தேசிய கல்விக் கொள்கை : மறுக்கப்படும் மாநில உரிமை ! மார்ச்-23 திருச்சியில் கருத்தரங்கம் !
கல்விக்கான நிதி ஒதுக்கீடு செய்ய மறுப்பது தொடங்கி, ஜி.எஸ்.டி. வரிவசூலில் மாநில அரசுக்கு வழங்க வேண்டிய பங்குத் தொகையையும்கூட வழங்க மறுப்பது; மும்மொழிக் கொள்கை திணிப்பு என பல்வேறு வகைகளில், மாநில அரசின் உரிமை பறிப்பு மற்றும் ஒன்றிய அரசின் அதிகாரத்தை திணிக்கும் நோக்கில் அடுத்தடுத்து பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது, ஒன்றிய அரசு.
திராவிட இயக்கங்களின் தொடர் களப்போராட்டங்களால், பல்வேறு தளங்களிலும் மேன்மைபடுத்தப்பட்டு பண்படுத்தப்பட்டிருக்கும் கல்விச்சூழலை, முற்றிலும் சிதைத்து அழிக்கும் நோக்கத்தோடு தேசியக் கல்விக்கொள்கை (2020)-ஐ திணித்து வருகிறது, ஒன்றிய அரசு.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தேசிய கல்விக்கொள்கையில் இடம்பெற்றிருக்கும் சரத்துக்களையெல்லாம், கொள்ளைப்புற வாசல் வழியே அடுத்தடுத்து அமல்படுத்திவிடவும் துடித்து வருகிறது, ஒன்றிய அரசு. மிக முக்கியமாக, தேசிய கல்விக்கொள்கையில் வகுக்கப்பட்டிருக்கும் ஷரத்துகளின்படியான ஒன்றிய அரசின் திட்டங்களை செயல்படுத்த மறுக்கும் மாநிலங்களுக்கு கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை வழங்க முடியாது என்று அடாவடியில் ஈடுபட்டு வருகிறது. குறித்த நேரத்திற்கு நிதி ஒதுக்கீடு மறுக்கப்படும் நிலையில், ஆசிரியர்கள் ஊழியர்களுக்கு சம்பளம் போடுவதில்கூட, கடும் தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது, தமிழகம்.

இந்த பின்புலத்தில், தேசிய கல்விக் கொள்கை ஏன் எதிர்க்கப்பட வேண்டும்? என்ற கேள்விக்கு விடையளிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் வாய்ப்புள்ள மேடைகளில் தொடர் விவாதங்களை நடத்திவருகிறார், கல்வியாளரும் பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலருமானபு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு.
இதன் தொடர்ச்சியாக, திருச்சி மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழக தோழர்களின் ஏற்பாட்டில், எதிர்வரும் மார்ச் 23 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் ரவி மினி ஹால் அரங்கில், “தேசிய கல்விக் கொள்கை : மறுக்கப்படும் மாநில உரிமை” என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றவிருக்கிறார்.
சட்ட எரிப்பு வீரர், பெரியாரின் பெருந்தொண்டர் இடையாற்று மங்கலம் முத்துச்செழியனின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வின் தொடர்ச்சியாக, இக்கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந்நிகழ்வில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலர் கோவை கு.இராமகிருட்டிணன், திமுகவின் திருச்சி மத்திய மாவட்ட செயலர் க.வைரமணி உள்ளிட்டோர் பங்கேற்று உரை நிகழ்த்தவிருக்கிறார்கள்.
“திருச்சியில் வசிக்கும் / படிக்கும் மாணவர்களில், இளைஞர்களில் வாய்ப்புள்ளவர்கள் கருத்தரங்கில் பங்கேற்க வேண்டும். மக்களுடன் உரையாடல் தொடர்ந்து நிகழ வேண்டும். அதற்கு இத்தகைய கருத்தரங்கம் ஒரு வாய்ப்பு. வாய்ப்புள்ளவர்கள் அவசியம் வாருங்கள்” என்பதாக, வேண்டுகோள் விடுக்கிறார், பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு.
— இளங்கதிர்.