தமிழகத்தின் தென் திருப்பதி பெருமாள் கோயில்! ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகள்!
திருச்சி மாவட்டம், துறையூரில் பிரசித்தி பெற்ற, ” தென் திருப்பதி ” என பக்தர்களால் போற்றப்படும் பெருமாள்மலை உள்ளது. இங்கு மலை மீது உள்ள கோவிலுக்கு பக்தர்கள் படிகள் வழியாக நடந்தும், தார்ச்சாலை வழியாகவும் வேன், கார், இருசக்கர வாகனங்களிலும் சென்று பெருமாளைத் தரிசனம் செய்து வருகிறார்கள். இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் இன்னும் ஓரிரு தினங்களில் புரட்டாசி சனிக்கிழமை உற்சவம் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் குவிந்து விடுவார்கள்.
இந்நிலையில் , கார், வேன் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மூலம் மலைக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் தார்ச்சாலையில் பயணிக்கும் போது அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகளை கடந்து தான் சென்றாக வேண்டும்.
வளைவுகளில் போதிய வலுவான தடுப்புகள் அமைக்கப்படாமல் , வலிமையற்ற மரசவுக்குகள் மூலம் ஒப்புக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புரட்டாசி சனிக்கிழமைகளில் வாகனப்போக்குவரத்து அதிகமாகும் சூழலில் மலைப்பாதையில் எதிர்த்திசையில் வரக்கூடிய வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் போது விபத்து மற்றும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் தடுப்பதற்காக வலிமையான தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
புரட்டாசி சனிக்கிழமைகளில் மலைக்கு செல்லும் வாகனங்கள் கட்டணம், பிரசாத ஸ்டால்கள், உண்டியல், தரைக்கடை வாடகை என பெரிய தொகையை அறநிலையத்துறை ஒவ்வொரு வருடமும் வசூலித்து வரும் நிலையில், பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை அறநிலையத்துறை உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாகவும் உள்ளது.
— ஜோஷ்








Comments are closed, but trackbacks and pingbacks are open.