கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்குக் கண்டனம்!
கவிஞர் மனுஷ்யப்புத்திரன் நாளிதழ் ஒன்றில், ”மாவட்டப் புத்தகத் திருவிழா – உள்ளூர் எழுத்தாளர்களுக்கான பரிவட்டம் அல்ல’ என்று கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் அவருடைய கருத்துக்கு எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், மார்ச் 23 முதல் மார்ச் 30 வரை நடைபெற இருக்கும் தேனி மாவட்டப் புத்தகக் கண்காட்சியில் மார்ச் 24 அன்று கவிஞர் மனுஷ்யபுத்திரன் பேச அழைக்கப்பட்டிருக்கிறார். இதற்கு தேனி மாவட்ட இலக்கிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
வையைத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் புலவர் இளங்குமரன், தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் தேனி மு. சுப்பிரமணி, பாரதி தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவர் கம்பம் பாரதன், வராகநதி தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் அ. பாண்டிய மகிழன், ஆண்டிபட்டி இலக்கியக் கூட்டமைப்பு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் இணைந்து, தங்களது அமைப்புகளின் சார்பில் கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்குக் கண்டனத்துடன் ஒரு வேண்டுகோளையும் முன் வைத்துள்ளனர்.

அந்த அறிக்கையில், தமிழ்நாடு அரசு, பொதுமக்களிடையே வாசிப்பு வழக்கத்தை அதிகரிக்கவும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே எழுத்து ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் மாவட்டந்தோறும் புத்தகக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது.
இந்நிலையில் உள்ளூர் எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட படைப்பாளர்கள் அனைவரும் சிறப்பிக்கப்பட வேண்டும். உள்ளூர் பேச்சாளர்கள், எழுத்தாளர்களுக்கு மாவட்டப் புத்தக்க் கண்காட்சிகளில் சிறப்புரைகள் வழங்குவதற்கான வாய்ப்பு வழங்கிட வேண்டும் என்கிற கருத்து அனைத்து மாவட்டங்களிலும் மேலோங்கி நிற்கிறது.
இதற்குப் புகழ் பெற்ற பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வரும் வேளையில், கவிஞர் மனுஷ்யபுத்திரன் ”மாவட்டப் புத்தகத் திருவிழா – உள்ளூர் எழுத்தாளர்களுக்கான பரிவட்டம் அல்ல’ என்று கூறி சில கருத்துகளை முன் வைத்திருப்பது ஏற்புடையது அல்ல.
தமிழ்நாடு முழுவதும் அவருக்கு எதிர்ப்புகள் எழுந்திருக்கும் வேளையில், அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிப்பது போன்று, தேனி மாவட்டப் புத்தகக் கண்காட்சிக்குப் பேச அழைக்கப்பட்டிருக்கிறார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
உள்ளூர் எழுத்தாளர்கள் குறித்த அவருடைய தவறான கருத்துக்குத் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட படைப்பாளர்கள் சார்பாகக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். தேனி மாவட்டப் புத்தகக் கண்காட்சியில் பங்கேற்கும் கவிஞர் மனுஷ்யபுத்திரன், வளரும் எழுத்தாளர்களையும் உள்ளூர் எழுத்தாளர்களையும் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
புதிதாக உருவாகும் கவிஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட படைப்பாளர்களை ஊக்குவித்திட முன்வர வேண்டும். தேனியில் நடைபெறும் கூட்டத்தில், தமிழ் நாளிதழ் வழியாகத் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதுடன், தனது கருத்தையும் திரும்பப் பெற்றிட வேண்டும் என்கிற வேண்டுகோளை முன் வைக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுஷ புத்திரனின் கருத்து ஏற்கும் வகையில் தான் உள்ளது .அவர் உள்ளூர் வட்டம் என்றுதான் குறிப்பிடுகிறார் வைக்கவே கூடாது என்று சட்டம் போடவில்லை, தானே பரிசு வாங்கி தனக்கே கொடுத்து கொள்வது நியாயமா என்று தான் அவர் கேட்கிறார். உங்களுக்கு சரி என்று பட்டால் உங்கள் கருத்து சரி இல்லை என்று பட்டால் அது அவரு கருத்து கருத்து சொல்வதில் என்ன தவறு?