ஏன் எட்டு வருஷமா எதுவும் எழுதாம இப்போ எழுதுகிறேன் – சவுக்கு சங்கர் மனைவி
ஏன் எட்டு வருஷமா எதுவும் எழுதாம இப்போ எழுதுகிறேன் – சவுக்கு சங்கர் மனைவி
ஏன் எட்டு வருஷமா எதுவும் எழுதாம சங்கர் கைதாகியிருக்கும் பொழுது எழுதுறிங்கனு பலரும் என்னை தனிப்பட்ட முறையில் கேட்கிறார்கள். குடும்பத்தை விட்டு வெளிவந்து காதல் திருமணம் செய்தேன்.
பெற்றெடுத்த குழந்தையை நாத்தானாருக்கு தத்துகொடுத்து, வேண்டுமென்றால் இன்னொரு குழந்தையக் பெற்றெடுத்துக்கொள்ளச் சொன்ன சங்கருக்கு, முடியாது என்ற பதில் அளித்ததின் பொருட்டே, அவனது குடும்பத்தினால் தொடர் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டேன்.
மருத்துவமனையில் இருந்து திரும்பும் ஏழு நாட்களுக்குள் வீட்டு உதவிளார் நிறுத்தப்பட்டார். சிசேரியன் செய்த கையுடன் குழந்தையின் துணிகளைத் துவைப்பது போன்ற வேலைகளை செய்ய ஆரம்பித்தேன்.
குழந்தையுடன் வீட்டிற்கு சென்று நிற்கும் சூழலில் இல்லாத நான், எப்படியாவது இந்த திருமணத்தை இழுத்துப் பிடித்து வைத்துக்கொள்ள முயற்சித்தேன். வறுமைக்கும் நடுத்தரவர்க்கத்திற்கும் இடையே ஊசலாடிய எனது குடும்பத்தை மையமாக வைத்து சங்கரால் பிச்சைக்காரி என்கிற பட்டம் கட்டப்பட்டு, குழந்தையை தங்கைக்கு கொடுக்காத நீ இந்த வீட்டில் இருக்காதே என ஒன்றரை மாத குழந்தையுடன் துரத்தியடிக்கப்பட்டேன்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சங்கர் தொடர்பு கொண்டு அழைத்த பொழுது, குழந்தையை மட்டுமே மனதில் கொண்டு, மீண்டும் சென்றேன். அனவது உறவினர்கள் வாழும் திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட நான், அனைத்து உறவினர்கள் முன்னிலையிலும் குடித்துவிட்டு வம்பிழுத்த சங்கரிடம் அடிவாங்கி, வாயெல்லாம் இரத்தம் ஒழுக, அத்திருமண பந்தத்தை விட்டு முழுவதுமாய் வெளியேறினேன். சென்னை காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கும் பொருட்டு, குழந்தையுடன் ஒரு மணி நேரம் அங்கே அமர்ந்திருந்தேன்.
வருவதாக வாக்களித்த என்னுடன் இருந்தவர்கள், நாளை புகாரளிக்கலாம்; இப்பொழுது கிளம்புங்கள் என்று ஒரு நண்பரின் வீட்டில் தங்க வைத்தார்கள். பிறகு புகாரளிக்க வேண்டாம் என்று உடனிருந்தார்கள். மனம் கேட்காமல், அங்கிருந்து சென்ற நான், எங்கிருக்கிறேன் என தகவல் தெரிவிக்கவில்லை யாருக்கும். எல்லோரும் தேடும்பொழுதிலும் சங்கர் அதுகுறித்து கிஞ்சித்தும் கவலையோ, குற்ற உணர்வோ கொள்ளவில்லை.
தற்கொலை எண்ணம் மேலோங்கியிருந்த அப்பொழுது, நண்பனும் அவனது வாழ்க்கைத்துணைவியும், அவனின் அம்மாவும் ஆறுதலாக உடனிருந்தனர்.
