தொடரும் டாஸ்மாக் சாராய சந்தேக மரணங்கள்! மர்மம் விலக்குமா அரசு ?
தொடரும் டாஸ்மாக் சாராய சந்தேக மரணங்கள் ! மர்மம் விலக்குமா அரசு ?
கடந்த சில நாட்களில், டாஸ்மாக்கில் சரக்கு சாப்பிட்ட மூன்று பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்துள்ளனர். திருச்சி மாவட்டம் இலால்குடி வட்டத்தை சேர்ந்த தச்சன்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி, சிவக்குமார் ஆகியோர் அதே கிராமத்தில் செயல்படும் டாஸ்மாக் சாராயக் கடையில் மது அருந்திய நிலையில் அடுத்தடுத்து இறந்து போயுள்ளனர். சேலம் மாவட்டம் பூலாம்பட்டி பேரூராட்சியைச் சேர்ந்த கல்லுக்கடை பகுதியில் டாஸ்மாக் சாராயக் கடையில் மது வாங்கிக் குடித்த சேகர் என்பவர் உயிரிழந்துள்ளார். மது போதைக்கு அடிமையாகி மருத்துவ சிகிச்சைபெற்று வந்த நிலையில், மீண்டும் மது குடித்ததால்தான் இறந்துபோனார் என்றும் சொல்லப்படுகிறது.
ஏற்கெனவே, மே மாதத்தில் தஞ்சாவூர் கீழ் அலங்கத்தை சேரந்த மீன் வெட்டும் தொழிலாளர்கள் குப்புசாமி மற்றும் குட்டி விவேக் டாஸ்மாக் சரக்கு சாப்பிட்ட நிலையில் இறந்தனர். இதனைத்தொடர்ந்து ஜூனில் மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூரைச் சேர்ந்த பழனிகுருநாதன், பூராசாமி ஆகியோர் இறந்துபோயினர். இந்த நால்வர் இறப்பிற்கும் மதுவில் சயனைடு கலந்ததுதான் காரணம் என்பது உறுதிபடுத்தபட்டுள்ளது. ஆனால், சரக்கில் சயனைடு கலந்தது எப்படி என்பதுதான் இன்னும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படாமல் மர்மமாகவே நீடிக்கிறது.
முன்பகை, சொத்து தகராறு காரணமாக சரக்கில் சயனைடு கலந்து கொடுத்துவிட்டனர் என்று சிலரை கைது செய்து, வழக்கை முடிக்க போலீசு முனைவதாக குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது. டாஸ்மாக்கில் கரூர் சரக்கு என்று போலி சரக்கு விற்கப்படுவதாக, ஆதாரமற்ற தகவல் ஒன்று உலவிவருவதும் குறிப்பிடத்தக்கது.
பொதுவில், டாஸ்மாக்கில் விற்கப்படும் ”நல்ல சரக்கே” உடலுக்கும் உயிருக்கும் தீங்கு என்ற நிலையில், அதிலும் கள்ளச் சரக்கு கலந்து விற்கப்படுகிறதா? இல்லை, டாஸ்மாக்கிற்கு சப்ளை செய்யும் தனியார் சாராய ஆலைகளின் தயாரிப்பே குறைபாடுடையதாகத்தான் இருக்கிறதா? என்பதை அரசு தரப்பில்தான் தெளிவுபடுத்த வேண்டும். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
கள்ளச்சாராயம் குடித்து ஒரே நாளில் 20-க்கும் மேற்பட்டோர் இறந்துபோனால், அது தலைப்புச் செய்தியாகிறது. தமிழகம் தழுவிய அளவில் அனைவரின் கவனத்தையும் பெறுகிறது. முதல்வர் தலையிடுகிறார். கண்துடைப்பிற்காக சாராய ஊறல் கண்டுபிடிப்பு, அழிப்பு என நடவடிக்கைகள் இருக்கிறது. ஆனால், தமிழகத்தின் ஏதோ ஓர் பகுதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நிகழும் இதுபோன்ற டாஸ்மாக் மர்ம மரணங்கள் ஒரு பத்தி க்ரைம் செய்தியாக கடந்து போகிறது.
– ஆதிரன்







