திடீரென சரிந்து விழுந்த தேசிய நெடுஞ்சாலை உயர்மட்ட பாலத்தின் பக்கவாட்டுச் சுவர்!
திடீரென சரிந்து விழுந்த
தேசிய நெடுஞ்சாலை
உயர்மட்ட பாலத்தின்
பக்கவாட்டுச் சுவர்!
முறையாக பராமரிக்கப்படாததால் தஞ்சாவூர் அடுத்துள்ள செங்கிப்பட்டியில் தேசிய நெடுஞ்சாலை உயர்மட்ட பாலத்தின் பக்கவாட்டுச் சுவர் இன்று அதிகாலை திடீரென சரிந்து விழுந்தது.
எனவே இப் பாலத்தின் தரம் குறித்து முறையாக ஆய்வு செய்து முழுiமாக சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி அருகே அமைந்துள்ள உயர்மட்ட பாலம் கடந்த 2008ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழ மன்னன் ராஜராஜன் கட்டிய உலக பிரசித்திப் பெற்ற தஞ்சை பெரிய கோயில், நவக்கிரக கோயில்கள், வேளாங்கண்ணி மாதா கோயில், நாகூர் தர்கா போன்ற தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்கள் டெல்டா மாவட்டங்களில் அமைந்துள்ளதால், இத் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
இப் பாலத்தை பராமரிக்கும் பணியை மதுக்கான் என்ற பிரபல தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், முறையாக பராமரிக்கப்படாததால், செங்கிபட்டி பகுதியில் உள்ள இந்த உயர் மட்ட பாலத்தின் பக்கவாட்டுச் சுவர் இன்று அதிகாலை திடீரென சரிந்து விழுந்தது.
அதிர்ஷ்டவசமாக இவ்விபத்தில் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
எனினும் இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலத்தின் உறுதி குறித்து பொதுமக்கள் மனதில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இப் பாலத்தின் தரம் மற்றும் உறுதி குறித்து முறையாக ஆய்வு செய்து பாலத்தை முழுமையாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணிநேரம் வாகனப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
பாலத்தின் பக்கவாட்டுச் சுவரை சீரமைக்கும் பணியில் அத் தனியார் ஒப்பந்த நிறுவனத்தினர் ஈடுபட்டுள்ளனர்.