எங்களாலும் எழுத முடியும் என்ற நம்பிக்கை கொடுத்த பயிலரங்கு !

கற்றல் அனுபவம் வெறுமனே பாடப்புத்தகங்களோடு முடங்கிவிடாமல், கள அனுபவமாகவும் அமையப்பெற வேண்டுமென்ற முனைப்பில், திருச்சி புனித சிலுவைக்கல்லூரியின் தமிழ்த்துறையும் அங்குசம் செய்தியும் இணைந்து ஏற்படுத்திக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், பத்து நாட்களுக்கான பயிலரங்கு ஜன-30 தொடங்கி பிப் 10 வரையில் நடைபெற்றது.

பயிலரங்குதமிழ்த்துறை முதுகலை முதலாமாண்டு மாணவிகள் பங்கு கொண்ட இப்பயிலரங்கில், இதழியல் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டன. அச்சு இதழ்களின் வகைப்பாடுகள், செய்தி உருவாகும் விதம், செய்தி சேகரிப்பு தொடங்கி இதழின் அச்சாக்கம் வரையிலான பல்வேறு கட்ட பணிகள் குறித்த சித்திரத்தை வழங்கும் வகையில் இப்பயிலரங்கம் திட்டமிடப்பட்டது. இதழியல் சார்ந்த பயிற்சிகளை அங்குசம் செய்தியின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் ஜெ.டி.ஆர்., பொறுப்பாசிரியர் பேராசிரியர் தி.நெடுஞ்செழியன் மற்றும் முதன்மை செய்தியாளர் வே.தினகரன் ஆகியோர் வழங்கினார்கள்.

டிஜிட்டல் மீடியாவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், வழக்கமாக பயன்படுத்தும் கைப்பேசியைக் கொண்டே, எப்படியெல்லாம் செய்தியை உருவாக்கலாம்? கவித்துவமான புகைப்படங்களை எப்படியெல்லாம் எடுக்கலாம்? என்பது குறித்த பயிற்சியை புகைப்படக்கலைஞர் யோகா விஜயக்குமார் வழங்கினார்.

பயிலரங்குமாணவர்கள் தமிழ்த்துறையை விரும்பித் தேர்வு செய்ததற்கான காரணங்களை கேட்டறிந்து, அவர்களின் விருப்பங்களையும் அறிந்து, அதற்கேற்ப அவர்கள் தங்களது துறை சார்ந்த தனித்திறமைகளை எவ்வாறெல்லாம் மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற கல்விசார் வழிகாட்டுதலை வழங்கினார், முனைவர் பட்ட ஆய்வாளர் ரேவதி ஜெ.டி.ஆர். மிக முக்கியமாக, போட்டி நிறைந்த உலகில் இப்போதிருந்தே நம்மை எவ்வாறெல்லாம் தயார்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது, என்பதை நடைமுறை உதாரணங்களிலிருந்து எடுத்துரைத்தார்.

வெறுமனே பார்வையாளர்களாக அல்லாமல், அவர்களையும் பங்கேற்பாளர்களாக, படைப்பாளர்களாக மாற்ற வேண்டுமென்ற ஆசிரியர் ஜெ.டி.ஆரின் ஆலோசனையின்படி, மாணவர்களுக்கு களப்பயிற்சிகள் வழங்கப்பட்டன. மாணவர்களும் பேரார்வத்தோடு, பல்வேறு கோணங்களில், அவரவர்களின் பாணியில் தங்களது படைப்புகளை வழங்கியிருந்தார்கள்.

பயிலரங்குஇதனை தொடர்ந்து நடைபெற்ற நிறைவு விழாவில், சிறப்பான பங்களிப்பை வழங்கிய மாணவர்களுக்கு ஆசிரியர் ஜெ.டி.ஆர். மற்றும் பேராசிரியர் நெடுஞ்செழியன் ஆகியோர் நினைவுப்பரிசுகளை வழங்கினார்கள்.

இதுவரையில் பங்கேற்ற கள அனுபவங்களிலிருந்து இந்த பயிலரங்கு வேறுபட்டு இருந்தததாகவும்; தங்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்ததாகவும் மாணவர்கள் தங்கள் அனுபவ பகிர்வில் குறிப்பிட்டார்கள். தொடர்ந்து தாங்கள் எழுத வேண்டுமென்ற உந்துதலை இப்பயிலரங்கு ஏற்படுத்தியதாகவும் நெகிழ்வோடு பதிவு செய்தார்கள்.

பயிலரங்குபிழைப்புக்கான கல்வி என்ற வரம்போடு நின்றுவிடாமல், சமூகம் சார்ந்த செயல்பாடுகளிலும், இதழியல் சார்ந்த பணிகளிலும் மாணவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென்றும்; அவ்வாறு முன்முயற்சியோடு இயங்கும் மாணவர்களுக்கு அங்குசம் என்றும் துணைநிற்கும் என்றும்; அவர்களது தேர்ந்த படைப்புகளை அங்குசம் செய்தி தொடர்ந்து வெளியிடும் என்ற அறிவிப்போடு நிகழ்வை நிறைவு செய்தார், இதழின் ஆசிரியர் ஜெ.டி.ஆர்.

–              இளங்கதிர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.