சுனிதா வில்லியம்ஸ்: எவ்வளவு மன உறுதி? எத்துனை நெஞ்சுரம்?
வெளியே செல்லவேண்டும், ஊர் உலகம் சுற்றவேண்டும் என்று அடிக்கடி நாம் ஆர்வத்தால் உந்தப்பெறுவோம். அதனை நிறைவேற்றும்பொருட்டு எங்கேயாவது வெளியே சென்றால் எவ்வளவு விரைவில் அவ்வார்வம் வடியுமோ தெரியாது, விரைவில் வீடு திரும்பவேண்டும் என்று தவித்துப் போய்விடுவோம். இத்தகைய மனநிலைச் சுழற்சிக்கு யாரும் விலக்கில்லை. ஆனால், திங்கள் கணக்கில் விண்வெளியிலேயே இருந்துவிட்டு இப்போதுதான் திரும்புகிறார் சுனிதா !
நினைத்துப் பாருங்கள், கடந்த ஒன்பது திங்கள்களாக (286 நாள்கள்) விண்வெளியில் மிதவை நிலையில் இருந்தவாறே தொடர்ந்து தாக்குப் பிடித்திருப்பதற்கு எவ்வளவு மன உறுதி தேவைப்பட்டிருக்கும் ! அந்நிலையில்தான் உண்ணவும் உறங்கவும் செயல்படவும் வேண்டும் என்னும்போது ஒரு கட்டத்தில் என்னவெல்லாம் தோன்றியிருக்கும் ? தான் வாழநேர்ந்த விண்வெளியில் சுற்றிலும் மின்னும் அண்டச்சுடரொளிகளையே எத்தனை நாள்தான் பார்த்துக்கொண்டிருப்பது ? இரவு பகல் வேறுபாடில்லை, நாள் கிழமை இல்லை, நல்லது கெட்டது இல்லை, இவற்றை எதிர்கொள்ள எத்துணை நெஞ்சுரம் வேண்டும் ? எவ்வளவுதான் வேலை செய்ய முடியும் ? எவ்வளவுதான் ஓய்வெடுக்க முடியும் ? மாற்றிக்கொள்ளவே முடியாத தொடர்நிலைமை.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
சுனிதா வில்லியம்சின் அருஞ்செயல்முன் நம்முடைய அலுப்புகள், சலிப்புகள், சோர்வுகள், சோம்பேறித்தன்மைகள் முதலானவை சுக்குநூறாகச் சிதறி உடைய வேண்டும். தொடர்ச்சியாய் ஒரு செயலைச் செய்வதில் நமக்கு நேரும் இடைநிற்றல்கள், சுணக்கங்கள், விரைவுத் தணிவுகள், மாற்றெண்ணங்கள், பின்வாங்கல்கள் ஆகியனவற்றைப் பொசுக்கிப் போடவேண்டும். வெற்றியோ தோல்வியோ – நாம் முயலவேண்டியவை யாவும் எத்துணைப் பாதுகாப்பான சுற்றுப்புறச் சூழ்நிலைக்குள் வாய்த்துள்ளன என்று அருமை உணரவேண்டும்.
பன்னெடுநாள் விண்வெளி வாழ்க்கையினின்று தாய்க்கோள் திரும்பும் சுனிதாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை அவருடைய மனத்திண்மை, ஊக்கமுடைமை முதலான இவையே !
– கவிஞர் மகுடேசுவரன்