பாம்புக்கடித்தால் உடனே மரணமா ! – Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
சமீப செய்தியில் காலணிக்குள் இருந்த சாரைப் பாம்பு கடித்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதை அறிய முடிகிறது. கடித்தது சாரைப் பாம்பு எனில் அது விஷமற்ற பாம்பு வகை என்பதால் விஷத்தினால் சிறுவனுக்கு ஒன்றும் ஆகாது. எனினும் அவர் நல்லமுறையில் உடல் நலம் தேறி வருவதற்காக பிரார்த்தனை செய்வோம்.
கிராமங்களையும் விவசாயத்தையும் சார்ந்து வாழும் தேசமான நமக்குக் கட்டாயம் பாம்புக் கடி குறித்து தெரிந்திருக்க வேண்டும்.
வருடத்தின் மாதங்களில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 80% பாம்புக்கடி நிகழ்வுகள் நடந்தேறுகின்றன.
இதில் பெரும்பான்மை நிகழ்வுகள் மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள கிராமங்களிலேயே நிகழ்கின்றன.
கடிபட்டவர்களில் 14% பேருக்கு கடித்தது இன்னதென தெரியாது. இதை UNKNOWN BITE என்று கூறுவோம். மருத்துவர்களைப் பொருத்தமட்டில் கடித்தது இன்னதெனத் தெரியாதவரை அதை பாம்புக்கடியாக எண்ணியே முதலுதவி மற்றும் தேவையான பரிசோதனைகள் செய்வோம்.
வயது வரம்பில் 10 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களே அதிகமாக பாம்புக்கடிக்கு உள்ளாகிறார்கள். இதனால் தான் ஓடுற பாம்ப வெறுங்கால்ல மிதிக்கிற வயசு என்ற சொல்லாடல் வந்ததோ தெரியாது. ஆனால் நிகழும் பாம்புகடியில் 67% கால் மற்றும் பாதங்களில் கடிக்கின்றன. வெறும் காலில் நடப்பவர்களையே பெரும்பாலும் கடிக்கின்றன.
40% பாம்புக்கடி நிகழ்வுகள் மாலை ஐந்து மணி முதல் இரவு பத்து மணிக்குள் நிகழ்கின்றன. 59.2% பாம்புக்கடி நிகழ்வுகள் வீட்டுக்குள்ளும் வீட்டை சுற்றியும் உள்ள இடங்களில் நிகழ்கின்றன.
இந்தியாவைப் பொருத்தவரை
“பிக் ஃபோர்” ( பெரிய நான்கு ) என்று
– நாகப்பாம்பு (Indian Cobra)
– சுருட்டை விரியன் ( Saw scaled viper)
– கட்டு விரியன் ( Common Krait)
– கண்ணாடி விரியன் ( Russell’s viper )
மேற்சொன்ன நான்கும் அதிக விஷம் கொண்ட பாம்பு வகைகள்
நிகழும் பாம்புகடி சார்ந்த மரணங்களும் பெரும்பான்மை மேற்சொன்ன நான்கினால் தான் நடக்கின்றன.
பாம்புக்கடியைப் பொருத்தவரை 3.8% பேருக்கு பாம்பு கடித்த தடம் தெரியாது. எனவே பாம்பு கடி என்றாலே இரண்டு பல் தடம் இருக்கும் என்று எண்ணக் கூடாது. தடமே இல்லாமலும் இருக்கலாம்.

பாம்புக்கடியை தவிர்க்க செய்ய வேண்டியவை
இயன்ற அளவு கட்டிலில் படுப்பது நல்லது
தரையில் படுக்கும் சூழ்நிலை இருப்பின் கொசு வலையை பாய்க்குள் நுழையுமாறு சொருகிக் கொண்டு உள்ளே உறங்குவது பாம்பு , பூரான் , தேள் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பு தரும்.
பெரும்பாலும் கட்டுவிரியன் இரவில் தரையில் உறங்கிக் கொண்டிருப்பவர்களை வலியின்றிக் கடித்து விடும். காலை எழும் போது பக்கவாதம் ஏற்பட்டு எழுந்திருப்பார்கள் அல்லது உறக்கத்திலேயே இறந்திருப்பார்கள்.
வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்டாயம் இரவு நேரங்களில் ஒளி விளக்குகள் அமைத்திருக்க வேண்டும். குறிப்பாக வீட்டுக்கு வெளியே கழிப்பறை இருப்பவர்கள், கழிப்பறை செல்லும் பாதையில் ஒளி விளக்கு எரியுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
8% பாம்புக்கடி நிகழ்வுகள் திறந்த வெளியில் மலம் / சிறுநீர் கழிக்கச் செல்லும் போது நடக்கின்றன.
வீட்டில் உணவு சேமித்து வைக்கும் அறைக்கும் உறங்கும் அறைக்கும் இடையே தூரம் இருக்குமாறு அமைக்க வேண்டும்.
உணவை உண்ண வரும் எலிகளை வேட்டையாட பாம்புகள் உள்ளே வரும். நாகப்பாம்பு மற்றும் கட்டுவிரியன் ஆகியவை நரம்பு மண்டலத்தை தாக்கும் விஷம் கொண்டவை.

