வாகை சூடிய விஷால், கார்த்தி! ஐசரி கணேஷுக்கு ஆப்பு! நடிகர் சங்கத் தேர்தல் ரணகளம்! குதூகலம்!
மதுரைமாறன்
இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை சினிமா சங்கங்களின் தேர்தல் என்பது சத்தமே இல்லாமல் நான்கு சுவர்களுக்குள் நடந்து முடிந்துவிடும். தலைவர்களும் நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவரவர் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அரசியல் புகுந்த பிறகு எல்லாமே தலைகீழாக மாறின. இதே போல் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கேப்டன் விஜயகாந்த் தலைவராக இருந்த வரை எந்தவிதக் குழப்பமோ, கூச்சலோ இல்லாமல் சுமூகமாகத் தான் போய்க் கொண்டிருந்தது.
2006க்குப் பின், அதாவது சரத்குமார், ராதாரவி தலைமையின் கீழ் நடிகர் சங்க நிர்வாகம் போனதற்குப் பின் ஒரே அக்கப்போர் தான். ஏகப்பட்ட கோல்மால்கள், குழப்பங்கள், முறைகேடுகள் இவற்றால் சங்கமே அபராதத்தில் ஓடும் நிலைக்கு ஆளானது.
2015 வரை தேர்தலே நடத்தாமல், சங்கத்தை தங்களது பிடிக்குள் வைத்து இறுக்கிக் கொண்டிருந்தனர் சரத்தும் ராதாரவியும். இதை எதிர்த்து களம் இறங்கினார் விஷால். இவருக்கு பக்கபலமாக களம் இறங்கினார்கள் சீனியர் நடிகர்கள் நாசர், கருணாஸ், பொன்வண்ணன், இளம் ஹீரோ கார்த்தி உட்பட அனைத்து நடிகர்களும். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடத்தும் உத்தரவை பெற்று, 2015-ல் தேர்தல் நடந்து நாசர் தலைவராகவும் விஷால் பொதுச்செயலாளராகவும் கார்த்தி பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சங்கத்தின் முக்கியப் பதவிகள் அனைத்தையும் விஷால் அணியே கைப்பற்றியது. வெற்றி பெற்றதும் முதல் வேலையாக சங்கத்தில் நடந்த ஊழல்கள், முறைகேடுகளைக் கண்டுபிடித்து சரி செய்யும் வேலைகளில் இறங்கியதுடன், சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் பணிகளிலும் தீவிரம் காட்டியது விஷால் தரப்பு. ”புதிய கட்டிடம் கட்டாமல் கல்யாணம் கட்டமாட்டேன்” என்பதில் உறுதியாக இருந்தார் விஷால். ஆனால் சரத் தரப்போ,அனைத்திற்கும் முட்டுக்கட்டை போட் டது. இருந்தாலும் மனம் தளராத விஷாலும் கார்த்தியும் நாசரும் தங்களது வேலைகளில் கவனம் செலுத்தி, சங்க உறுப்பினர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிக்கரம் நீட்டினார்கள். வெளிப்படையான நிர்வாகம், வரியோர் களுக்கு உதவும் மனப் பான்மை இவற்றால் சங்க உறுப்பினர்களிடையே நாசர்-விஷால்-கார்த்தி தலைமையிலான நிர்வாகத்திற்கு அமோக ஆதரவு கிடைத்தது.
இந்நிலையில் தான் 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மீண்டும் சங்கத்திற்குத் தேர்தல் நடந்தது. விஷால் தலைமையிலான ‘பாண்டவர் அணி’ மீண்டும் கரம் கோர்த்து நின்றது. கே.பாக்யராஜ் தலைமையில் சங்கரதாஸ் சுவாமிகள் அணி களம் இறங்கியது.
இந்த அணிக்கு எல்லாமுமாக இருந்தவர் கல்லூரிகளின் அதிபர் ஐசரி கணேஷ். விஷாலை எதிர்த்து பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட இவர், அதிமுகவின் தீவிர விசுவாசி. அப்போதைய முதல்வர் எடப்பாடியிடம் நெருக்கம் காட்டி, சினிமா விழாக்களுக்கு அழைத்து ஓடாத படங்களுக்கெல்லாம் விருது கொடுக்கச் செய்து குஷிப்படுத்துவார் இந்த ஐசரி கணேஷ்.
இந்தத் தேர்தலும் விஷாலுக்கு வெற்றியைத்தரும் என்பதாலும் விஷால்-கார்த்தியை வைத்து தனது சொந்த பேனரில் படம் தயாரிக்கும் முயற்சியில் மண் விழுந்தாலும் ஏழுமலை, பெஞ்சமின் என்ற துக்கடா நடிகர்களின் பேரில் கீழ்கோர்ட் டிலிருந்து சுப்ரீம் கோர்ட் வரை கேஸ் போட்டு, தேர்தல் முடிவுகளையே முடக்கினார் ஐசரி கணேஷ். இதற்காக 1 கோடி வரை தனது சொந்தப் பணத்தை செலவழித்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக பொறுமை காத்த விஷால் டீமுக்கு கடந்த வாரம் இறுதி வெற்றி கிடைத்தது. அதாவது நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணலாம் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டதையடுத்து, கடந்த 20ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் நாசர்-விஷால்-கார்த்தி, பூச்சிமுருகன், கருணாஸ் டீம் அமோக வெற்றி பெற்றது. செயற்குழு உறுப்பினர் பதவிகளைக்கூட பறிகொடுத்து கே.பாக்யராஜ் டீம் மண்ணைக் கவ்வியது. “இது ஐசரி கணேஷுக்கு சரியான ஆப்பு” என்கிறார்கள் சங்க நிர்வாகிகள்.
வரிசையாக படங்கள் தோல்வி, பல கோடிகள் கடன் நெருக்கடி இவற்றால் தத்தளித்துக் கொண்டிருந்த இந்த நேரத்தில் விஷாலுக்கு கிடைத்த இந்த இமாலய வெற்றி பெரும் ஆறுதலைக் கொடுத்துள்ளது