அவன் வீட்டிலிருந்து வெளிவந்த பிறகும் வழக்கமாய் ஆண்கள், கல்யாணம் செய்த ட்ரம்ப் கார்டை வைத்து என்னவெல்லாம் துன்புறுத்துவார்களோ அதையெல்லாம் அடைந்து நிம்மதியிழந்தேன். யாரால் நான் அன்று புகாரளிக்காமல் இருந்தேனே, அவர்கள் இன்று அவனின் மேல்முறையீட்டு மனுவைச் சரிபார்த்து உதவி செய்வதைக் காண முடியாமல், அவர்கள் நட்பு வட்டத்தில் இருந்து வெளியேறி, எனக்கு நடந்ததை பதிவிட ஆரம்பித்தேன்.
அரசின் ஒடுக்குமுறைக்கருவிகளில் ஒன்று நீதிமன்றம். ST பெண் எனத் தெரிந்தும் எப்படி அவர் மீது கை வைத்தான் என்ற கேரள செஷன்ஸ் கோர்ட் நீதிபதியின் தீர்ப்பை கண்டும் காணாமல் செல்லும் தமிழக உரிமை குரலாளர்களைக் காண்கிறோம்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராஜா, கல்லூரியின் முதல்வர் துப்புரவுப்பணியாளரை வீட்டுவேலைகள் செய்ய, உள்ளாடைகளை துவைக்கச் சொல்லி பயன்படுத்திக்கொள்ளும் வழக்கில், துணி துவைக்கும் பொழுது உள்ளாடையா வெளியாடையா எனப் பார்க்கக்கூடாது என்றதுடம் தினக்கூலி துப்புரவுப் பணியாளருக்கு 25 ஆயிரம் தண்டத்தொகையை கல்லூரி முதல்வருக்கு செலுத்தச் சொல்லி வழங்கிய தீர்ப்பைக் கண்டித்து நோட்டீஸ் அடித்து நீதிமன்றம் முழுக்க விநியோகித்தவர்களில் நானும் ஒருவள். அப்போதைய இந்தியத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், பணியிடத்தில் பெண்ணிற்கு செய்த பாலியல் தொந்திரவிற்கு எதிராக, கையெழுத்து இயக்கம் நடத்தி, 100 வழக்கறிஞர்களிடம் கையெழுத்து வாங்கி அனுப்பியதில் என்னுடைய பங்குண்டு. அந்த முன்னாள் நீதிபதி இன்று பிஜேபியின் ஆட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில், அரசினால் பணியமர்த்தப்படும் வீட்டு உதவியாளர்களை மாதாவிடாயின் பொழுது வீட்டிற்கு வரக்கூடாது எனச் சொல்லவைக்கப்படுவது போன்ற நீதிமன்றத்தின் அநீதிகளை உடனுக்குடன் சுட்டிக்காட்டத் தவறுவதில்லை.
இதுமட்டுமில்லாமல், கெளரி லங்கேஷ் படுகொலைக்கு எதிராக போராட்டம் நடத்தியது, எழும்பூர் பூர்வகுடிகளை வெளியே துரத்த அரசு முற்பட்டபொழுது, அவர்கள் வாழ்விடத்திற்கு அருகிலேயே வீடு வாங்க உடன்நின்றது உள்ளிட்ட பல மக்களுக்காக நிகழ்வுகளில் நானும் பங்கெடுத்துள்ளேன்.
சென்னையின் பூர்வகுடி மக்களை, சென்னைக்கு வெளியே அரசு துப்பித்தள்ளுவதில் நீதிமன்றம் முக்கிய பங்காற்றுகிறது. ஏழை மக்களுக்கும் பெண்களுக்கும் எதிரான அரசக்கட்டமைப்பின் பிரதிபலிப்பை நீதிமன்றம் வழியாகவும் காண முடியும். நீதிமன்றங்கள் நீதி கிடைக்கிறது என்பதே இங்கு உருவாக்கப்பட்டிருக்கும் போலிக்கட்டமைப்பு. பீமா கோரேகான் வழக்கில் உள்ளிருக்கும் அறிவுஜீவிகளே இதற்கு சாட்சி.
