புதுக்கோட்டையில் அறமனச்செம்மலும் அறுபது கவிஞர்களும் கவியரங்கம் !
புதுக்கோட்டையில் அறமனச்செம்மலும் அறுபது கவிஞர்களும் கவியரங்கம்
புதுக்கோட்டையில் மறைந்த, வர்த்தகர் கழக சிறப்புத்தலைவர் சீனு. சின்னப்பாவின் பெயரில் மாநில அளவிலான இலக்கிய விருதுகள் அடுத்த ஆண்டு முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட வர்த்தகர் கழக சிறப்புத் தலைவரும், இலக்கிய சமூக அமைப்புகளுக்கான கொடையாளருமான பேக்கரி மஹராஜ் உரிமையாளர் சீனு. சின்னப்பா கடந்த ஆண்டு காலமானார். அவரது முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி புதுக்கோட்டையில் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் யோகாசனப் போட்டிகள், இரத்ததான முகாம், சிலம்பம், கராத்தே போட்டிகள், மாணவர்களுக்கான பல்திறன் போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டன.

அறமனச்செம்மலும் அறுபது கவிஞர்களும் என்ற தலைப்பில் 60 கவிஞர்கள் பங்கேற்ற கவியரங்கம் நடைபெற்றது. இக்கவியரங்கை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் நா.முத்துநிலவன் தொடங்கி வைத்தார். கவிஞர் தங்கம் மூர்த்தி நெறியாளுகை செய்தார்.
தொடர்ந்து பல்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சொ.சுப்பையா பங்கேற்றுப் பரிசுகளை வழங்கினார். அடுத்த ஆண்டு முதல் அறமனச்செம்மல் சீனு. சின்னப்பா பெயரில், தமிழகம் தழுவிய இலக்கிய விருதுகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக கவிஞர் தங்கம் மூர்த்தி அறிவித்தார்.
– யுகன் ஆதன்