உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதா? மாற்று வழி என்ன?
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு ஒப்புதல் தராமலும் பல ஆண்டு காலம் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். சில கோப்புகளைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். குடியரசுத் தலைவரும் ஆண்டுக் கணக்கில் கிடப்பில் போட்டு வைத்தார். இந்த நிலை தொடர்ந்தது. ஆளுநரின் இந்த செயல்பாடுகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்குத் தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களை கிடப்பில் போட்டு வைக்க சட்டம் வகை செய்யவில்லை. முதல்முறை மாசோதவை அரசுக்கு அனுப்பி வைக்கலாம். அப்படி அனுப்பி வைக்கப்பட்ட மசோதா மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டால் ஆளுநர் இதற்கு அனுமதி வழங்கி ஆகவேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
மாநில அரசு 2ஆம் முறையாக அனுப்பி வைக்கப்பட்ட மசோதக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது சட்டவிரோதம் என்றும் குறிப்பிட்டிருந்தது. மசோதாக்கள் மீது ஒரு மாதத்தில் ஒப்புதல் அளிக்கவேண்டும். இரண்டாம் முறையாக அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்கள் மீது 3 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கால கெடுவை நிர்ணயம் செய்து தீர்ப்பு வழங்கியது. மேலும் ஆளுநர்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்கள் மீது, குடியரசுத் தலைவர் 3 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கால கெடுவை நிர்ணயம் செய்து தீர்ப்பில் கூறப்பட்டிருந்து.
இதன் அடிப்படையில் தமிழ்நாடு 2ஆம் முறையாக அனுப்பி வைத்த மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட 10 மசோதாக்களுக்கு உச்சநீதி மன்றம் தன் தனித்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டதாக உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு என்று விப் என்று சொல்லக்கூடிய தனித்த அதிகாரம் எதுவும் அரசியல்சாசனத்தில் வழங்கப்படவில்லை என்பதால் ஆளுநர் மற்றும் குடியரசுத்தலைவர் தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பில் கருத்து தெரிவித்திருந்தது.

உச்சநீதிமன்றம் திமுக தொடர்ந்த வழக்கில் வழங்கிய தீர்ப்பினால் ஒன்றிய பாஜக அரசும், கட்சியும் நிலைகுலைந்துள்ளது. என்ன செய்வது என்று கடந்த ஒருவார காலம் பாஜக தலைவர்கள் இரவில் சந்தித்து, கலந்துரையாடல் செய்து முடிக்க நள்ளிரவைத் தாண்டியும் நடந்துள்ளது. இந்தக் கலந்துரையாடலில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர்கள் ஜே.பி.நட்டா, பியோஸ்கோல் ஆகியோர் பங்கெடுத்துள்ளனர். அந்தக் கலந்துரையாடலில் திமுக தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செல்வதா? மறுசீராய்வு செய்வதா? என்று விவாதிக்கப்பட்டது.
