அரசாங்க விதிகளை மாற்றக் காரணமான ஞான ராஜசேகரன் ஐ.ஏ.எஸ்
அரசாங்க விதிகளை மாற்றக் காரணமான
ஞான ராஜசேகரன் ஐ.ஏ.எஸ்
முனைவர் ஜா.சலேத்
———————————————————————————————————
வட ஆற்காடு (இன்றைய வேலூர்) மாவட்டத்தைச் சார்ந்த பள்ளிகொண்டா என்ற ஊரில் 23.01.1963 ஆம் ஆண்டு ஞானப்பிரகாசம் சாரதாம்பாள் என்னும் ஆசிரியத் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தவர் ஞான ராஜசேகரன். திருப்பத்தூர் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலை பட்டமும், சென்னை மாநிலக் கல்லூரியில் இயற்பியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். 1983 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்று ஐஏஎஸ் தேர்வில் வென்றார் ஞான ராஜசேகரன். கேரளா கேடர் ஒதுக்கப்பட்டது. ஞான ராஜசேகரன் ஐஏஎஸ். அவர் செய்த பணிகளுள் அவரே பதிவு செய்துள்ள இரண்டு பணிகள் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதாக நின்று அவரை ஒரு போதிமரமாக நமக்கு அடையாளம் காட்டுகின்றன.
1985 ஆம் ஆண்டு. துணை ஆட்சியராக அவர் பணியாற்றிய நேரம். ஒருநாள் ஒருவர் அவரை அவசரமாகப் பார்க்க வேண்டுமென்று காத்திருக்கிறார். உள்ளே அழைத்த அவர் “என்ன விஷயம்?’ என்கிறார் அவரிடம்.
அவர் பதற்றத்தோடு பதில் சொன்னார் “நான் தலையோலப்பறம்பு கிராமத்தில் இருந்து வருகிறேன். அங்கே ஒரு மிகப்பெரிய தவறு நடந்திருக்கிறது. அந்த ஊரில் விதவையே ஆகாத ஒரு பெண்ணுக்கு விதவைப்பென்ஷன் சாங்ஷன் செய்யப்பட்டிருக்கிறது. அந்தப் பெண்ணோட பேரு தங்கம்மா”
இப்படி அவர் சொன்னதும் ராஜசேகன் “நீங்க யாரு? உங்களுக்கு இந்த விஷயம் எப்படித் தெரியும்?” என்று. அவர் மிகவும் சாதாரணமாகச் சொன்னார் “அந்தத் தங்கம்மாவின் கணவரே நான்தான்” என்று. தூக்கி வாரிப் போட்டது.
கணவர் உயிரோடு இருக்கும்போது அவர் இறந்து விட்டார் என்று பொய் சொல்லி ஒரு பெண் விதவை பென்ஷன் வாங்குவது அரசாங்கத்தை ஏமாற்றும் வேலை இல்லையா? இது ,ஒரு சமூக நலத் திட்டத்தைக் கேலிப் பொருளாக்குவது இல்லையா? உடனே தாசில்தாரை வரவழைத்தார்.
அவர்தான் விதவைப் பென்ஷன் சாங்ஷன் செய்த அதிகாரி. அவரும் பதறிப் போய் விட்டார். தலையோலப்பறம்பு வில்லேஜ் ஆபீசரின் விசாரணை ரிப்போர்ட்டின் அடிப்படையில்தான் சாங்ஷன் செய்ததாக அவர் சொன்னார். தவறாக ரிப்போர்ட் கொடுத்த வில்லேஜ் ஆபீசரை உடனே சஸ்பெண்ட் செய்ய ஆணை பிறப்பித்தார். ஒரு குறிப்பிட்ட தேதியில் புகார் செய்த கணவர், தங்கம்மா,வில்லேஜ் ஆபீசர், தாசில்தார் அனைவரையும் வரச் சொன்னார்.
அந்தத் தேதியும் வந்தது. சம்பந்தப்பட்ட எல்லோரும் வந்திருந்தார்கள். அந்த தங்கமாவும் வந்திருந்தாள். குட்டு வெளிப்பட்டு விட்டதே என்ற குற்ற உணர்வோடு தொங்கிய முகத்துடன் வருவாள் என்று எதிர்பார்த்தவர்களுக்கு அவள் தைரியமாக என் முன் வந்து நின்றது வியப்பைத் தந்தது.
