லொள்ளால் வந்த லொள்ளு – உருட்டு கட்டை கத்தியால் மல்லுகட்டு !
2026 தேர்தல் பிரச்சார ஜுரத்தை ஓரம்கட்டி கடந்த வாரம் டைம்லைன் இடம்பிடித்த செய்தி நாய்கடி விவகாரம்தான். அந்த அளவுக்கு ஆளும் தரப்பை ஆட்டிப்பார்த்ததென்றே சொல்லலாம்.
இந்த நாய்க்கடி விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பான சட்ட விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், வாணியம்பாடி அருகே ” ஒரு லொள்ளால் ‘ இரு குடும்பத்தினருக்கிடையே உருட்டுக்கட்டை அடி , அரிவாள் வெட்டு வரை “மல்லு’ கட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செப்-9 ந்தேதி, வாணியம்பாடி அடுத்துள்ள வள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த பழனி என்பவரது மகன் கவியரசன். கடந்த 3 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் நடந்துச் சென்றுள்ளார். அப்போது மேகநாதன் என்பவர் வளர்த்து வரும் நாய் கவியரசனை கடித்துள்ளது.
தனது மகனை கடித்த நாயை தேடிச் சென்ற பழனி, உறங்கிக்கொண்டு இருந்த அந்த நாயை தான் வைத்திருந்த கத்தியால் கழுத்துப் பகுதியில் வெட்டியுள்ளார். இதனால் பழனிக்கும் நாயை வளர்த்த மேகநாதனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கத்தி மற்றும் உருட்டு கட்டையால் இருதருப்பினரும் மாறி மாறி மோதிக்கொண்டனர்.
அதில், பழனியின் மனைவி கன்னியம்மாள், மகன் கவியரசன், தாத்தா ரேணு மற்றும் உறவினர் வடிவேல் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருதரப்பினர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வள்ளிப்பட்டு, ஜாப்ராபாத் மற்றும் வாணியம்பாடி சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில மாதங்களாக தெரு நாய்கள் கட்டுப்பாடின்றி சாலைகளில் சுற்றி திரிவது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பொதுமக்களை மட்டுமல்லாது ஆடு, கோழி போன்றவைகளையும் தெருநாய்கள் தாக்குவதால் அப்பகுதிகளில் தெருநாய் தொல்லை பெரும் பிரச்னையாக இருக்கிறது.
ஆம்பூரில் சிறுவர்களுக்கு நேர்ந்த கொடுமை :
மே 28 ந் தேதி , ஆம்பூர் புதுமனை, பிலால்நகர், தார்வழி ஆகிய பகுதிகளில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை திடீரென அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த நாய்கள் விரட்டி விரட்டி கடிக்கத் தொடங்கியது.
அப்போது சிறுவர்களின் சத்தம் கேட்டு அந்தப் பகுதியில் இருந்தவர்கள் அவர்களை நாய்களிடம் இருந்து பாதுகாப்பாக மீட்டனர். சரண், கிஷோர், முகமது உள்ளிட்ட 6 சிறுவர்களுக்கு கால், கை, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பி இருக்கிறார்கள்.
ஜோலார்பேட்டையில் …
ஆகஸ்ட் 27 அன்று ஜோலார்பேட்டை திரியாலம் பகுதியைச் சார்ந்த அருள் மகன் மோசிக்கிரன் (3). பள்ளி முடிந்து வீடு திரும்பிய நிலையில் வீட்டின் வெளியே மோசிக்கிரன் விளையாடிக் கொண்டிருந்தான் . அப்போது திடீரென வந்த தெரு நாய் சிறுவனை கடித்து குதறியதால் சிகிக்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
காலப்போக்கில் நாட்டு நாய்கள் மீதான மோகம் குறைந்து, வெளிநாட்டு நாய்களை வைத்திருப்பதே சிறப்பு அந்தஸ்து என்ற கௌரவத்திற்காக நாய் பிரியர்களால் அதிக அளவில் வெளிநாட்டு நாய்கள் வளர்க்கப்படுகிறது.
நாய்களின் மீது ப்ரியம் பின்னணி என்ன?
இதன் எதிரொலியாக, இந்திய தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஒத்துப்போகாத நாய்களை வளர்க்கத் தொடங்கியதன் காரணமாக, நாட்டு நாய்கள் தெருநாய்களாக மாறி அதன் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டதாகவும், இந்தியாவில் இன்றைய நிலவரப்படி சுமார் 5 கோடிக்கும் அதிகமான தெருநாய்கள் இருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அபாயகரமான நாய்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உரிமையாளர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அதனால், உரியப் பாதுகாப்பு இல்லாமல் வெளியே கொண்டு செல்ல நாய் உரிமையாளர்கள் தயங்குவார்கள்.
நகராட்சி சட்டம் 1998-ன் படி மனிதர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நாய்களை கருணை கொலை செய்யலாம். தெருநாய்களை அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும். நாய்களுக்கு உரிமம் கட்டாயம் என அறிவித்தால் வள்ளிப்பட்டு போன்ற மனித மோதல்களைத் தடுக்க முடியும்.
