சாரைப் பாம்புகள் ஆபத்தானவையா ?
சாரைப் பாம்புகளை அடிக்கக் கூடாது என்று பெரியவர்கள் குறிப்பாக விவசாயிகள் சொல்வதைக் கேள்விப் பட்டிருப்போம். இந்த சாரைப் பாம்புகள் ஆபத்தானவையா? மனிதருக்கு தீங்கு விளைவிக்குமா? இலங்கையில் காணப்படும் சாரைப் பாம்புகள் Common Rat Snakes அல்லது Indian Rat Snakes என்று அழைக்கப்படுகின்றன. இதன் விஞ்ஞானப் பெயர் Ptyas mucosa என்பதாகும். சாரைப் பாம்புகள் சூழலில் தீங்கிழைக்கும் பிராணிகளைக் கட்டுப் படுத்துகின்றன.
சாரைப் பாம்புகள் உணவாக எலிகள், மூஞ்சூறுகள், தவளை மற்றும் சிறிய விஷப் பூச்சிகளை உணவாக உட்கொள்கின்றன. ஒரு சாரைப்பாம்பு ஒரு மாதத்தில் பல டசின் எலிகளை சூழலிலிருந்து அகற்றும். சாரைப் பாம்புகள் இல்லாமல் போகும்போது எலிகளின் எண்ணிக்கையும் ஏனைய பூச்சிகளின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரிக்கும். எனவே சாரைப் பாம்புகள் இயற்கையாகவே மனிதருக்கு தீங்கிழைக்கும் சிறிய பிராணிகள், பூச்சிகளை கட்டுப்படுத்துவதில் பங்கு வகிக்கிறது.
சாரைப் பாம்புகள் விஷமற்றவை, மற்றும் மனிதரைத் தாக்குவதில்லை. மனிதர் ஒருவரை சாரைப்பாம்பு ஒன்று எதிர்கொள்ளும்போது உடனடியாக தப்பிச் செல்லவே முயற்சி செய்யும். மனிதருக்கு தீங்கிழைக்காத ஒன்றைக் கொல்வது தேவையற்றது என்பதுடன் அது எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தும்.
சாரைப் பாம்புகள் உங்கள் வீடுகளின் இயற்கைப் பாதுகாவலன் சாரைப்பாம்புகள் இல்லாவிட்டால் உங்கள் சூழலில் எலிகள், தவளைகள் போன்றவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் இயற்கையில் உணவு மிகுதியாவதால் அவற்றைத் தேடி விஷமுள்ள ஜந்துக்கள் வருவதும் அதிகரிக்கும். விஷமற்ற பாம்புகள் சூழலில் காணப்படுவது, விஷமுள்ள பாம்புகளின் வருகையைக் குறைக்கிறது.

சூழல் சமநிலையைப் பேணுவதில் சாரைப் பாம்புகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. சூழல் சமநிலை என்பது ஒரு சங்கிலி போன்றது. சூழல் சமநிலைக்கு மிகவும் தேவையான ஒரு விலங்கினை அழிப்பது சூழல் சமநிலையை அதிகம் குழப்புகிறது. சிறிய விலங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதில் சாரைப்பாம்புகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன.
சாரைப் பாம்பு கடிக்குமா?
மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் இந்தப் பாம்புகள் கடிக்கலாம். குறிப்பாக அவற்றை மிதிக்கும்போது, அல்லது பிடிக்க முயற்சிகும்போது, அல்லது தப்பிக்க வேறு வழிகள் இல்லாதபோது அவை மனிதரை கடிக்கலாம். இவை விஷம் அற்றவை என்பதால் ஆபத்து எதுவும் இல்லை. ஆனால் இந்தப் பாம்புகளின் பற்கள் கூர்மையானவை என்பதால் காயம் ஏற்படலாம். மேலும் விலங்குகள் கடிப்பதால் ஏற்படக்கூடிய கிருமித் தொற்றுக்கள் ஏற்படலாம். எனவே சாயத்தை நன்கு சவர்க்காரமிட்டுக் சுத்தமான நீரால் கழுவி Antiseptic மருந்துகள் இடுதல் வேண்டும். சாரைப்பாம்பு கடித்தால் பின்னாட்களில் கை, கால்களில் நடுக்கம் ஏற்படும் என்பது சுத்தமான மூட நம்பிக்கை.
உவர்மலையின் பல பகுதிகளில் மஞ்சள் நிற சாரைப் பாம்புகள் பல காணப்படுகின்றன. அவற்றை நீங்கள் பார்க்க நேர்ந்தால் அவற்றை அது பாட்டில் செல்ல விடுங்கள். உங்களுக்குப் பயமாக இருந்தால் சற்று எட்டி நில்லுங்கள். அவற்றைத் தாக்க முயற்சி செய்ய வேண்டாம். அவை நீங்கள் வாழும் சூழலைப் பாதுகாக்கும் பணியைச் செய்கின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
— ஃப்ரெடி ஆபிரகாம்








Comments are closed, but trackbacks and pingbacks are open.