சுருட்டை விரியன் மற்றும் கண்ணாடி விரியன் ஆகியவை ரத்த உறைதலை தடுத்து உதிரப்போக்கை ஏற்படுத்தும் விஷம் கொண்டவை.
ஒரு போதும் பாம்பு கடித்த இடத்தில் வாய் வைத்து உறிஞ்சுதல் கூடாது.
ஒருபோதும் பாம்பு கடித்த இடத்தில் இறுக்கமான கயிறு/ துணி வைத்து கட்டுதல் கூடாது. பல நேரங்களில் கடித்தது விஷமற்ற பாம்பாக இருக்கும் ஆனால் கட்டப்பட்ட இந்த துணியால் ரத்த ஓட்டம் பாதித்து கை அல்லது கால் கருப்பாகி திசுக்கள் இறந்து , கை அல்லது காலை முழுவதுமாக நீக்க வேண்டிய நிலை ஏற்படும்.
வாய்வழியாகவோ கண் வழியாகவோ காது வழியாகவோ மருந்துகளை ஊற்றக்கூடாது. கடி பட்ட இடத்தை கீறவோ ஊசி வைத்துக் குத்தவோ கூடாது. கடிபட்டவரை பதட்டப்படுத்தக்கூடாது. அவரை நிதானமாக வைத்திருந்தால் அவரது இதயத்துடிப்பு நார்மலாக இருக்கும். இதனால் விஷம் மேலும் பரவும் வாய்ப்பு குறையும்.
எத்தனை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோமோ அவ்வளவு நல்லது. பைக் இருந்தால் கூட போதும் ஒருவர் பைக் ஓட்ட கடிபட்டவரை நடுவில் ஏற்றிக் கொண்டு பின்னால் ஒருவர் அவரைப் பிடித்துக் கொண்டு உடனே அரசு மருத்துவமனை நோக்கி விரைய வேண்டும்.

காலம் பொன் போன்றது நாகப்பாம்பு விஷம் – சில நிமிடங்களில் கொல்லும் . நாகப் பாம்பைப் பொருத்துவரை நரம்பு மண்டலத்தை செயலற்றதாக ஆக்கும் என்பதால் மூச்சு விடுவதற்கு தேவையான தசைகளை மூர்ச்சையாக்கும். எனவே கடித்தது நாகம் / கட்டு விரியன் என்றால் உடனடியாக செயற்கை சுவாசக் கருவி ( வெண்டிலேட்டர்) வசதி கொண்ட பெரிய அரசு மருத்துவமனை / மருத்துவக் கல்லூரிக்கு நேரடியாக செல்ல முடிந்தால் அது சிறந்தது.
விரியன்களின் விஷம் சில மணிநேரங்கள் எடுக்கும். எனவே எத்தனை விரைவில் மருத்துவமனையை அடைகிறோமோ அத்தனை நல்லது. பல நேரங்களில் பாம்பு கடிக்கும் போது அது வரண்ட கடியாக இருக்கக்கூடும். இதை DRY BITES என்று கூறுகிறோம்.
எந்தப் பாம்பும் தான் வைத்திருக்கும் மொத்த விஷத்தையும் ஒரே கடியில் செலுத்தாது. சில நேரங்களில் பல் தடம் இருக்கும் ஆனால் விஷம் ஏறியிருக்காது. இந்த சூழ்நிலை கடிபட்டவருக்கு சாதமாக அமையும். எனவே பதட்டத்தை இயன்ற அளவு தணிக்க வேண்டும்.
கடிபட்ட காலோ கையோ அதை இயன்ற அளவு அசைக்காமல் வைத்திருக்க வேண்டும். அசைத்தால் விஷம் சீக்கிரம் ரத்தத்தில் கலக்கும் வாய்ப்பு உண்டு. கடித்தது விஷப்பாம்போ விஷமற்ற பாம்போ அதைப்பற்றி ஆராய்ச்சி செய்து நேரத்தை கடத்தாமல் உடனே மருத்துவமனை அடைவதை குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்.
சில தருணங்களில் விஷமற்ற பாம்பு தான் கடித்தது என்று நோயாளிகள் கூறிய நிலையில் அது விஷப்பாம்புக் கடியாக இருந்ததை பார்த்துள்ளேன்.
விஷமுள்ள பாம்புக்கடியை பொருத்தவரை முக்கியமான சிகிச்சை – பாம்பின் விஷத்திற்கு எதிராக தரப்படும் விஷமுறிவு மருந்தாகும்.
எத்தனை விரைவில் மருத்துவமனையை அடைந்து இந்த விஷமுறிவு மருந்தை ஆரம்பிக்கிறோமோ அத்தனை நல்லது
இதற்கிடையில் பாம்புக்கடியால் கடிபட்ட இடத்தில் வீக்கம், ரத்தக் கசிவு , நெரிகட்டுதல் போன்றவை ஏற்படலாம்
வாந்தி, குமட்டல், மயக்கம், சோர்வு, பிரவுன் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல், பக்கவாதம் ஏற்படுதல் , கண் இமைகள் கீழிறங்குதல் , மூச்சு திணறல் , மூச்சு விடுவதற்கு தேவையான தசைகள் செயலிழப்பதால் மரணம் ஏற்படும். இவற்றுக்கும் தேவையான சிகிச்சையை காலத்தே செய்ய வேண்டும்.
விஷமற்ற பாம்புகள் கடித்தாலும் கடித்த இடத்தில் புண் வருவது, வீக்கம் ஏற்படுவது நிகழும். எனவே அதற்கும் முறையான சிகிச்சை தேவை. பாம்புக்கடியை இயன்ற அளவு தவிர்ப்போம் மீறி பாம்பு கடித்து விட்டால் பதட்டப்படாமல் உடனே அரசு மருத்துவமனைகளுக்கு விரைவோம்
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.