பெயர்களுடன் பிணைந்திருக்கும் அரசியல் !
இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட திருக்கோயில்களில் நியமிக்கப்படும் அறங்காவலர்கள் இந்து சமயத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது அறநிலையத்துறை கடைப்பிடிக்க வேண்டிய விதி. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரெகுநாதபுர இராஜகோபாலசாமி திருக்கோயில் அறங்காவலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பெயர், நர்கீஸ்கான்.
“இஸ்லாமியரை இந்து கோயிலில் அறங்காவலராக நியமிப்பதா?“ என்று பா.ஜ.க.வின் ஹெச்.ராஜா குற்றம்சாட்டினார். நர்கீஸ்கான், முஸ்லிம் அல்ல. அவருடைய அப்பா பெயர் தங்கராஜ். அவர் இந்து. அவருடைய மகனும் மதம் மாறவில்லை. தங்கராஜின் மனைவிக்கு பிரசவம் சிக்கலாக இருந்ததால், அப்போது உதவிய டாக்டரான நர்கீஸ்கான் பெயரை தன் மகனுக்கு சூட்டி, நன்றிக்கடன் செலுத்தியிருக்கிறார் தங்கராஜ்.
இராமநாதபுரம் மாவட்ட தி.மு.கழகச் செயலாளராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார் காதர்பாட்சா(எ) முத்துராமலிங்கம். அவருடைய அப்பா பெயர், காதர்பாட்சா(எ) வெள்ளைச்சாமி. முத்தமிழறிஞர் கலைஞரின் அன்புக்குரிய சட்டமன்ற முன்னாள் உறுப்பினர். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தங்கை மகன்தான் காதர்பாட்சா(எ) வெள்ளைச்சாமி. தாய்மாமாவான முத்துராமலிங்கத் தேவர் வைத்த பெயர்தான் காதர்பாட்சா.

அன்னையாக இருந்து தன்னை வளர்த்தெடுத்த முஸ்லிம் குடும்பத்தினரின் நினைவாக, தன் தங்கை மகனுக்கு காதர்பாட்சா என்ற பெயரை அவர் சூட்டியிருக்கிறார். அந்த காதர்பாட்சாவின் மகனும் தன் அப்பா பெயரை, தன் பெயரில் கொண்டிருக்கிறார். காதர்பாட்சா என்பது இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் பெயர் போலவே நிலைத்திருக்கிறது.
தி.மு.க.வின் இலக்கிய அணியில் பொறுப்பு வகித்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ச.அமுதன் தன் மகன்களில் ஒருவருக்கு ரகுமான் என்று பெயர் வைத்தார். அதே மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.பி.ஆதிநாராயணன் என்ற தி.மு.க.வின் மூத்த பிரமுகர் தன் மகனுக்கு நபி என்று பெயர் சூட்டினார். அந்த நபி பின்னாளில் டாக்டர் ஆனார். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சம்சுதீன், தி.மு.க.வைச் சேர்ந்தவர். கட்சியில் கதிரவன் என்று அறியப்பட்டவர். கவின், நிலா போன்ற தமிழ்ச் சொற்களைப் பெயர்களாகக் கொண்ட இஸ்லாமியர்கள் இந்த மண்ணின் பெருமை.
லெனின், ஸ்டாலின், கென்னடி, ரூசோ இவையெல்லாம் ஐரோப்பா கண்டத்தில் கிறிஸ்தவ மதப் பெயர்கள். ஆனால், இந்தப் பெயர்கள் தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தவர் குடும்பங்களிலும், பொதுவுடைமை இயக்கக் குடும்பங்களிலும் சூட்டப்பட்டிருக்கும். அந்தக் குடும்பங்கள் கிறிஸ்தவக் குடும்பங்களல்ல. அதற்கு சரியான உதாரணம், கலைஞரின் மகனான இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஜோதிபாசு, நிரூபன் சக்கரவர்த்தி என்று பொதுவுடைமை இயக்கத்தின் சார்பில் மேற்குவங்கத்திலும் திரிபுராவிலும் முதலமைச்சர்களாக இருந்த அப்பழுக்கற்றத் தலைவர்களின் பெயர்களைக் கொண்ட தமிழர்கள் உண்டு. 1991ல் தி.மு.க. ஆட்சியைக் கலைக்க அப்போதைய பிரதமர் சந்திரசேகர் அரசு முடிவெடுத்தபோது, “நியாயமான காரணமின்றி கலைக்க முடியாது” என்று உடன்பட மறுத்தவர் அன்றைய தமிழ்நாடு ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா. அப்போது முதன்முதலாக தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ.வாக ஆனவர் சின்னசேலம் தொகுதியின் உதயசூரியன். தற்போது அவர் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.வாக உள்ளார். 5 முறை சட்டமன்ற உறுப்பினரான உதயசூரியனின் மகன் பெயர் பர்னாலா.
பெயரை வைத்து அரசியல் செய்ய நினைத்தார் ஹெச்.ராஜா. ஆனால், தமிழ்நாட்டில் அரசியல் நிகழ்வுகளின் அடையாளமாகவும், நன்றியுணர்வின் வெளிப்பாடாகவும் இருக்கின்றன மத எல்லைகளைக் கடந்த மனிதநேயப் பெயர்கள்.
— கோவி.லெனின்.
பெயரை வைத்து அரசியல் செய்ய நினைக்கு மதவாதிகளுக்கு, மண்ணின் மைந்தர் கோவி.லெனின் அவர்களின் இக்கட்டுரை பாடம் புகட்டும். சிறந்த கட்டுரை.
– ஆரூர் செ.கர்ணா.