ரூ.10 லட்சத்திற்கு ஏலம்போன மாம்பழம்.. அப்படி என்ன ஸ்பெஷல்?
இலங்கை யாழ்ப்பாணம் அருகே நாகர்கோவில் வடக்கு முருகையா தேவஸ்தான திருவிழா ஆகஸ்ட் 8ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான மாம்பழத் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. அதனைத் தொடர்ந்து உலகப் பிரசித்தி பெற்ற முருகன் விநாயகர் இடையிலான மாம்பழப் போட்டி நாடகம் நடைபெற்றது. அதில் உலகை முதலில் சுற்றி வந்து ஞானப்பழத்தை பெறுவது யார் என்ற நிகழ்வு நாடகமாக நடத்தப்பட்டது. இந்த நாடகத்தில் முருகன் மயில் ஏறி உலகைச் சுற்றி செல்ல விநாயகரோ சிவனையும், பார்வதியையும் வலம் வந்து மாம்பழத்தைப் பெற்றுக் கொண்டார். இந்த நாடகம் முடிவடைந்த பின் மாம்பழத்தை கோயில் நிர்வாகிகள் ஏலம் விட்டனர்.
அப்போது மாம்பழத்தின் அடிப்படை தொகையாக ரூ.10 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டது. இதன் தொகை அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில், மல மலவென கண்ணை மூடி திறப்பதற்குள் ஏலத்தின் தொகை ரூ.6 லட்சத்திற்கு சென்று நின்றது. அதன்பின் சில நிமிடங்களில் ரூ.10 லட்சத்திற்கு ஏலம் கேட்கப்பட்டது. இறுதியாக ரூ.10 லட்சத்திற்கு மேல் ஏலம் கேட்க யாரும் முன் வரவில்லை. இதனால் ரூ.10 லட்சத்திற்கு ஏலம் கேட்ட நபருக்கு மாம்பழம் அளிக்கப்பட்டது.
இதனால் ஒரு மாம்பழம் ரூ.10 லட்சத்திற்கு ஏலத்தில் வாங்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அண்மையில் இலங்கை யாழ்ப்பாணம் ஸ்ரீசிவசுப்பிரமணியர் கோயிலில் நடைபெற்ற மாம்பழத் திருவிழாவில் ஒரு மாம்பழத்தை ரூ.4.60 லட்சத்திற்கு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பக்தர் ஏலம் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
— மு. குபேரன்