தமிழன்னை 2.O
‘இந்தியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும்’என சமீபத்தில் அமித்ஷா பேசியதை அடுத்து நாடு முழுக்க எதிர்கணைகளை தொடுத்து வருகின்றனர் மொழிப்பற்றாளர்கள்.
இந்நிலையில் பிரபல இசைய மைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்’ என்ற பாரதிதாசன் வரிகளை குறிப்பிட்டு அதனுடன் ‘ழ’கரத்தை தாங்கிய, வெள்ளுடை உடுத்தி, தலைவிரி கோலமாய் நர்த்தனம் ஆடும் ‘தமிழணங்கு’ என்ற தலைப்புடன் ஒரு பெண் படத்தை வெளியிட்டுள்ளார்.
புத்தக அட்டைப்பட வடிவமைப் பில் முன்னணியில் திகமும் எழுத்தாளர் சந்தோஷ் நாராயணன் வரைந்த இப்படம் குறித்து சமூக வலைதளங்களில் பலவிதமான கருத்துக்கள் வலையாடி வருகின்றன. இது குறித்து மூத்த பத்திரிகையாளர், ஏழுமலை வெங்கடேசன் என்பவரும் தனது முகநூல் பக்கத்தில் எழுதி வெளியிட்டுள்ளார். அதில், ஜாக்கெட் கூட போடாமல் தலைவிரி கோலமாய் தமிழன்னையா என்று ஒரு கும்பல். தமிழ்மொழி பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது வாழ்ந்தது என்கிறார்கள் அவர்கள்?
அந்தப் பல்லாயிரம் ஆண்டு காலத்திற்கு முன்பு, ஜாக்கெட் அதுவும் பார்டர் வைத்து தைக்கப்பட்ட ஜாக்கெட் எப்படி இருந்திருக்கும் என்று கேட்டால் பதில் இல்லை. சரி நீதான் தமிழன்னையை காட்டேன் என்றால் நான்கு கைகளோடு இசைக்கருவியை
மீட்டும் தோற்றத்தில் காட்டுகிறது அந்த கும்பல்.. நான்கு கைகள்..? மேற்கொண்டு வாயை ஊதி காட்டவே வேண்டாம்.. கம்பி கட்டிய இசைக்
கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு எவ்வளவு ஆண்டுகள் ஆகின்றன என்பது அவர்களுக்கே வெளிச்சம்.. முதலில் இந்த, மதவிவகாரத்தை எடுப்போம்..
1500 வருஷத்துக்கு முன்னாடி போனா ஒரு மதம் காணாமல் போகும்.. இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி போனா இன்னொரு மதம் காணாம போகும். அதுக்கும் முன்னாடி சில ஆயிரம் வருஷம் போனா எல்லா மதங்களும் காணாமல் போய்விடும்.
அப்புறம் இந்த மதவழிபாட்டு தொடர்பான நூல்கள்.. சாஸ்திரம் சம்பிரதாயம் புராணம் இதிகாசம், அப்புறம் முக்கியமா கடவுள்களின் உருவங்கள் எதுவாகட்டும்.. எல்லாமே பேச்சு மொழி, எழுத்து வடிவம் பெற்று அதன்பிறகு எழுதப்பட்டவை, படைக்கப்பட்டவை…
இன்றைய தேதியில் வாழ்கிற இளைய தலைமுறையிடம் ‘தமிழன்னை’ யார் சொன்னால் கையில் ஒரு ஆண்ட்ராய்டு செல்போனை கொடுத்துவிட்டு சுடிதாரோ இல்ல ஜீன்ஸ்சோ மாட்டி விட்டு போய்விடுவார்கள். அவரவர் வாழ்ந்த காலத்தில் அவரவருக்குத் தோன்றியதை எழுதி விட்டுச் சென்றார்கள். காலம் காலமா இது தான் நடக்கிறது, இனிமேலும் நடக்கப் போகிறது.
எழுத்தே இல்லாத காலத்திலும் மனிதன் வாழ்ந்தான்.. மொழியே இல்லாத காலத்திலும் மனிதன் வாழ்ந்தான்.. அவ்வளவு ஏன், மனிதகுலமே
இல்லாத பூமியும் இருந்திருக்கிறது. எதிர்காலத்தில் மனிதகுலம் இல்லாத பூமியும் இருக்கத்தான் போகிறது..
ஆதி மனிதன் இயற்கையை, இயற்கையின் பல்வேறு படைப்புகளை பயத்தோடு வணங்கி இருப்பான். மற்ற விலங்குகளிடமிருந்து தன்னை காத்து விசுவாசமாக இருந்த நாய்தான் உலகின் மிகப்பெரிய சக்தி என்று கூட நம்பி இருக்கலாம்..
ஆடையே இல்லாமல் உலவிய மனித குலத்தில் ‘கடவுள்கள்’ வடிவங்கள் எப்படி இருந்திருக்கும்? உலோகங்களே கண்டுபிடிக்காத காலத்தில் ‘கடவுள்’ உருவங்கள் எப்படி இருந்திருக்கும்? ஆடை, உலோகம், அணிகலன்கள் என மனிதகுலம் அடுத்த கட்டம் போகப் போகத்தான், தனக்குக் கிடைத்ததை வைத்து தனக்குத் தோன்றியவற்றிற்கு போட்டு அழகு பார்த்திருக்கும். சாதாரண ஏழுமலை வெங்கடேசன் ஆகிய எனக்கு இத்தனை கேள்விகள் பிறக்கின்றன. உங்களுக்கு இதைவிட இன்னும் அதிகமான, நுட்பமான கேள்விகள் தோன்றலாம். ஒருவருக்கும் இன்னொருவருக்கும் இடையிலான அறிவில் ஏது நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்?