மறுசீராய்வு செய்வது என்றால் அந்த மறுசீராய்வு மனு மீண்டும் எந்த நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்களோ அவர்கள்தான் மறுசீராய்வு மனுவை விசாரிப்பார்கள். அவர்கள் மறுசீராய்வு மனுவை ஏற்க மறுத்தால், மேல்முறையீடும் செய்யமுடியாது. மேல்முறையீடு செய்வது என்றால், தற்போதைய தீர்ப்புக்குத் தடை கொடுத்தால்தான் அரசு நிம்மதியாக இருக்கும். ஒருவேளை தடை கொடுக்காமல் வழக்கை உச்சநீதிமன்றம் ஏற்றது என்றால் அதனாலும் பாஜக அரசுக்கு எந்தப் பயனும் விளையப்போவதில்லை. என்ன செய்வது என்ற ஒருவார குழப்பத்திற்குப் பிறகு தலைமை அமைச்சர் மோடி, குடியரசுத் தலைவரை நள்ளிரவில் கடந்த சில தினங்களுக்கு முன் சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் நோக்கம் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, குறிப்பாக ஆளுநர், குடியரசுத் தலைவருக்குக் காலக்கெடு நிர்ணயம் செய்திருப்பதை நீக்கவேண்டும் என்ற பரிந்துரையைக் குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை அழைத்து வழங்கவேண்டும். அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற தீர்ப்பை 11 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வுக்கு அனுப்பி விசாரிக்கப்படவேண்டும் என்று குடியரசுத்தலைவர் தெரிவிக்கவேண்டும். அதுவரை தற்போது வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படவேண்டும் என்ற வகையில் சந்திப்பில் மோடி தரப்பில் குடியரசுத் தலைவருக்குக் கோரிக்கை வைக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர்,“திமுக தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்று அரசியல் சாசனத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
1. ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு தனித்த அதிகாரம் எதுவும் கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறைவேற்றுகின்ற தீர்மானங்களுக்கு ஒப்புதல் தருவதைவிட வேறு வழி இல்லை என்று கூறியுள்ளது. அப்படியானால் ஒரு மாநில அரசு நாங்கள் தனிநாடாக பிரிந்துபோகிறோம் என்று தீர்மானம் நிறைவேற்றினால் அதற்கும் ஆளுநர், குடியரசுத் தலைவர் ஒப்புதல் தரவேண்டுமா? ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்காத நிலையில் மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றமே அனுமதி வழங்கினால் பின் எதற்கு நாடாளுமன்றங்கள், சட்டமன்றங்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர்
2. இந்திய விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க அதிகப்பட்சம் 3 மாத கால கெடுவை உச்சநீதிமன்றம் நிர்ணயம் செய்துள்ளது. இந்திய அரசியல் சட்டம் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்குக் கால நிர்ணயத்தை அரசியல் சாசனத்தில் குறிப்பிடவில்லை. “As soon as possible’’ என்று எவ்வளவு சீக்கிரம் நடவடிக்கை எடுக்கமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றுதான் குறிப்பிட்டுள்ளது. உச்சநீதிமன்றம் அரசியல் சாசனத்தை மீறி ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்குக் காலக் கெடு நிர்ணயம் செய்திருப்பதன் மூலம் குடியரசுத் தலைவரைவிட உச்சநீதிமன்றம் தன்னைக் கருதிக் கொண்டுள்ளது என்பது இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்தை விளைவிக்கும்” என்று கூறியுள்ளார் தன்கர் இப்படி கூறியிருப்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உள்நோக்கம் கற்பிக்கின்றார். இவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட வேண்டும் என்று பல மூத்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள், முன்னாள் நீதிபதிகள், பல அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
திமுக தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற வழங்கிய தீர்ப்பை எதிர்கொள்ளமுடியாமல் விழிபிதுங்கிய நிலையில் பாஜக அரசும், பாஜக கட்சியும் உள்ளன. நேரடியான செயல்பாடுகளில் இறங்கினால் ஆபத்தில் முடியாலாம் என்ற அச்சத்தில் பாஜக அரசு குடியரசுத் தலைவரின் உதவியை நாடியுள்ளது என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எந்த மாதிரியான மேல்நடவடிக்கையை பாஜக அரசு மேற்கொள்ளபோகிறது என்பது நாளை (23./4.25) தெரிந்துவிடும் என்று டெல்லி தகவல்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. இதனால்தான் திமுக ஆட்சியை 2026இல் விரட்டியடிக்கவேண்டும் என்று முயற்சியைப் பாஜக மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக அதிமுகவோடு கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியில் நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகத்தையும் இணைக்க பெரும் முயற்சிகளையும் பாஜக மேற்கொண்டு வருகின்றது பாமக, தேமுதிக கட்சிகளையும் கூட்டணியில் இணைக்க திரைமறைவு பேச்சுகள் நடைபெற்று வருகின்றன என்ற தகவலும் நமக்குக் கிடைத்துள்ளது. நாளை என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
— ஆதவன்.