95 வயது காசாம்பு அம்மாள் – தமிழே.. உயிரே..
தமிழே.. உயிரே.. 95 வயது காசாம்பு அம்மாள் இறந்தார் என்பது எந்த வகையிலும் தொலைக்காட்சி சேனல்களுக்கோ, பத்திரிகைகளுக்கோ, சமூக வலைத்தளங்களுக்கோ முக்கியத்துவமான செய்தியல்ல. வயதான பெண்மணி உடல்நலிவு காரணமாக இறந்ததில் என்ன செய்தி இருக்கிறது என்று தான் கடந்து சென்றிருப்பார்கள்.
ஆனால், அவரது உடல் வைக்கப்பட்டிருந்த இல்லத்திற்கு சட்டமன்ற உறுப்பினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் வந்து மரியாதை செலுத்தியபோது, கவனத்தை ஈர்த்த செய்தியாக மாறியது.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் மருதுவாஞ்சேரிக்கு தி.மு.க.வின் மாவட்டக் கழகச் செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., மாநில நிர்வாகிககள், ஒன்றிய-நகர-பேரூர் கழக நிர்வாகிகள் வந்து, கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சார்பில் இரங்கலைத் தெரிவித்து, அம்மையாரின் உடலுக்கு மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தினர். 95 வயதில் இறந்த காசாம்பு அம்மையார், 60 ஆண்டுகளுக்கு முன் தன் ஒரே மகனை இழந்தவர்.
1964-65ஆம் ஆண்டு இந்தி ஆதிக்கத்திற்கு எதிராக தமிழ்நாட்டின் மாணவர்களும் இளைஞர்களும் நடத்திய எழுச்சிமிக்க போராட்டத்தின்போது, ‘தமிழ் வாழ்க.. இந்தி ஒழிக’ என்று முழக்கமிட்டபடி தனக்குத்தானே தீவைத்து உயிரை மாய்த்துக்கொண்ட முதல் இளைஞர் கீழப்பழுவூர் சின்னச்சாமி.
“உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம். தமிழ் மொழியைப் பாதுகாத்திட உழைப்போம்.. அதற்காக உயிர்வாழ்வோம்” எனப் பேரறிஞர் அண்ணா போன்ற தலைவர்கள் இளைஞர்களையும் மாணவர்களையும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர்.
ஆனாலும், தங்கள் தமிழுணர்வை வெளிப்படுத்தும் வகையிலும், இந்தி ஆதிக்கத்திற்கு எதிராகவும் சின்னச்சாமி வரிசையில், கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, விராலிமலை சண்முகம், சத்தியமங்கலம் முத்து, அய்யம்பாளையம் வீரப்பன், பீளமேடு தண்டபாணி உள்ளிட்டோர் பொதுமக்கள் கூடும் இடங்களில் தங்கள் உடலுக்கு தீவைத்துக்கொண்டு, ‘தமிழ் வாழ்க.. இந்தி ஒழிக’ என முழக்கமிட்டபடி உயிரை ஈந்தனர்.
விஷம் குடித்து மாண்டவர்களும் உண்டு. மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் சிவகங்கை ராஜேந்திரன் தன் மார்பில் குண்டுகளைத் தாங்கி மடிந்தார். துணை ராணுவத்தின் வேட்டையில் கோவை மாவட்டத்தில் கொல்லப்பட்ட இளைஞர்கள் ஏராளம்.
தமிழ் எங்கள் உயிருக்கும் மேல் என்ற உணர்வுடன் மொழிப்போரில் ஈடுபட்ட மாணவர்களில், தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட வரிசையில் கடைசியானவர், மயிலாடுதுறை (மாயவரம்) மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரி மாணவரான சாரங்கபாணி. தான் படித்த கல்லூரி வாசலிலேயே, ‘இந்தி ஒழிக.. தமிழ் வாழ்க’ என முழக்கமிட்டபடி, உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டு, தனக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்த பேராசிரியர்களின் கண் முன்பாகவே தமிழுக்கு உயிர் தந்தவர். தனது மரண வாக்குமூலத்திலும், ‘இந்தி ஒழிக.. தமிழ் வாழ்க’ என்றவர்.
தமிழுக்குத் தன்னைத் தந்த அந்த சாரங்கபாணியை உலகுக்குத் தந்த தாய்தான் காசாம்பு அம்மாள். ஒற்றை மகனை மொழிப் போர்க்களத்திற்குக் கொடுத்துவிட்டு, அவன் நினைவுகளை மட்டுமே சுமந்தபடி, சொந்த ஊரான மருதுவாஞ்சேரியில் வாழ்ந்த அந்த அம்மையாருக்கு உள்ளூர்க் கழகத்தினர் ஆதரவாக இருந்தனர். அவர் மறைவுக்கு, முதலமைச்சரின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களும் மற்றவர்களும் சென்று மரியாதை செலுத்தினர்.
கீழப்பழுவூர் சின்னசாமியும்-விராலிமலை சண்முகமும் திருச்சி பாலக்கரையில் உள்ள மேம்பாலத்தின் பெயர் தாங்கி நிற்கிறார்கள். சென்னையில் (விருகம்பாக்கம்) அரங்கநாதன் பெயரில் சைதாப்பேட்டையில் சுரங்கப்பாதை (சப்-வே) உள்ளது.
தியாகராயநகருக்கும் மாம்பலத்திற்கும் இடையில் துரைசாமி பாலம் என்று திரிபடைந்துள்ள சுரங்கப்பாதைக்கு சூட்டப்பட்ட பெயர் (கோடம்பாக்கம்) சிவலிங்கம் சுரங்கப்பாதை. மாயவரம் சாரங்கபாணிக்கு மயிலாடுதுறையில் நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது.
மொழிப் போர்த் தியாகிகளுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கியது தி.மு.க அரசு. அவர்களின் மரணத்திற்கும் மரியாதை செலுத்தி, இன்றைய தலைமுறைக்கு அவர்களை நினைவுபடுத்தியிருக்கிறது.
சாரங்கபாணிகளும் அவரைப் போன்ற தியாகிகளை ஈன்ற காசாம்பு அம்மையார்களும் தமிழ் உள்ளவரை வரலாற்றில் நிலைத்திருப்பார்கள்.
Govi Lenin
திராவிட எழுத்தாளர்