கண்டித்த முதல்வர் ! மாணவி தற்கொலை ! பதட்டத்தில் சிவகாசி !
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதல்வரின் கண்டிப்பால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம், பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி சாட்சியாபுரம் பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் – முருகேஸ்வரி தம்பதியரின் மகள் சோலைராணி (19). இவர், ஶ்ரீவில்லிப்புத்தூர் சாலையில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார்.

கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் போது மாணவர்கள் புகைப்படம் எடுத்ததாகவும், அந்த நேரத்தில் சோலைராணி தனது ஆண் நண்பருடன் புகைப்படம் எடுத்தது தொடர்பாக கல்லூரி முதல்வர் அசோக், மேலும் கல்லூரி பியூன் மணிமாறன் ஆகியோர் மாணவியை கடுமையாக திட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து பெற்றோரை அழைத்து வருமாறு கூறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து கடந்த 20-ம் தேதி தாயுடன் கல்லூரிக்கு வந்த மாணவி, கல்லூரி நிர்வாகத்தின் வற்புறுத்தலின் பேரில் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால், அதே நாளின் இரவு மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் வெளியானதைத் தொடர்ந்து, இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாணவர்கள் கல்லூரி முன்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவியின் மரணத்திற்கு காரணமானதாக கூறப்படும் முதல்வர் அசோக் மற்றும் பியூன் மணிமாறன் ஆகிய இருவர் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
போராட்டத்தின் போது பேசிய இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆனந்த கண்ணன்,
“மாணவியின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டதும், பொதுவிடத்தில் அவமதித்ததும் அவரது மனநிலையை பாதித்துள்ளது. மாணவிகளின் பாதுகாப்பு மட்டுமல்ல, அவர்களின் மனநலத்தையும் அரசு மற்றும் கல்வித்துறை உறுதி செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.
இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவி மரணத்திற்கும், கல்லூரி நிர்வாகத்தின் அணுகுமுறைக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்களில் மாணவர்களிடம் கடைப்பிடிக்கப்படும் ஒழுக்க நடைமுறைகள், மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறதா? என்ற கேள்வியை இந்த சம்பவம் எழுப்பியுள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் – 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.
— மாரீஸ்வரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.