தங்கம்மாவின் மீதுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையே புகார் கொடுத்தவர் அவள் கணவரா? இல்லையா ?என்பதுதான். அதை முதலில் அறியவேண்டும் என்று தீர்மானித்த ராஜசேகரன், அந்தப் பெண்மணியிடம் கேட்டேன் “இவர் உன் கணவர்தானே ?” என்றதும் தங்கம்மா எந்த தயக்கமும் இல்லாமல் பதில் சொன்னாள் ” ஆமாம்” என்று. அதன் பிறகு இருவருக்குமான உரையாடல் இப்படித் தொடர்ந்தது.

“ஏம்மா நான் தமிழ்நாட்டில் இருந்து .வந்திருக்கிறேன் . எங்கள் கிராமத்தில் பெண்களிடம் அவர்களது புருஷன் பெயரைக் கேட்டால் நேரடியாகப்பதில் சொல்ல மாட்டார்கள். புருஷன் பெயர் முருகன் என்றால் ஜாடை மாடையாக மயில் மேல இருக்கிறவர்னு சொல்வாங்க.அப்படிப்பட்ட ஊரில் இருந்து நான் வருகிறேன் .புருஷன் உயிரோடு இருக்கும் போது வெறும் 75 ரூபாய் கிடைக்கிறதுக்காக அவர் செத்துவிட்டார் என்று சொல்வதற்கு எப்படிம்மா மனசு வந்தது ?முதல்ல அதை எனக்கு விளக்குங்க!”
“அரசாங்கம் ஏன் இந்த விதவைப் பென்ஷன் கொடுக்கிறது? விதவைன்னா என்ன அர்த்தம்? நிராதரவான பெண் என்பதுதானே? நான் ஒரு நிராதரவான பெண்தான்”
“எப்படி?”
“இந்த ஆள் என்னை விட்டுவிட்டுப் போயி எட்டு வருஷம் ஆகுது கோழிக்கோட்டில் ஒரு பெண் கூட எட்டு வருஷமாக இந்தாள் வாழ்ந்து கொண்டிருக்கிறார் எங்கள் ஊருக்கு வருவது கிடையாது. என் குழந்தைகளைப் பார்க்கிறது கிடையாது அதனால என்னைப் பொறுத்தவரையில் இந்த ஆளு செத்துப் போனவன் தானே? நான் நிராதரவான பெண்தானே? சொல்லுங்க சார்! உங்கள் சட்டம் என்ன சொல்லுது? ஒருவன் ஏழு வருஷம் காணாமல் போனால் அவனை செத்தவனாகக் கருதலாம்னு சொல்லுது .இல்லையா? அதனால சட்டப் பிரகாரம் இவன் எனக்குச் செத்துப் போனவன்தான்.நான் விதவை தான் சார்”
தங்கம்மாவின் கேள்விகள் ஒவ்வொன்றும் ஆணித்தரமாக வெளிவந்தன. புகார் கொடுத்த ஆள் அப்போது நெளியத் தொடங்கினார். இதன்பிறகு நடந்த நிகழ்வுகளை அவர் வரிகளிலே அறிவது பொருத்தமாக அமையும்.
ஒருவன் ஏழு வருஷம் காணாமல் போனால் அவனைச் செத்தவனாகச் கருதலாம் என்று எவிடென்ஸ் ஆக்ட் சொல்கிறது .அந்த சட்ட விதிகள் எல்லாம் தங்கம்மாவை எப்படியோ சென்றடைந்து இருக்கிறது. வேறு எந்த மாநிலத்திலாவது இப்படி ஒரு சாமானியப் பெண்மணி சட்டவிதிகளைச் சொல்லி புருஷன் உயிரோடு இருக்கும் போதே அவன் செத்ததற்குச் சமம் என்று வாதிட்டு இருக்க முடியுமா ?

