SIR ஒழுங்கா பாடம் எடுத்தாரா? இல்லையா? | திரை விமர்சனம் ! வீடியோ !
தயாரிப்பு : ’எஸ்.எஸ்.எஸ்.பிக்சர்ஸ்’ எஸ்.சிராஜ், நிலோஃபர் சிராஜ். டைரக்ஷன் : போஸ் வெங்கட். திரை வினியோக உபயோகம் : ‘கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி’ டைரக்டர் வெற்றிமாறன். தமிழ்நாடு ரிலீஸ் : ரோமியோ பிக்சர்ஸ். நடிகர்-நடிகைகள்; விமல், சாயாதேவி கண்ணன், ‘பருத்திவீரன்’ சரவணன், ரமா, சிராஜ், வ.ஐ.ஜெயபாலன், விஜயமுருகன், ஷரவண சக்தி,எலிசபெத், பிராணா. ஒளிப்பதிவு : இனியன் ஜெ.,ஹாரிஸ், இசை : சித்து குமார், எடிட்டிங் : ஸ்ரீஜித்சாரங். பாடல்கள் : விவேகா, ஆத்தங்குடி இளையராஜா, இளங்கவி அருண். பி.ஆர்.ஓ. : சதிஷ் [ எஸ்2 மீடியா ]
1950, 60, 80 காலகட்டங்களில் நடக்கிறது கதை. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மாங்கொல்லை கிராமத்தில் 1960-ல் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார் பொன்னரசன் [ பருத்திவீரன் சரவணன் ]. இவரது மனைவி பார்வதி { ரமா }, மகன் சிவஞானம் [ விமல் ]. கருப்புச் சட்டை சிந்தனையாளரான இவரின் ஆசையே அப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி, மாணவ—மாணவிகளின் வாழ்க்கத்தரத்தை உயர்த்த வேண்டும் என்பது தான். ஆனால் இவரின் ஆசை நிறைவேறுவதற்குள் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
தன்னால் முடியாததை தனது மகன் மூலமாக முடிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இராமநாதபுரத்தில் ஆசிரியராக வேலை பார்க்கும் சிவஞானத்தை மாங்கொல்லைக்கு வரவைக்கிறார். சிவஞானம் வந்த பின்னும் பொன்னரசனின் அப்பா [ அண்ணாதுரை ] காலத்திலிருந்த ‘சாமி வழித்தடம்’ மூடநம்பிக்கையும் சாதி ஆணவமும் தடுக்கிறது. இதையெல்லாம் மீறி சிவஞானம் ஜெயித்தாரா ? உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்ததா? என்பதை கம்பீரத்துடனும் நம்பிக்கையுடனும் முடிக்கும் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘சார்’.
சமீபமாகவே நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் விமலுக்கு இந்த ‘சார்’ மிகவும் மரியாதைக்குரியவர். 1980 காலகட்டத்தின் உடை, சிகை இவற்றில் கவனம் செலுத்தி விமலுக்கு புது அடையாளமும் வழியும் காட்டியிருக்கிறார் டைரக்டர் போஸ் வெங்கட். விமலின் அப்பா பொன்னரசனாக பருத்திவீரன் சரவணனுக்கும் இந்த சார் தான் பெருமைக்குரியவர்.
ஒரு சீனில் கருப்புச் சட்டை போட்டு பிள்ளைகளுக்கு வகுப்பெடுக்கும் போது மனுசன் கம்பீரமாகத் தெரிகிறார். அதே போல் வெள்ளை வேட்டி சட்டையிலும் மிளிர்கிறார். விமலுடன் வேலை பார்க்கும் ஆசிரியையாக சாயாதேவியும் நல்ல தேர்வு தான். இவர் சொல்லும் ஃப்ளாஷ்பேக் கதைக்கு பெரிதும் உதவியிருக்கிறது. விமலின் அம்மாவாக வரும் ரமாவும் நிறைவான நடிப்பை வழங்கியுள்ளார்.
விமலின் உயிர் நண்பனாக, கூடவே இருந்து கழுத்தறுக்கும் சாமியாடி குடும்பத்து வில்லன் சக்திவேலாக தயாரிப்பாளர் சிராஜின் பெர்ஃபாமென்ஸ் ஓகே. கிராமத்துக் கெட்டவன் வேசத்துக்கு கச்சிதமாக மேட்ச் ஆகியிருக்கு இவரின் பாடிலாங்குவேஜ். இது போன்ற நல்ல கண்டெண்ட் சினிமாக்களைத் தயாரிப்பதுடன், நடிப்பு ஏரியாவிலும் தொடந்து பயணிக்கலாம்.
இக்கதையின் உயிர்நாடியே1950-ல் சரவணனின் அப்பா அண்ணாதுரை வாத்தியார் என்ற கதாபாத்திரம் தான். படத்தின் இடைவேளை வரை எந்தக் காட்சியிலும் ஜீவனில்லாமல், ஏனோதானோவென போகிறது. அண்ணாதுரை வந்த பிறகு தான் கதையே உயிர் பெறுகிறது. இந்தப் பெயரை வைத்ததற்காகவே இயக்குனர் போஸ் வெங்கட்டை கொண்டாடி மகிழலாம். அறிஞர் அண்ணா வந்த பின் தான் தமிழ்நாடே உயிர் பெற்று, எழுச்சியடைந்து, இன்று வரை கம்பீரமாக நடை போடுகிறது.
அதுவும் 1950—களில் ஜமீன் தார்கள், மிட்டாமிராசுகள், பண்ணையார்கள், ராஜாக்களின் வாரிசுகள் கூட்டம் மக்களைக் கொத்தடிமையாக்கிளாக்கி, கடவுள், சாமி, பூதம், பேய் என மூடநம்பிக்கைக்குள் அழுத்திவைத்து நசுக்கிக் கொண்டிருந்த காலத்தில் தான் நம் அண்ணா வந்தார். அந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழித்தார். அறிஞர் பெருந்தகை அண்ணாவுக்கு ஆசிரியராக இருந்தவர் நம் ஐயா பெரியார் தான் என்பதையும் நினைவு கூர்ந்திருக்கிறார் போஸ் வெங்கட்.
இதையெல்லாம் தான் தனது அகத்திலிருந்து வெளிப்படுத்தியுள்ளார் இயக்குனர் போஸ்வெங்கட். “நம்ம பாட்டன், பூட்டன், முப்பாட்டன் இவர்களெல்லாம் தான் நமக்கு சாமி. ஆனால் ஒரு கூட்டம் தங்கள் கற்பனையில் சாமியை உருவாக்கி, அதை உங்களையும் நம்ப வைத்திருக்கு. அவர்கள் உருவாக்கிய சாமி தான் நம்ம பிள்ளைகளின் படிப்புக்கு இடைஞ்சலா இருக்குன்னா அப்படிப்பட்ட சாமி நமக்குத் தேவையா? மானமும் அறிவும் தான் மனிதனுக்கு அழகு” வாத்தியார் அண்ணாதுரை பேசும் வசனம் தான் போஸ் வெங்கட்டின் அகமும் புறமும்.
”படிச்சுக்குறோம்… படிச்சு பொழச்சுக்குறோம்” என்ற உயரிய சிந்தனையை விதைத்த, நம்மில் ஒருவரான போஸ் வெங்கட் படைத்த இந்த ‘சார்’-க்கு ரெட் சல்யூட்.
–மதுரை மாறன்
வீடியோ லிங்