மேலும், இந்த ஆண்டில் நாடு முழுவதும் நாய்கடியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் புள்ளி விவரத்தை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசிடம் கேட்டிருக்கிறேன் கிடைத்ததும் நம்மிடம் பகிரந்து கொள்ள இருப்பதாக கூறுகிறார் வாணியம்பாடி நகராட்சி கவுன்சிலர் நௌமான்.
இந்த விவகாரம் குறித்து, திருப்பத்தூர் கால்நடை மருத்துவர் டாக்டர் திருப்பதியிடம் அங்குசம் சார்பில் பேசினோம்.
“உலகளவில் இந்தியாவில்தான் தெரு நாய்கள் அதிகமாக இருப்பதாக புள்ளிவிபரம் சொல்கிறது. 2025-ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், தமிழ்நாட்டில் 1.24 இலட்சம் நாய் கடித்த வழக்குகள் மற்றும் ரேபிஸ் நோயால் நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளதாக பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்குநரகம் வழங்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன. 2024 ஆம் ஆண்டில், 4.8 இலட்சம் கடித்த வழக்குகள் மற்றும் ரேபிஸ் நோயால் 47 இறப்புகள் ஏற்பட்டன என்று பொது சுகாதார இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
Rabies – வெறி நோயால் பாதிக்கப்பட்ட நாய்களுக்கு, மூளை பாதிப்பு ஏற்பட்டு பார்க்கும் அனைவரையும் கடிக்கத் தொடங்கிவிடும். வெறிநோயால் பாதிக்கப்பட்ட நாய்கள் ஒரு மனிதனைக் கடித்தபின் பத்து நாள்கள் மட்டுமே உயிரோடு இருக்கும். இவ்வகை நாய்கள் கடித்தால் Anti Rabies தடுப்பூசியை தொடர்ந்து போட்டுக்கொள்ள வேண்டும். நாய் கடித்த இடத்தில் (Anti Rabies immunoglobulin) என்ற ஊசியைப் போடும்போது, அது கிருமியை அழித்துவிடும். எனவே, நாய் கடித்த பிறகு, நாம் அவசியம் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
தீர்வுதான் என்ன ?
நரிக் கூட்டம் காட்டிலே என்ன செய்யுமோ அதைத்தான் நாய்கள் செய்யும். வட மாநிலங்களில் மாடுகள் தெருவிலே விடப்படுகின்றன. அவைகள் தெருவோர கடைகள் பொதுமக்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல்களாக இருக்கின்றன. அதைப் பராமரிப்பதற்காக கோ சாலைகள் நிறுவப்படுகின்றன.
நாய்களுக்கு பாதுகாப்பான இடமாக காடுகளை தான் நான் பரிந்துரைப்பேன். இவைகளை அடர்ந்த வனப்பகுதியில் ஒரு பாதுகாப்பு மையத்தை உருவாக்கி அவைகளுக்கு உணவு போன்ற தேவைகளை வனத்துறை கொடுத்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
வீடுகளிலே செல்லப்பிராணியாக வளர்ப்பவர்களுக்கு முறையான அனுமதியை பெறவைத்து அடையாள அட்டை கட்டியிருக்கும் நாய்களுக்கு மட்டும் அனுமதியைத் தந்து மற்றவற்றை அடர்ந்த வனப்பகுதியில் விடுவது தான் சரியானதாக இருக்கும்.

அப்படி நாய்களை செல்லப்பிராணியாக வளர்க்க நினைப்பவர்களுக்கு முறையான வழிகாட்டுதல்களை அரசு வழங்க வேண்டும். சில சிறுவர், சிறுமிகள் பெற்றோர் மீதான பயத்தில், தங்களை நாய் கடித்ததை சொல்ல மாட்டார்கள். அந்த நாய்க்கடி ரத்தம் வராத அளவுக்கு லேசானதாக இருந்தால், பெற்றோர்களாலும் அதைக் கண்டுபிடிக்க முடியாது. விளைவு, ரேபிஸ் முற்றிய பிறகுதான் எங்களிடம் வருவார்கள். அதனால், நாய் கடித்தால் வீட்டில் மறைக்கக்கூடாது என்பதை குழந்தைகளுக்கு பொதுமக்கள் சொல்லி தரவேண்டும்.
தமிழ்நாடு அரசு தெருநாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். பொதுமக்கள் தெருநாய்க்கடி விஷயத்தில் லேசாக பல் தானே பட்டிருக்கு. ரத்தம் வரலையே என அலட்சியமாக இருக்கக்கூடாது. உடனடியாக மருத்துவ உதவியை எடுத்துக்கொள்ள வேண்டும். முன்பெல்லாம் நாய்க்கடித்தால், தொப்புளைச்சுற்றி 21 ஊசி போடுவோம். அதனால், நாய்க்கடியைவிட அந்த ஊசிகளுக்கு அதிகமாக பயந்தார்கள். இப்போது ஒரேயொரு ஊசிதான். அதனால், உடனடியாக மருத்துவமனைக்கு வந்துவிடுங்கள்” என்கிறார் டாக்டர் N திருப்பதி.
தெருநாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்கவும், கருத்தடை ஊசி போடவும் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, நாடு முழுவதும் இந்த தீர்ப்புக்கு பலத்த எதிர்ப்பும் விவாதமும் உருவாகி வரும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த நாய்க்கடி சண்டையில் உருட்டுக்கட்டை அடி கத்தி வெட்டு வரை சென்றுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
— மணிகண்டன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.