இந்த அடிப்படை அரசியல் புரிதல் எதுவுமற்ற, “பத்திரிக்கை சுதந்திரம்னு தட்டை தூக்கிட்டு வருவானுங்க. ரெண்டு மிதி மிதிச்சு விடுங்க” என எழுதி திடீர் சமூகநீதிக்களத்தில் குதித்த இதே சங்கர் தான் ராம்குமார் படுகொலையை தற்கொலை என எழுதியவன்; தர்மபுரி இளவரசனின் சாதீயப் படுகொலையை தற்கொலை என்றவன்; துத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை, நக்ஸல்கள் இருந்த கூட்டம் அது, காவல்துறையினர் குறி தவறி, அதுவுமொரு ரவுண்ட் தான் சுட்டனர் என்று எழுதியவன்; வழக்கறிஞர் மஹாலஷ்மி குறித்து இவன் எழுதிய பாலியல் அவதூறு கட்டுரைக்கு ஆஜரான மூத்த வழக்கறிஞர் சங்கர சுப்புவை, நீதிபதிக்கு பணம் கொடுத்து நீதி வாங்குபவர் என்றும், அவரது மகன் கொல்லப்பட்ட வழக்கில் இவரே சந்தேகத்திற்குரிய நபர் என்றும் எழுதியவன்; அந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.டி.செல்வத்தை திமுககாரர் என்று, அவனது பெயரில் நேரடியாக நின்று தாக்காமல் எனக்கு தெரியாமல் என்னையும், இன்னொரு வழக்கறிஞரையும் பயன்படுத்திக் கொண்டவன்; அவ்வழக்கில் நாங்கள் இருவரும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்க அதுகுறித்து சிறிதும் குற்ற உணர்வு இல்லாமல், நான் வழக்கறிஞராகப் பதிவு செய்யக்கூடாது என்னும் எண்ணத்துடன் எனது சர்டிபிகேட்டுகளைக் கொடுக்க மறுத்தவன்; இவனால் அந்த வழக்கறிஞர் மூன்றாண்டுகள் டீபார் செய்யப்பட்டு திண்டாடிய பொழுதும், தன்னுடைய வழக்கு என முன்வந்து நிற்காமலிருந்ததோடு, இச்சிக்கலில் இருந்து மீள அவருக்கு எந்த வித உதவியும் செய்யாதவன்; இன்னும் என் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் இருக்க காரணமானவன்.
நீதிமன்றத்தை விமர்சித்த என்னுடைய செயல்பாடுகளுக்கு நான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்வேன். எனது பெயரில் ஒளிந்து கொண்டு வேலையைச் செய்யும் சுயநலவாதியின் வழக்கை நான் சுமக்கமுடியாதல்லவா? மேலும், சந்தேகத்திற்குரிய கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தை காதல்-தற்கொலை எனப் பேசியவன். இப்படி மனிதத்தன்மை இல்லாதவன் இன்று சமூகநீதி பேசி சிறை செல்ல, அவனுக்கு இங்கே சாமரம் வீசப்படுகிறது.
நீதிமன்றத் தீர்ப்பு விமர்சனம் செய்யப்பட வேண்டிய ஒன்றே. நீதிமன்றம் மக்களை ஒடுக்கும் அரசின் கருவி என்றே பார்க்கப்பட வேண்டும். ஆனால், தன் சுயநலத்திற்காக யாரையும் பழிவாங்கத் தயாராக நிற்கும் சங்கர் போன்ற சுய அரிப்பு பீடித்தவர்கள் மக்களால் நிராகரிக்கப்படக்கூடியன்.
அவனால் குடும்ப வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட நான், எல்லா ஒடுக்குமுறைகளையும் மீறி ஜனநாயக உரிமைக்காக குரல் கொடுத்து, களத்தில் நிற்கும் நான் – தனிநபர்வாதிகளை, மீடியா மோகிகளை அடையாளம் காணுங்கள் எனச் சொல்ல மேலும் தகுதி பெற்றுள்ளேன்.
– சவுக்கு சங்கரின் மனைவி நிலவுமொழி செந்தாமரை