தாத்தா காலத்தில் உத்தமபுத்திரன் என்றால் பி.யூ.சின்னாப்பா படம்.. அப்பா காலத்தில் உத்தம புத்திரன் என்றால் சிவாஜி படம்.. பேரன் காலத்தில் உத்தம புத்திரன் என்றால் தனுஷ் படம்.. கற்பிதங்களும் இப்படித்தான்.. நூற்றாண்டுக்கு நூற்றாண்டு விதவிதமாக சேர்ந்து கொண்டே இருக்கும். இப்போது உலகின் பொதுமறை என மிகப் பெரிய நூலாக திருக்குறளை கருதுகிறோம். அதில் சொல்லப்பட்டிருக்கும் அற்புதங்கள் ஏராளம். அதேநேரத்தில் திருக் குறளில் அபத்தங்கள் இல்லாமலும் இல்லை. உண்மையா இல்லையா?
தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை. அதாவது தெய்வத்தை கும்பிடாமல் புருஷனையே தெய்வமாக வணங்குபவள் சொன்னால் பெய்யுமாம் மழை.. இதெல்லாம் இன்றைய தேதிக்கு எவ்வளவு பெரிய காமெடி. ஆணும் பெண்ணும் சமம் என்ற கருத்தே இங்கு பணால்.
கணவன் என்பவன் தெய்வம் என்றாகிவிட்டால் மனைவி எப்படி அவனிடம் காமத்தை தணித்துக் கொள்ள முடியும்.. இருவருமே உணர்ச்சியும் உணர்வுகளும் கொண்ட சக உயிர்கள்.. இதிலென்ன புனித பில்டப்? அதனால் தான் மீண்டும் மீண்டும் சொல்கிறோம்.. பலவிதமான கற்பிதங்களில் நல்லவையும் இருக்கும். அபத்தமும் இருக்கும். இந்த காலத்திற்குப் பொருந்தக்கூடிய நல்லவற்றை எடுத்துக் கொண்டு போய்க் கொண்டே இருங்கள்.
நமக்கும் மேலே ஒரு சக்தி இருக்கிறது என்று நம்பிக்கையோடு நீங்களாகவே வணங்குங்கள் . தப்பில்லை. காரணம் சொந்தபந்தம் பணம் உள்பட எதுவுமே உதவ முடியாமல் தனியாளாய் தவிக்கும் நேரத்தில் ஏதாவது ஒரு சக்தி தன்னை காப்பாற்றும் என்று நம்புகிறான் பாருங்கள்.. அந்த நம்பிக்கையை சிதைப்பது நல்லதல்ல.
மானசீகமாக ஒருவனுக்கு உதவும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினால் அது இறை நம்பிக்கையாக கூட இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் “நான் சொல்கிற மாதிரி எல்லாம் வணங்கினால் உனக்கு பிரச்சனைகள் தீர்ந்து போகும்” என்று கற்பிதங்களை அடிப்படையாக வைத்துப் பிழைப்பு நடத்துபவர்களிடம் மாட்டிக் கொள்ளாதீர்கள். அவனுடைய போதனை பலிக்கக் கூடியது என்றால், உண்மை என்றால், அதனை அவன் செய்து பலன் பெற்றுக் கொள்ளாமல் அவன் ஏன் பணத்துக்காக உங்களிடம் பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கப் போகிறான்..?
இந்த உலகத்தில் பிறந்த உனக்கு, நீதான் முதன்மை.. உன்னுடைய உலகத்தில்தான், எல்லா விஷயங்களுமே.. உனக்கான உன் உலகம் நீ பிறந்ததில் இருந்தே தொடங்குகிறது. நீ மறைந்ததும் அதுவும் காணாமல் போய் விடுகிறது. மற்றவர்களுக்காக உலகத்தில் நீ நிரந்தரமானவன் அல்ல. 800 கோடி மக்கள் தொகை கொண்ட உலகத்தில் இன்னொருவனுக்கு உன்னுடைய வாழ்க்கை இல்லை. இன்னொரு வனின் வாழ்க்கை உனக்கும் இல்லை. உன் வாழ்க்கை ஒரே ஒரு பிரதிதான். நோ, ஃபோட்டோகாஃபி அதாவது ஜெராக்ஸ்.. படிக்கிற புத்தகம் ஆகட்டும், அடுத்தவன் உபதேசம் ஆகட்டும், அதில் உன்னுடைய அறிவை செலுத்தி ஆராய்ந்த பிறகே அடுத்த கட்ட நகர்வு வேண்டும்.. உனக்கானவற்றைத் தேர்ந்தெடுத்து கொண்டு, போய்க்கொண்டே இரு.. எல்லாவற்றுக்குமே அந்தக்காலம் முதலே நாங்கள் தான் மெயின் அத்தாரிட்டி என்று சொல்லும் கும்பலை கண்டு கொள்ளாதீர்கள். ஏற்கனவே சொன்ன விஷயங்களோடு சிலதை சேர்த்திருக்கிறோம் அவ்வளவுதான்