தங்கம்மாவின் வாதம் எனக்கு நியாயமாகப்பட்டது. ஆனால் அப்போதுள்ள பென்ஷன் விதிகளின்படி நான் தீர்ப்பு எழுதினால் அது தங்கம்மாவுக்குச் சாதகமாக அமையாது. அவளது விதவை பென்ஷனை நான் ரத்து செய்தாக வேண்டும். அது மனிதாபிமானத்துக்கு எதிராக இருக்கும் என்று நான் உணர்ந்தேன். எனவே பென்ஷன் விதிகளில் மாற்றம் செய்ய அரசாங்கத்துக்கு ஒரு கடிதம் எழுதினால் என்ன என்று தோன்றியது.
தங்கம்மாவின் சூழ்நிலையை விவரித்து விட்டு “இவரைப் போன்ற பெண்களுக்கு ஆதரவு கொடுத்தால் தான் விதவைப் பென்ஷன் ஏற்படுத்தியதன் உண்மையான பலன் கிடைக்கும். அதற்கு விதவைப் பென்ஷனுக்கான விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும். யாரெல்லாம் விதவையாகக் கருதப்பட வேண்டும் என்கிற விதிமுறைகளில் ஒரு பெண்ணின் கணவன் ஏழு வருடங்களுக்கு மேல் காணாமல் போயிருந்தால் அந்தப் பெண்ணும் விதவையாகக் கருதப்பட வேண்டும் என்பதையும் சேர்த்து தங்கம்மாவைப் போன்ற நிராதரவான பெண்களுக்கும் விதவைப்பென்ஷன் அனுமதிக்கப்பட வேண்டும்” என்று அரசாங்கத்திற்கு கடிதம் எழுதினேன்.
கேரள அரசாங்கத்தின் சிறப்பு என்னவென்றால் இதுபோன்ற மனிதாபிமான விஷயங்களில் அனுகூலமான முடிவுகளை உடனுக்குடன் எடுப்பதுதான். என் கோரிக்கை ஏற்கப்பட்டு விதவைப் பென்ஷன் விதிமுறைகளில் மாற்றத்தை அரசாங்கம் அறிவித்தது. அரசாங்கம் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்ததால் தங்கம்மாவுக்கு பென்ஷன் தொடர்ந்து அளிக்கப்பட்டது. எதிர்காலத்தில் தங்கம்மா போன்று நிராதரவான நிலைக்குத் தள்ளப்படும் பெண்களுக்கும் விதவை பென்ஷன் உறுதி செய்யப்பட்டதுதான் எனக்கு மனநிறைவைத் தந்தது.
இன்னொரு நிகழ்வு. திருச்சூரில் 1991 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றபோது நடந்த இன்னொரு நிகழ்வு. பதவி ஏற்ற முதல் நாளிலே அவர் கண்ணில்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் இருக்கும் பழங்குடியின மக்கள். யார் இவர்கள்? ஏன் இங்கு நிற்கிறார்கள்? என்பதே அவர் வினா. 1976 ஆம் ஆண்டு சிம்னி என்ற அணை கட்ட இடம் எடுக்கப்பட்டபோது, அதற்கான முதன்மையான பகுதியில் வசித்த வந்த பழங்குடியின மக்கள்தான் இவர்கள் என அதிகாரிகள் பதில் தந்தனர்.
கிழிந்த துணி, அழுக்கு மூட்டை என குழந்தைகளுடன் அலுவலக வாசலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் நின்ற அந்த பத்து, பதினைந்து பேர் அவர் மகத்துக்குள் எதையோசெய்யத் தொடங்கினர். விசாரிக்கத் தொடங்கினார். சிம்னி அணைக் கட்டும்போது, அங்கு வசித்த 37 பழங்குடியின குடும்பங்கள் அப்புறப்படுத்த அரசு, அவர்களிடம் ஒரு ஏக்கர் நிலம் மற்றும் வீடு தருவதாக கூறியதாகவும், ஆனால் அதனை யாரும் கண்டுக்கொள்ளாமல் சுமார் 15 ஆண்டுகளாக அவர்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் அவரிடம் புலம்பினர்
அவர்களின் எதிர்ப்பை தெரிவிக்க பொது சொத்துகளை எரிப்பது, தொடர் போராட்டம் செய்வது என அரசு மீதும், அரசு அதிகாரிகள் மீதும் நம்பிக்கை இல்லாதவர்களாக இருந்தனர். மேலும், நக்சலைடு ஆதாரவுடன் அரசிற்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு வந்தனர். அனைவராலும் நிராகரிக்கப்பட்டு, சுமார் 15 ஆண்டுகள் 32 குடும்பங்கள் நிலத்திற்காக தொடர் போராட்டத்தில் இருந்து வந்தனர். இவர்களின் கோரிக்கையும், அப்போதைய அதிகாரிகளின் தவறையும் புரிந்துகொண்ட ஞான ராஜசேகரன், இப்பிரச்னையை முதலமைச்சர்வரை எடுத்து சென்று, ஒரே நாளில் ரூ.3 கோடி பெற்று, அவர்களுக்கு நிலம், வீடு உள்ளிட்ட வாழ்வாதார தேவைகளை அவர்களுக்கு பிடித்தப்படி செய்துக்கொடுத்தார்.
