அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி.. எதிர்பார்க்காத நிலையில் சமூகநீதி கூட்டமைப்பு!
அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி.. எதிர்பார்க்காத நிலையில் சமூகநீதி கூட்டமைப்பு!
மதுரை: மதுரையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட 261 ஜாதிகளை ஒருங்கிணைத்த சமூகநீதி கூட்டமைப்பு மாநாடு நடந்தது. இதற்கு ஒருங்கிணைப்பாளர் நாகரத்தினம் தலைமை வகித்தார். வழக்கறிஞர் ரஜினி வரவேற்றார். நிர்வாகிகள் விஜயகுமார், ராமராஜூ உட்பட பல்வேறு சமுதாய நிர்வாகிகள் பங்கேற்றனர். மாநாட்டு மலரை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட டாக்டர் ஜெபமணி பெற்றார். சமூகநீதி கூட்டமைப்பு தலைவர் ரத்தினசபாபதி பேசுகையில் ”ஆட்சிக்காகவும் கூட்டணிக்காகவும் தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க.,வின் பழனிசாமி கொண்டுவந்த உள் ஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்தது. இதுகுறித்து தி.மு.க., அரசு மவுனம் சாதிக்கிறது.தமிழகத்தில் பல தரப்பட்ட சாதிகளை சேர்ந்த மக்கள் வாழ்கின்றன.இதில் சில பெரும்பான்மை வாக்குகளை மையப்படுத்தி இடஒதுக்கீட்டு அரசியலை நகர்த்திய பெருமை முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களையே சாரும். எதிர்பாராத விதமாக முதல்வர் பதவி கிடைக்கப்போய், மீண்டும் ஆட்சியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற பதவி ஆசையில், உட்கட்சிக்குழப்பம், கூட்டணி நிபந்தனைகளுக்காக எடப்பாடி எடுத்த அதிரடி முடிவுதான் வன்னியர் 10.5% இடஒதுக்கீடு.
தன் சொந்த தொகுதியில் வெற்றி, தான் சார்ந்த சமூகம் வசிக்கும் பகுதியில் வெற்றியை உறுதி செய்து ஆட்சியிலும், கட்சியிலும் தன் இருப்பை தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்ற ஒரே கராணத்திற்காக, ஒரு அப்பட்டமான, வெளிப்படையான சாதி அரசியலை முன்னெடுத்த முதல்வர் என்ற பழியும், பாவமும் எடப்பாடியாருக்கே சேரும்.
முப்பதாண்டு காலம் ஆட்சியில் இருந்த கட்சியின் மாண்பினையும், அக்கட்சி மீதான மக்களின் நம்பிக்கையையும் குழைக்கும் விதமாக, அக்கட்சியின் நிறுவன தலைவரான எம்ஜியார் அவர்களின் எண்ணங்களுக்கு எதிராக, அவசர அவசரமாக கொண்டுவரப்பட்ட வன்னியர் 10.5% இடஒதுக்கீடு உயர்நீதிமன்றத்தாலும், உட்சநீதிமன்றத்தாலும் நிராகரிக்கப்பட்டதில் இருந்தே வன்னியர் மீதான அக்கறையிலும் இச்சட்டம் கொண்டுவரப்படவில்லை என்பதை உணர்த்தியது.
116 சாதிகள் ஆண்டு அனுபவித்து வரும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 20% இடஒதுக்கீட்டை, ஒரு சாதிக்கு மட்டும் சரிபாதிக்கும் அதிகமாக, சட்டவிதி முறைகளுக்கு எதிராக கொடுக்கத் துணிந்ததற்கு அடிப்படைக் காரணம், பிற 115 சாதிகளிடையே ஒற்றுமை இல்லை, போராடும் வலிமை அற்ற சமூகங்கள், சில பகுதிகளில் பரவலாக இருப்பவர்கள், சாதிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் தேர்தல் களத்தில் வெற்றி தோல்விகளை பாதிக்காது என்று அவர்கள் எடுத்த தீர்க்கமான முடிவு.
