா பொறுப்புகளில் இருப்பர். வெளி மாநில, வெளி நாடுகளில் உள்ள தமிழ்சங்கங்களில் நெருக்கம் பாராட்டுவர்.
அதற்காகவே எதை எதையோ கலக்கிப் போட்டு வெண்டைக் காயை வேப்பெண்ணெயில் பிசைந்து வைத்த மாதிரியான மொழிநடையில் எதையோ எழுதி புத்தகமாக்கி விடுவர்.
அதுவும் முடியாவிட்டால் கோஸ்ட் ரைட்டர் வைத்து எதையோ எழுதி புத்தகம் ஆக்கி விடுவர். இந்தப் புத்தகம் அச்சில் வருவதற்கு முன்பே தமிழ்நாட்டில் மட்டுமல்ல, வெளி மாநிலங்களில், வெளி நாடுகளிலிருந்து இயங்கும் விருது அமைப்புகளில் தனக்கான துண்டைப் போட்டு வைத்து விடுவர்.
இவர்கள் புத்தகம் அச்சானதும் சுடச்சுட விருதும் வழங்கப்பட்டு விடும். அதற்கு வரும் விளம்பர ப்ரோமோஷன்களைப் பார்த்து ஆகா, இப்படி ஒரு விருது பெற்ற நூலாச்சே என வாசகர்களும் ஓடி ஓடி அந்தப் புத்தகத்தை விலை கொடுத்து வாங்கிச் செல்வர். ஆனால் படிக்க முடியாது. படிக்க துவங்கினால் வாசகன் தூங்கிப் போய்விடுவான்.
அட, இவ்வளவு விலை கொடுத்து வாங்கின நூலாச்சே, அவ்வளவு பெரிய விருது வாங்கின காவியமாச்சே, நிச்சயம் எழுத்தாளன் அசாதாரண எதையோ சொல்லி இருப்பான் என கஷ்டப்பட்டு அவன் வாசித்தான் என்றால் தொலைந்தான். BP எகிறி 140/ 220 காட்டும். சில பேருக்கு இதய வால்வில் Stud வைக்க வேண்டி வரும். இன்னும் சிலருக்கு பைபாஸ் சர்ஜரியே தேவைப்படும்.
நான் வாழ்ந்த இந்த 60 வருட காலத்தில் முதல் கேட்டகிரிதான் 20 வருடங்களாக தமிழ்நாட்டு இலக்கிய உலகில் கோலோச்சுகிறது. இவர்கள் எழுதிய 90 சதவீத குப்பைகள் 10 சதவீதம் வாசிப்பு சுகம் உள்ள புரோமோஷன் செய்யப்படாத புத்தகங்களை அழுத்தி செல்லரித்துப் போக வைத்துக் கொண்டிருக்கிறது. புத்தகக் கண்காட்சிகளும், புத்தக திருவிழாக்களும், வாசக, விருதுக் கொண்டாட்டங்களும் முதல் கேட்டகிரி கன்றாவிகளையே முன்னிலைப் படுத்துகின்றன.
காசையும் கொடுத்து நோயையும் சம்பாதித்த கதையாக என்று முன்னோர்கள் சொல்வார்கள். அந்தப் பணியை சமகாலத்தில் செவ்வனே செய்து முடிக்கிறது இந்த முதல் கேட்டகிரி புத்தகங்கள்.
சரியான புத்தகத் தேர்வு என்பது எப்புத்தகம் யார் யார்வாய் கேட்பினும், அப் புத்தகம் மெய்ப் புத்தகமாய் காண்பதறிவு . என்ற நோக்கில் ஒவ்வொரு வாசகரும் கண்டு ஆய்ந்து தேர்வு செய்வதே ஆகும்.
நீங்கள் காசு கொடுத்து உங்களுக்கான சிறந்த புத்தகத்தை தேர்ந்தெடுக்கா விட்டாலும் தவறில்லை. படிக்கவே முடியாத இந்த மாதிரி கன்றாவி புத்தகத்தை வாங்கி விடாதீர்கள்.
அது எதிர்காலத்தில் உங்கள் வாசிப்பு நோக்கத்தையே குழி தோண்டிப் புதைத்து விடும். உங்களுக்கான தேர்வு என்பது உங்களுக்கானதாக மட்டுமே இருக்கட்டும். மற்றவர் சொன்னதை – கை காட்டியதை தயவு செய்து எடுக்காதீர்கள்.
அட்டை டூ அட்டை கொஞ்சம் புரட்டிப் பார்த்து சில பத்திகள் வாசித்துப் பார்த்து உங்களுக்கு அது பிடித்தது என்றால் மட்டும் வாங்குங்கள். எந்தப் பதிப்பகமாவது அச்சடித்த புத்தகத்தை பாலிதீன் கவர் மூடி லேமினேஷன் போட்டு வைத்திருந்தால்…
அதைத் தொட்டுக் கூட பார்க்காதீர்கள். அந்தப் புத்தகத்தை அச்சடித்தவன், எழுதினவன் அவநம்பிக்கைவாதியாக இருப்பான். நிச்சயம் அதைப் படித்தால் நம் வாழ்க்கையிலேயே நமக்குப் பிடிமானம் வராது.
– கா.சு. வேலாயுதன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.