இதுகுறித்து பேட்டி ஒன்றில் கூறிய அவர், அவர்களுக்கான நிலத்தைத் தேடும்போது சவால்கள் சுற்றி நிறைந்து இருந்தாகவும், ஒரு வழியாக ஒரு பசுமையான நிலத்தைக் கண்டறிந்து அவர்களுக்கு காட்டியபோது, 37 குடும்பங்களும் அங்குள்ள மரத்தைக் கட்டி அணைத்து வானத்தைப் பார்த்து அழுத தருணம் நெகிழ்ச்சியாகவும், மன நிறைவாகவும் இருந்தாகவும் கூறியுள்ளார். முதலமைச்சரிடம் இருந்து பெற்ற ரூ.3 கோடியில், நிலத்தை வாங்கி, அதில் அவர்களுக்கு பிடித்தப்படி வீடுக்கட்டி அவர்களின் வாழ்க்கையே மாற்றியவர் ஞான ராஜசேகரன் ஐஏஎஸ். 37 குடும்பங்களின் குல தெய்வாகமே ஞான ராஜசேகரன் மாறினார். யாருமே கண்டுக்கொள்ளாத ஒரு மக்கள் கூட்டத்தை, அடுத்த தலைமுறையை நிமிர்ந்து நடக்க வைத்தார் என்பது வரலாற்று சாதனை.

சினிமா மீது அலாதி பிரியம் வைத்திருந்த ஞான ராஜசேகரன் ஐஏஎஸ், விரும்ப ஓய்வு பெற்றார். அதனைத்தொடர்ந்து, சினிமாவில் இயக்குநராக மாறினார். அவரின் முதல் படம் மோகமுள் 1995 ஆம் ஆண்டு வெளியானது. ஜானகிராமன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்திற்கு 42வது தேசிய திரைப்பட விருதில், சிறந்த அறிமுகப் படத்திற்கான இந்திய காந்தி விருது வழங்கப்பட்டது. மேலும், 48வது தேசிய திரைப்பட விருதில் தேர்வு குழுவில் சிறப்பு விருதைப் பெற்றது.
1999 ஆம் ஆண்டு முகம், 2000-ம் ஆண்டு பாரதியின் வாழ்க்கை வரலாறு படம், 2007ஆம் தந்தை பெரியார் திராவிட இயக்கத்தைப் பற்றிய பெரியார், 2014ஆம் ஆண்டு ராமானுஜன் வாழ்க்கை வரலாறு படம் ஆகிய படங்கள் மற்றும் பல்வேறு சிறுப்படங்களை எடுத்துள்ளார். பெரியார் படத்திற்கு தேசிய விருதும், தமிழ்நாடு அரசின் சினிமா விருதும் வழங்கப்பட்டது. இன்றும் பெரியாரின் படம் மக்கள் மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் நடுவமிட்ட அவரசு கருத்தியல் அதிகாரியாகப் பணியாற்றியபோதும், திரைத்துறை இயக்குநராகப் பரிணமித்தபோதும் வெளிப்பட்டு அடுத்திருப்பவர் முன்னேற்றத்திற்குப் பயன்பட்டே வருகிறது. எனவே அவர் இளையோர் பின்பற்ற வேண்டிய முன்னத்தி ஏராகவே நமக்குக் காட்சி தருகிறார்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.