தங்கள் அதிகார இச்சைக்காக, 115 சமூகங்களின் உரிமைகளை பறித்து, வேறொரு சாதியிடம் அடகு வைத்து ஆட்சியை பிடிக்கும் அதிகாரப்பசி தான்.
தமிழகத்தின் சமூக நல்லிணக்கமும், அமைதியும் கேள்விக்குள்ளாகியிருந்த நிலையில், தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை நீதிமன்றங்களில் சரிசெய்துகொண்ட 115 சமூகங்கள், தொடர்ந்து சமூகங்களை ஒன்றிணைக்கும் பணியினையும் செய்து வந்தது. ஒரு கட்டத்தில் இம்முயற்சி வலுப்பெற்று, வன்னியர் அல்லாத 115 மிகவும் பிற்படுத்தப்பட்ட ,146 பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் இணைந்து உருவாக்கிய “சமூகநீதி கூட்டமைப்பு”, கடந்த ஒன்னரை ஆண்டுகாலமாக சிறு சிறு கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வந்தது. இதற்கு அடுத்தகட்டமாக, அரசியல் கட்சிகள் இச்சமூகங்களால் எதைச் செய்யமுடியாது என்று நம்பிக் கொண்டிருந்தார்களோ, அதை தகர்த்து எறியும் வகையில், 261 சாதிகளும் ஓரணியில் திரண்டு சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி மாபெரும் சமூகநீதி மாநாட்டை நடத்திட தீர்மானித்தது. அரசியல் கட்சிகள் போன்றே சில சாதிய அமைப்புகளும் இது சாத்தியமில்லாதது என்று ஒதுங்கிக்கொள்ள, சமூகநீதி கூட்டமைப்பில் அங்கம் வகித்த அமைப்புகள் மனம்தளராது இந்த முயற்சியை முன்னெடுத்து தீவிரமாக பணியாற்றி வந்தன.
இதன்விளைவாக, யாரும் எதிர்பாராத வகையில் மாலை மதுரையில் மிகப்பிரமாண்ட மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி அரசியல் கட்சிகளை புருவம் உயர்த்த வைத்துள்ளது சமூகநீதி கூட்டமைப்பு.
எந்தவித சலசலப்பிற்கும் இடம் கொடுக்காமல், திட்டமிட்டு, மிகநேர்த்தியாக, ஒழுக்கத்தோடும், கட்டுப்பாட்டோடும் அமைதியாகவும், அழுத்தமாகவும் தடம்பதித்துள்ளது சமூக நீதி கூட்டமைப்பு.
இந்திய துணைக்கண்ட வரலாற்றில் எங்கும், எப்பொழுதும் நடக்காததை, 250-க்கும் மேற்பட்ட எளிய சமூகங்கள், எந்த தனிப்பட்ட தலைவர்களையும் முன்னிறுத்தாமல், தங்கள் உரிமைக்காக ஒன்றிணைந்து, ஒரு மாபெரும் மாநாட்டின் மூலம் புதிய புரட்சியை தமிழகத்தில் நடத்திக்காட்டியுள்ளனர்.
மேலும் தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, வகுப்பு வாரியாக இடஒதுக்கீடு வழங்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவது, மத்திய அரசு 2011ல் நடத்தப்பட்ட ஜாதிவாரி சமூக, பொருளாதார கணக்கெடுப்பு புள்ளி விவரங்களை வெளியிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வற்றாத ஆறுகளெல்லாம் இமயத்தின் உச்சியில் வடக்கிலிருந்து புறப்பட்டு பாய்வதுபோல், சமூகநீதி எனும் பெரும்நதி தெற்கே மதுரையில் இருந்து புறப்பட்டு வடக்கு நோக்கி பாயத்தொடங்கி உள்ளது.