அறத்தின் அடிப்படையில் வெற்றிபெற்றதே தமிழர்களின் மேலாண்மை ! திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி தேசிய கருத்தரங்கில் புகழாரம் !
அறத்தின் அடிப்படையில் வெற்றிபெற்றதே தமிழர்களின் மேலாண்மையியல் கூறுகளுள் முதன்மையானது திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறைக் கருத்தரங்கில் புகழாரம் ! திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறை சார்பாக தமிழ் இலக்கியத்தில் மேலாண்மை என்னும் மையப்பொருளில் தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கத் தொடக்க விழாவில் முனைவர் டே.வில்சன் வரவேற்புரை வழங்கினார். தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ஞா.பெஸ்கி கருத்தரங்க நோக்கவுரையாற்றினார்.
தலைமையுரையாற்றிய அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல் எந்திரமயமான சமகாலச்சூழலில் திட்டமிடுதல், நிறுவுதல், தலைமையேற்றல், கட்டுப்படுத்துதல், வெற்றிகாணல் ஆகிய ஐந்து வரையறைகளுக்குள் இயங்கிடும் மேலாண்மையியலின் கூறுகளைத் தமிழ் மரபினூடாகத் தேடும் முயற்சியில் தமிழாய்வுத்துறை ஈடுபட்டிருப்பது மகிழ்ச்சியைத் தருவதாகப் பதிவு செய்தார். தொடர்ந்து வாழ்த்துரையாற்றிய கல்லூரி முதல்வர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர் சூழ்நிலைக்கேற்ப தேசியக் கருத்தரங்கிற்கானப் பொருண்மையைத் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் கருத்தரங்குகளை நடத்தி வருகிற தமிழாய்வுத் துறையைப் பாராட்டினார்.
வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரி மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் கவியருவி முனைவர் தி.மு. அப்துல் காதர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். தொல்காப்பியம் தொடங்கி திருக்குறள் கடந்து நீர் மேலாண்மை உள மேலாண்மை நேர மேலாண்மை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தமிழர்களின் பரந்த மேலாண்மைறிவு வெளிப்பட்ட விதத்தை இளைய தலைமுறையினருக்கு ஏற்றவகையில் தகுந்த சான்றுகளோடு பதிவு செய்தார். தொடக்க விழாவின் நிறைவில் முனைவர் ராஜாத்தி நன்றியுரையாற்றினார்.
முனைவர் இந்திராகாந்தி, முனைவர் தி.நெடுஞ்செழியன் அமர்வுத் தலைவராக பொறுப்பேற்று அமர்வுகளை வழிநடத்தினர். பாரம்பரிய நடனமான பரதநாட்டியத்துடன் தொடங்கிய நிறைவு அரங்கு கல்லூரி செயலாளர் அருள்முனைவர் கு.அமல் தலைமையில் நடைபெற்றது. முனைவர் பெஞ்சமின் ஆரோன் டைட்டஸ் வரவேற்புரையாற்றினார்.
செயலர் தந்தை தமது தலைமை உரையில் மக்களைக் காத்து அரசாட்சி செய்ததும், மற்ற நாட்டு மன்னர்களிடம் நட்பு பாராட்டியதும், மற்ற அரசர்களுடன் போர் அறத்தின் அடிப்படையில் வெற்றிபெற்றதும் மேலாண்மையியல் கூறுகளுள் தலையானவையாகப் போற்றப்படுகின்றன. கல்வி மேலாண்மை, வணிக மேலாண்மை, உளவியல் மேலாண்மை வேளாண்மை மேலாண்மை எனத் தமிழர்களின் சிந்தனை மரபுகள் உலக அரங்கில் தனித்துவம் மிக்கவை.
எமது கல்லூரித் தமிழாய்வுத்துறை அதற்கான சான்றுகளைத் தமிழ் இலக்கியங்களுள் தேடிக் கருத்தரங்கை நடத்தி,
ஆய்வுக்கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டிருப்பது மிக்க மகிழ்வைத் தருகிறது எனக் குறிப்பிட்டு உரையாற்றினார். திருச்சிராப்பள்ளி மாவட்ட நூலக அலுவலர் அ.பொ. சிவக்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வாசிப்பின் அவசியத்தையும் தமிழர்களின் மேலாண்மைச் சிந்தனைகளையும் பகிர்ந்து கொண்டார். நிறைவில் கருத்தரங்கச் செயலாளர் முனைவர் கு.அந்தோணிராஜா நன்றியுரை ஆற்றினார். பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், முதுகலை, இளங்கலை இலக்கிய மாணவர்கள் உள்ளிட்ட பலர் இக்கருத்தரங்கில் பங்கேற்று பயனடைந்தனர்.
– ஆதன்